கல்வி அதிகாரிகள் கெடுபிடி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2013

கல்வி அதிகாரிகள் கெடுபிடி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வி.

முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் சேர்க்கும் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மாதத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள், உள்ளிட்ட அகமதிப்பீட்டு தேர்வுகளை ஆங்கிலத்தான் எழுத வேண்டும் என்று உயர்கல்வித் துறை கடந்த மாதம் அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் கல்வியாளர்கள், தமிழார்வலர்கள்,பல்வேறு அமைப்பினர் எதிர்த்து குரல் கொடுத்தனர்.இதையடுத்து ஆங்கிலத்தில் எழுத தேவையில்லை. தமிழிலேயே தேர்வுகளை எழுதலாம் என்று அரசு அறிவித்தது. இந்த பரபரப்பு அடங்கியுள்ள நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை அந்த பணியை கையில் எடுத்துள்ளது. தொடக்க கல்வி துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்படும் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் தான் சேர்க்க வேண்டும். பிறகுதான் தமிழ் வழிக்கல்வியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஆரம்ப பள்ளிகளில் முதல் வகுப்பில் புதிதாக குழந்தைகள் சேர்க்கப்படும்போது, 20 குழந்தைகள் சேர்ந்தால் அவர்களை ஆங்கிலவழியில் சேர்க்க வேண்டும். அதற்கு மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்தால் அவர்களை தமிழ் வழியில் சேர்க்க வேண்டும். அதேபோல நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பில் புதிதாக 20 பேர் சேர்ந்தால் அவர்களை முதலில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துவிட்டு அதற்கு பிறகு மற்ற மாணவ மாணவிகளை தமிழ் வழிக்கல்வியில் சேர்க்க வேண்டும் என்று தொடக்க கல்வித் துறையின்கீழ் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களை வற்புறுத்தி வருகின்றனர்.இந்த உத்தரவுகள் வாய் மொழியாவோ, எழுத்துபூர்வமாகவோ அல்லாமல் செல்போன் வழியாக எஸ்எம்எஸ் அனுப்பி வற்புறுத்துவதாக தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்ட எந்த ஒரு கல்விக் குழுவும் ஆங்கில வழிக் கல்வி வழங்க பரிந்துரை செய்யவில்லை.தேசியக் கல்வி ஏற்பாடு (என்சிஎப்) 2005ல், பயிற்று மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 2009ல் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூட கூடுமானவரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பிரிவு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது மேற்கண்ட கொள்கைகளுக்கு எதிரானது. ஆங்கிலமே படிக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. பாட மொழியாக மட்டும் ஆங்கிலத்தை நடத்த வேண்டும். அதைவிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி என்பது ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நிலையை அரசு உருவாக்க வேண்டியதில்லை.அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேருவதே கடினமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் முயற்சியில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகிறோம். ஆனால் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மா வட்ட கல்வி அதிகாரிகள், எஸ்எம்எஸ் அனுப்பி குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க வற்புறுத்துகின்றனர். பெற்றோர் சம்மதித்தால் தான் இதை நாங்கள் செய்ய முடியும். பல பெற்றோருக்கு ஆங்கில வழிக்கல்வி பற்றி தெரியவில்லை. இதனால் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ப்பது கடினமாக உள்ளது.தமிழ் வழியில் சேரவே குழந்தைகள் வராத நிலை யில் அவர்களை ஆங்கில வழியில் சேர்க்க கூறுவதால் நாங்கள் சிரமப்படுகிறோம். குறிப்பாக 20 குழந்தைகள் சேர்ந்தாலே அவர்களை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க வற்புறுத்துகின்றனர். இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தை கூட்டி விவாதித்த பிறகே முடிவு எடுக்க முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி