பள்ளியில் செயல்படும் அரசுக் கல்லூரி: பள்ளி மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2013

பள்ளியில் செயல்படும் அரசுக் கல்லூரி: பள்ளி மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறி.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கடந்த இரண்டு ஆண்டாக கட்டிட வசதியில்லாமல், மாணவர்கள் அவதிப்படும் நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இட வசதியின்மை காரணமாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரிகள் என, 80கல்லூரிகள் இயங்கி வருகின்றன.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி முதல் புதிய கலை அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட ஐந்து துறைகள் உள்ளன."பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக கல்லூரி செயல்படும். பின்னர் ஒரு ஆண்டுக்குள் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்" என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கல்லூரி துவங்கிய போது உறுதி கூறினார்.ஆனால், இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாமாண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடக்கும் நிலையில், கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும்எடுக்கவில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் இரண்டு ஆண்டாக கிடப்பில் உள்ளது.இக்கல்லூரியில் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள், 220 பேரும், மாணவியர்கள் 230 பேரும் சேர்த்து 450 பேர் பயின்று வருகின்றனர். கல்லூரி முதல்வர் உள்ளிட்ட, 15 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். போதிய இடவசதி இல்லாததால், அரசுமேல்நிலைப்பள்ளியில், ஏழு அறைகளும், அரசு தொடக்கப் பள்ளியில் ஆறு அறைகளும் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டு வகுப்புகள் நடக்கிறது.இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் உட்கார வழியின்றி திறந்த வெளியில் உட்கார்ந்து படிக்கும் அவல நிலையில் உள்ளது. மேலும், அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகளை நடத்தி விட்டு, பேராசிரியர்கள் அடுத்த இரண்டாவது பாட வேளைக்கு அரசு தொடக்கப்பள்ளிக்கு ஓடவேண்டிய நிலை உள்ளது.பேச்சளவில் மட்டுமே டிஜிட்டல் நூலகம், என்.எஸ்.எஸ்., ஆகியவை உள்ளது. வசதியில்லாததால், வழியில்லாமல் விழி பிதுங்கி கல்லூரி நிர்வாகம் உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு கழிப்பிட வசதி முழுமையாக இல்லை.இந்தாண்டு மேலும் 250 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் வருகை எப்போது? எங்கே அமர வைப்பது? என கல்லூரி நிர்வாகமும், அரசு பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி