ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி முகாமில் மக்கள் வெள்ளம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி முகாமில் மக்கள் வெள்ளம்.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோரை ஊக்குவிக்கும் வகையில், "தினமலர்" நாளிதழ், இலவச டி.இ.டி., பயிற்சி முகாமை, தி.நகரில் நேற்று நடத்தியது. இதில், அலை கடலென திரண்ட மக்கள் கூட்டத்தால், அரங்கம் நிரம்பி வழிந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், "ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சியும், பிளஸ் 2 முடிந்து விட்டு, மேற்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, "வழிகாட்டி" நிகழ்ச்சியையும், தினமலர் நாளிதழ் நடத்தி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்நிகழ்ச்சிகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதன் அடுத்தக்கட்டமாக, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோரை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் நாளிதழ், இலவச டி.இ.டி., பயிற்சி முகாமை நேற்று நடத்தியது.தி.நகர், சர்.பி.டி., தியாகராயர் அரங்கில் நடந்த, பயிற்சி முகாமில் கலந்து கொள்ள, காலை, 8:00 மணி முதல், ஆசிரியர் பயிற்சி, பி.எட்., முடித்தோர் கூட்டம் அலைமோதியது. அலை கடலென திரண்ட ஆசிரியர்களால், காலை, 10:00 மணியளவில் அரங்கம் நிரம்பியது. இருந்தும், 11:00 மணிக்கும், பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வந்து கொண்டே இருந்தனர். பலர், அரங்கில் இடம் இல்லாததால், வெளியில் அமர்ந்து, தேர்வு தகவல்களை குறிப்பு எடுத்தனர்.கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்த ஆலோசனைகளை, மதுரை, "நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங்" பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், ஆங்கில பாடம் குறித்த, எளிய,"டிப்ஸ்"களை, இப்பயிற்சி மைய நிர்வாக அதிகாரி, வெங்கடாஜலபதி வழங்கினர்.தமிழ் பாடம் குறித்த அறிவுரைகளை, இப்பயிற்சி மைய உதவி பேராசிரியர் கணேசன், உளவியல் குறித்த ஆலோசனைகளை, மதுரை வேலம்மாள் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாஷ் வழங்கினர்.மேலும், ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி, தேர்வு எழுதுவதற்கான டிப்ஸ், கடந்தாண்டு டி.இ.டி., தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் விவரங்களை விளக்கினர்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, டி.இ.டி., கடந்தாண்டு வினா தாள் நகல் அடங்கிய, எட்டு பக்க புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சி முடிவில், தேர்வு எழுதுவோர், தங்கள் பாடங்கள் குறித்தசந்தேகங்களுக்கு, துறை நிபுணர்களிடம் விளக்கங்களை பெற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி