தமிழக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களின் நிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2013

தமிழக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களின் நிலை

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்ற பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 16,549 சிறப்பு ஆசிரியர்களை நியமித்தது அரசு. தொகுப்பூதியமாக மாதத்திற்கு 5,000 ரூபாய் பெறும் இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோருகின்றனர். கடலூர் மாவட்டத்தில், பணி நியமனம் பெற்ற 690 சிறப்பு ஆசிரியர்களின் தற்போதைய நிலையையும், அவர்களது கோரிக்கைகளையும் பார்க்கலாம்.சிறப்பு ஆசிரியர்கள் தவிப்பு:தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பணி நியமனம் பெற்ற சிறப்பு ஆசிரியர்கள், மாதத்திற்கு 12 அரை நாட்கள் வேலை செய்து, 5,000 ரூபாயை தொகுப்பூதியமாக பெறுகின்றனர். கடந்த ஏப்ரலில்மூன்று வாரங்கள் மட்டுமே வேலை நாட்கள் என்பதால் 3,750 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறைக் காலமான இந்த மே மாதத்திற்கு அதுவும் கிடையாது என்பதால் சிறப்பு ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.பணி நிரந்தம் செய்ய கோரிக்கை:புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை, கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் சிறப்பு ஆசிரியர்கள் பல முறை மனு அளித்துள்ளனர். பள்ளி விடுமுறை நாட்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது, பணி நிரந்தரம் உள்ளிட்ட பலகோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.பள்ளிக் கல்வித்துறை விளக்கம்:இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தமிழக அரசின் ஆணை நிறைவேற்றப்படுகிறது, ஒப்பந்த விதிகளின் படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுகிறது என்ற பதில் கிடைத்தது.

1 comment:

  1. மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
    தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக. ராமு தலைமை வகித்தார்.
    கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு என்பதை சிறப்பு அரசாணை மூலம் அறிவித்து உடன் பணி வழங்க வேண்டும்.
    மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பழைய விதிமுறைகளின்படி 2010-க்கு முன்புஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து பணிவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
    புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.கே. சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    முன்னதாக, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார்.
    அரியலூர் மாவட்டத் தலைவர் இளவரசன் நன்றி கூறினார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி