காவலர்களுக்கு ரூ.10,000; ஆசிரியர்களுக்கு ரூ.5,000 சம்பளம்:என்னக் கொடுமை சார்...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2012

காவலர்களுக்கு ரூ.10,000; ஆசிரியர்களுக்கு ரூ.5,000 சம்பளம்:என்னக் கொடுமை சார்...!

தலைப்பை படித்ததும், "என்னக் கொடுமை சார்...!' என, நினைக்கத் தோன்றும். "இப்படியெல்லாம் கூட நடக்குமா?' என, நினைக்கும் அள விற்கு, அரசுத் துறைகளில் முரண்பாடான நடவடிக்கைகள் அவ்வப்போது நடக்கும். அதற்கு, இது ஒரு உதாரணமாக இருக்கும்."தற்காலிகப் பணி, அதுவும் ஒரு ஆண்டுக்கு மட்டுமே! தலைமை ஆசிரியர் அனுமதி இல்லாமல், விடுமுறை போடக் கூடாது; தலைமை ஆசிரியர் உத்தரவிட்டால் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும்' என்பது உட்பட பல விதிமுறைகள் மற்றும் கெடுபிடிகளுடன் நியமிக்கப்பட்டுள்ள, 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளம் வெறும் 5,000 ரூபாய்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில், விரைவில் நியமிக்கப்பட உள்ள காவலர்களுக்கு நிரந்தரப் பணியுடன், மாதச் சம்பளமாக சுளையாக 10,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் கடும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது."காவலர்களுக்கு இருக்கும் மரியாதை கூட, எங்களுக்கு இல்லையே' என, பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஒருவர் வேதனைப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ள இவர், பகுதி நேர ஆசிரியர்கள் நிலையைப் பற்றி கேட்டதுமே, புலம்பித் தள்ளினார். அவர் கூறியதாவது:ஏற்கனவே பார்த்த வேலையை உதறிவிட்டு, அரசு வேலையாக உள்ளதே என, தற்காலிக வேலையாக இருந்தாலும், வருங்காலத்தில் ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த வேலையில் சேர்ந்தேன். பகுதி நேர வேலை:மற்றும் குறைந்த சம்பளம் ஆகிய இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில்கொண்டு, 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள்,"போஸ்டிங்' போட்டிருக்கலாம். ஆனால், எனக்கு சென்னை புறநகரில் இருந்து, 25 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு பள்ளியில்,"போஸ்டிங்'.காலை 9 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என கூறுகின்றனர். வேலையில் சேர்ந்த மூன்று நாளும், நான்,"லேட்'டாகத் தான் செல்ல வேண்டியநிலை. நான் மட்டுமல்ல, பல ஆசிரியர்களுக்கும், இதேபோல் தொலைவில் உள்ள பள்ளியில் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலையில் சேர்ந்த மூன்றாவது நாளே, "ஆசிரியர் வராத வகுப்புகளுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டும்' என்று கூறுகின்றனர். எங்களுக்கு சம்பந்தமில்லாத பாடங்களை நாங்கள் எப்படி எடுக்க முடியும்? ஓவியம், தையல், உடற்கல்வி என ஆசிரியர்களை தேர்வு செய்துவிட்டு, வேறு பாடங்களை எடுங்கள் என்றால், எப்படி எடுக்க முடியும்? இடைநிலை ஆசிரியர் டிப்ளமோ அல்லது பட்டதாரி ஆசிரியர் படிப்பை படிக்காத எங்களால், எப்படி அந்தப் பாடங்களை நடத்த முடியும்? இவ்வாறு அவர் புலம்பினார்.மாணவர்களை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையிலும், குறைந்த சம்பளத்திலும் நியமனம் செய்யும் போக்கு அதிகரித்தால், இது ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை கல்வித்துறையின் மனசாட்சிக்கே விட்டு விட வேண்டியது தான்! "பாடம் எடுக்கச் சொல்லக் கூடாது':பகுதி நேர ஆசிரியர்களின் பிரச்னை குறித்து, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லமிடம் கேட்டபோது,""பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, வீட்டுக்கு அருகில் பணி நியமனம் செய்துள்ளோம். இந்த விவகாரத்தில், அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. பகுதி நேர ஆசிரியர்களை, பிற பாடங்கள் எடுக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கூறக் கூடாது; அது தவறு. எந்த நோக்கத்திற்காக பகுதி நேர ஆசிரியர்களை நியமித்தோமோ, அந்தப் பணியை மட்டும் தான் அவர்கள் செய்ய வேண்டும்'' என்றார். நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி