சத்துணவு திட்டத்துக்கு தரமான அரிசி வினியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2013

சத்துணவு திட்டத்துக்கு தரமான அரிசி வினியோகம்.

சத்துணவு திட்டத்திற்கு வழங்கப்படும் உணவு பொருட்களை, பல கட்ட சோதனைக்கு பின்னரே வினியோகம் செய்ய, உணவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம், 53 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.சத்துணவு திட்டத்துக்குத் தேவையான, அரிசி, பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் வினியோகம் செய்கிறது. இதில், அரிசி இலவசமாகவும், மற்ற பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.நுகர்பொருள் வாணிப கழகம் நியமித்துள்ள, தனி போக்குவரத்து ஒப்பந்ததாரர் மூலம், சேமிப்பு கிடங்குகளில் இருந்து, மாதந்தோறும் பள்ளிகளுக்கு, உணவு பொருட்கள் அனுப்பப்படுகின்றன.சில தினங்களுக்கு முன், பீகார் மாநிலம், சரன் மாவட்டத்தில், விஷம் கலந்த மதிய உணவை சாப்பிட்ட, 23 குழந்தைகள் பலியாயினர். இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில், மிகப் பெரிய அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியது.இதையடுத்து, "பள்ளிகளில் வழங்கப்படும் உணவை, தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின் தான் மாணவர்களுக்கு, வழங்க வேண்டும்"என தமிழக அரசு உத்தரவிட்டது. இது போன்ற காரணங்களால், சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படும் உணவு பொருட்களை, பல கட்ட சோதனைக்கு பின்னரே, பள்ளிகளுக்கு வினியோகம் செய்ய உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கலெக்டர் மூலம் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில், சத்துணவு திட்டத்துக்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. சேமிப்பு கிடங்கில் இருந்து, அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்டவை, தீவிர சோதனைக்கு பின்னரே, சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படும்" என்றார்.நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து, மாதம் ஒன்றுக்கு, அரிசி, 14 ஆயிரம் டன், துவரம் பருப்பு, 2,200 டன், பாசி பயறு மற்றும் கறுப்பு கொண்டை கடலை தலா, 287 டன், பாமாயில், 171 டன் வினியோகம் செய்யப்படுகிறது.பள்ளிகளில், செவ்வாய் கிழமை தோறும், வேகவைத்த பாசி பயறு அல்லது கறுப்பு கொண்டை கடலை, ஒரு குழந்தைக்கு, 20 கிராம் என்ற வீதத்தில் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி