ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2012

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்

பி.எட்., - ஆசிரியர் பயிற்சி டிப்ளமாஉள்ளிட்ட படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகள்; 600 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரே சீரான வகையில் கட்டணம் இல்லை. கல்லூரிகளுக்கு ஏற்றாற்போல், வெவ்வேறான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.முதன் முறையாக இதை முறைப்படுத்தி, படிப்பிற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை நிர்ணயித்து, தமிழக அரசுநேற்று அறிவித்தது. சுயநிதி தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்து, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் நேற்று மாலை அறிவித்தார்.அவர் கூறியதாவது: சுயநிதி தனியார் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கல்லூரிகளுக்கு, 2012-13ம் கல்வியாண்டிற்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, அனைத்து வகை கல்வியியல் கல்லூரிகளிடம் இருந்து, வரவு மற்றும் செலவு விவரங்களை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்கப்பட்டது.இதில், 788 கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் கல்லூரிகளிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டன. இந்த ஆவணங்களை, குழு ஆய்வு செய்தது. ஆவணங்களை அனுப்பாத கல்லூரிகள் மற்றும் தணிக்கையாளரின் ஆய்வறிக்கைகள் அனுப்பப்படாத கல்லூரிகளுக்கு, நேரில் சென்று ஆய்வு செய்ய, கல்வி கட்டண நிர்ணயக்குழு, 121 ஆய்வுக் குழுக்களை அமைத்தது.இக்குழுக்கள், சம்பந்தபட்ட கல்லூரிகளுக்கு, நேரில் சென்று ஆய்வு செய்து, ஆய்வறிக்கைகளை குழுவிடம் சமர்பித்தது. மேலும், பொது மக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.இதன் அடிப்படையில், கட்டண நிர்ணயக்குழு, பல்வேறு கால கட்டங்களில் கூடி, கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசித்து, தற்போது புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளுக்கு, சீரான கல்விக் கட்டணம் இதற்கு முன் இல்லை. தற்போது தான், முதல் முறையாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், 2012- 13, 2013- 14, 2014- 15 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கு பொருந்தும்.குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி பல்கலையிடமோ, அரசிடமோ, குழுவிடமோ பெற்றோர் அல்லது மாணவர் புகார் அளிக்கலாம். சம்பந்தபட்ட கல்லூரி மீது விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.கட்டணம் நிர்ணயம் தொடர்பான அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்ற, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் வீரமணி, "அதிகக் கட்டணம் வசூல், உள்கட்டமைப்பு வசதியின்மை, விதிமுறைகளை கடைபிடிக்காதது, தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், நான்கு கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடைபெறாது" என்றார்.ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி; சேலம் மாவட்டம் பாரதியார் கல்வியியல் கல்லூரி; சென்னை மாவட்டம் மியாசி கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி