மதிய உணவை கண்காணிப்பது ஆசிரியர்கள் வேலை இல்லை : அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2013

மதிய உணவை கண்காணிப்பது ஆசிரியர்கள் வேலை இல்லை : அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியர்களின் வேலை பாடம் நடத்துவதே தவிர மதிய உணவை கண்காணிப்பது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் தொண்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் மதிய உணவை தயாரிப்பது ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி முதல்வர்களும் ஆசிரியர்களும் மதிய உணவு தயாரிக்கும் பணியை மேற்பார்வையிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆசிரியர்களின் பணி, பாடம் நடத்துவது மட்டும்தான்.மதிய உணவு தயாரிப்பதை மேற்பார்வையிடுவது அல்ல என்றும் மறுஉத்தரவு வரும்வரை, தொண்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் மதியஉணவு தயாரிக்கும் பணி நடக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே பீகாரில் 23 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டு பலியான சம்பவத்திற்கு அடுத்து மதிய உணவு திட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அங்குள்ள ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.சுமார் 3 லட்சம் பள்ளி ஆசிரியர்களின் இந்த அறிவிப்பால் பீகார் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு தங்கள் மீது பழிப் போடப்படுவதாக தெரிவித்துள்ள ஆசிரியர்கள், இதனால் தங்கள் கல்வி பணி பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த முடிவை மாநில துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் சர்மா பாட்னாவில் தெரிவித்துள்ளார்.மதிய உணவு திட்டத்தை ஏதாவது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு பீகார் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்களின் முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். 72000 பள்ளிகளில் செயல்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பது இயலாத காரியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி