தனியார் பள்ளி கட்டணம் வசூல் புகார் தெரிவிக்க கல்வி அதிகாரிதலைமையில் சட்டப்பூர்வ குழு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2013

தனியார் பள்ளி கட்டணம் வசூல் புகார் தெரிவிக்க கல்வி அதிகாரிதலைமையில் சட்டப்பூர்வ குழு.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சட்டப் பூர்வ குழுக்களை அரசுஅமைத்துள்ளது.தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 2010ம் ஆண்டில் தனியார்பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, அந்தந்த பள்ளிகளின் வரவு செலவுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்தது. குழு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும்,கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளி கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன.ஆனால், தனியார் பள்ளிகளில் அந்த கட்டணங்களை வசூலிப்பதாக கூறினாலும், வெவ்வேறு வகையான வசதிகளை காட்டி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். இது குறித்து அவ்வப்போது கட்டண குழுவிடம் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்டண குழுவிடம் நேரில் வந்து புகார் தெரிவிக்க பெற்றோர் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை.மேலும், பெற்றோர் சங்கங்களும் ஒன்று திரண்டு, சில கோரிக்கைகளைஅரசுக்கு தெரிவித்தன. அதில் ஒன்று, மாவட்ட வாரியாக புகார் தெரிவிக்கும் பிரிவுகளை தொடங்க வேண்டும் என்பது. இதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு தனியார் பள்ளிகள் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி சட்டப் பூர்வமான குழுக்களை அமைக்க அரசு உத்தரவிட்டது.இதன்படி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தலைவர்களாக கொண்டு இந்த குழுக்கள் செயல் படும். அந்த குழுவில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்ட தலைமை இடத்தில் செயல்படும் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட தலைநகரில் செயல்படும் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 7 பேரை உள்ளடக்கி அந்தந்த மாவட்டத்தில் குழுக்கள் செயல்படும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3ம் சனிக்கிழமைகளில் இந்த குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்.தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்த புகார்களை பெற்றோர் மேற்கண்ட குழுவின் தலைவராக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். பெறப்படும் புகார்களின் பேரில்சம்மன் அனுப்பி குறிப்பிட்ட பள்ளி முதல் வர் மற்றும் பெற்றோர் என இரு தரப்பினரிடமும் விசாரித்து, அதன் அறிக்கையை சென்னையில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது கட்டணக் குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி