மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் பிளஸ் 2 மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2012

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் பிளஸ் 2 மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக விடைத்தாள் நகலை முழுமையாக பாட ஆசிரியர்களிடம் கொடுத்து ஆராய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மறுமதிப்பீடு என்பது ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணை மட்டும் ஆராய்வதில்லை. முழு விடைத்தாளிலும் வழங்கப்பட்ட மதிப்பெண்ணை ஆராய்வது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி சுமார் 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகலைப் பார்த்த பிறகு, மறுமதிப்பீட்டுக்கு 4 ஆயிரம் பேர் வரை விண்ணப்பம் செய்தனர். மறுமதிப்பீட்டின்போது பல மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் மாறுதல் ஏற்பட்டது. பல மாணவர்களுக்கு 8 மதிப்பெண்கள் வரை கூடுதலாகக் கிடைத்தாலும், பல மாணவர்களுக்கு 12 மதிப்பெண்கள் வரை குறைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பொறியியல், மருத்துவ ரேங்க் பட்டியலில் இடம்பெற்றிருந்த மாணவர்கள் பல ஆயிரம் இடங்கள் பின்னோக்கிச் செல்லவும் நேரிட்டது. பிளஸ் 2 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியது: தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காகவும், விடைத்தாள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதை மாணவர்கள் அறிந்துகொள்வதற்காகவும் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கும் முறை அமலில் உள்ளது. விடைத்தாள் நகலில் குறிப்பிட்ட பக்கங்கள் திருத்தப்படவில்லையென்றாலோ, சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லையென்றாலோ மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்குவிண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, தங்களது விடைத்தாளை அந்தப் பாடங்களுக்கான ஆசிரியர்களிடம்வழங்க வேண்டும். விடைத்தாளில் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதை அவர்கள் கணக்கிட வேண்டும். அதேபோல, பிற கேள்விகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணையும் அவர்கள் கணக்கிட வேண்டும். அந்த விடைத்தாளில் உள்ள விடைகள் அனைத்தும் தவறில்லாமல் சரியாக உள்ளனவா என்பதை அந்த ஆசிரியரும், மாணவரும் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக விடைத்தாளை ஆராய்ந்த பிறகு அவர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் மதிப்பெண், தவறான விடைகளுக்கு கழிக்கப்படும் மதிப்பெண் ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். அதன்பிறகும், கூடுதலாக மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே அவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏனென்றால், உயிரியல் போன்ற முக்கியப் பாடத்தில் 2 மதிப்பெண் அதிகமாகக் கிடைத்தால் ரேங்கில் முன்னேற்றம் கிடைக்கும் என்று ஒரு மாணவர் விண்ணப்பிக்கலாம். அந்த மதிப்பெண் மாணவருக்குக் கிடைத்தாலும், பிற விடைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் குறைந்தால் ஒட்டுமொத்தமாக அவரது மதிப்பெண் குறைந்துவிடக் கூடும். எனவே, விடைத்தாள் நகலை முழுமையாக ஆராயாமல் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. மறுமதிப்பீட்டில் வழங்கப்படும் மதிப்பெண்ணே இறுதியானது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி