உதவி பேராசிரியர் பணி: விண்ணப்பம் பெற அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2013

உதவி பேராசிரியர் பணி: விண்ணப்பம் பெற அவகாசம் நீட்டிப்பு.

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறும் தேதியை, ஆக., 12ம் தேதி வரை நீட்டித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர்களுக்கான, 1,093 காலிப் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த, மே மாதம், அறிவிப்பாணை வெளியிட்டது. "கடைசி தேதி, ஜூலை, 26ம் தேதி" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதன்படி, முதுகலை பட்டத்தில், 55 சதவீதம் மதிப்பெண் மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் தொடர்பாக, பிறப்பித்த உத்தரவில்,"ஸ்லெட்" அல்லது "நெட்" அல்லது பிஎச்.டி., தகுதி பெற்ற பின், உள்ள பணி அனுபவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், சந்திரசேகரன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், "பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி, பணிக்கான கல்வித் தகுதியை, பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளபடி, நான் நியமிக்கப்பட்டேன். என் பணி அனுபவத்தை, 1986ம் ஆண்டு முதல், கணக்கில் கொள்ள வேண்டும்" என கூறப்பட்டது.இம்மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: அரசு அல்லது பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ளபடி, யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, கல்வித் தகுதியை ஒரு ஆசிரியர் பெற்றிருந்தால், அதையே ஆசிரியர் பணி அனுபவத்திற்கு, அளவுகோலாகக்கொள்ள வேண்டும்.குறிப்பிட்ட கால கட்டத்தில், அப்போது இருந்த கல்வித் தகுதியை, ஆசிரியர் பணிக்கான அனுபவத்திற்கு, மதிப்பெண் வழங்க பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக, பத்திரிகைகள் மூலம், தெளிவான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தர விட்டிருந்தார்.கடந்த, 12ம் தேதி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவில், ஒரு குறிப்பிட்ட பகுதியை நீக்கக் கோரி, இரு தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. அரசு தரப்பில், கூடுதல் அரசுபிளீடர் சஞ்சய் காந்தி ஆஜரானார்.இதையடுத்து, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: இரு தரப்பிலும் சுட்டிக்காட்டியபடி, குறிப்பிட்ட பகுதி (2012ம்ஆண்டு, டிசம்பர், 31ம் தேதிக்கு முன், எம்.பில்., முடித்தவர்கள்) நீக்கப்படுகிறது. ஆசிரியர் அனுபவம் குறித்து, திருத்தங்கள் பல வெளியிடப்பட்டதால், விண்ணப்பங்களை பெறுவதற்கான,கடைசி தேதியை, இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.அதன்படி, ஆக., 12ம் தேதி வரை, விண்ணப்பங்களை பெற வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு குறித்தும், ஆசிரியர் அனுபவம் குறித்தும், தேவையான அறிவிப்பாணையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி