தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு அறிவிப்பு: அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு-Dinamalar - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2013

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு அறிவிப்பு: அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு-Dinamalar

தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவிலிருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், லட்சக்கணக்கான அரசுஊழியர் பயன் பெறுவர். புதிய ஊதிய உயர்வை அறிவித்த, முதல்வருக்கு, அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்து உள்ளன.

குழு நியமனம்:

மத்திய அரசின், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்தபடி, 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இது குறித்து விசாரிக்க, தி.மு.க., அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில், ஒரு நபர் கமிஷன் குழுவை நியமித்தது. இக்குழு அனைத்து வகையான, அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்றது. அந்த மனுக்கள் அடிப்படையில், குழு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. குழு பரிந்துரையின் பேரில், பல அரசு ஆணைகள் வெளியிடப்பட்டன. அதிலும், முரண்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, புதிதாக பொறுப்பேற்றதும், அரசு செலவினத் துறை முதன்மை செயலர் கிருஷ்ணன் தலைமையில், 2012, ஏப்ரல் மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், நிதித் துறை கூடுதல் செயலர் பத்மநாபன், இணைச் செயலர் உமாநாத், ஆகியோர் இடம் பெற்றனர். இக்குழுவினரும், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம், கருத்து கேட்டனர். அவர்கள் கோரிக்கை அடிப்படையில், அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அறிக்கையை பரிசீலித்த முதல்வர், குழு கூறியதன் அடிப்படையில், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, புதிய ஊதிய உயர்வுக்கு, அரசாணை வெளியிட உத்தரவிட்டார். அதன்படி நேற்று, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத் துறை, விவசாயம் மற்றும் மண் வள பாதுகாப்புத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறை, பொது சுகாதாரத் துறை, வணிக வரித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொல்பொருள் துறை, கூட்டுறவுத் துறை, வரலாறு ஆய்வுத் துறை என, துறை வாரியாக, 30 அரசாணைகள் வெளியிடப்பட்டன. மேலும், பல அரசாணை, துறை வாரியாக வெளியிடப்பட உள்ளது.இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு, 200 ரூபாயிலிருந்து 3,000 வரை, ஊதிய உயர்வு கிடைக்கும். குறிப்பாக, அடிப்படை ஊழியர்கள் அதிகம் பயன் பெறுவர். ஒரே பதவியில், 10 ஆண்டு பணி முடித்து, தேர்வு நிலை ஊழியர்களாக உள்ளனர். இவர்களுக்கு, 6 சதவீதம், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்:

நேற்று வெளியிடப்பட்ட அரசாணைகளின் சிறப்பம்சங்கள்:

* தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கு, ஊதிய உயர்வு, 3 சதவீதத்துடன், கூடுதலாக, 3 சதவீதம் ஊதியஉயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
* முதன் முறையாக, அலுவலக உதவியாளர்களுக்கு, சிறப்புத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண உதவியாளர்களுக்கு,50 ரூபாய்; தேர்வு நிலையில் உள்ளோருக்கு 75 ரூபாய்; சிறப்பு நிலையில் உள்ளோருக்கு, 100 ரூபாய் கிடைக்கும்.
* புதிய ஊதிய உயர்வு, 2006ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வரு கிறது. பணப் பயன், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும்.
* தட்டச்சர் மற்றும் அடிப்படை ஊழியர்கள், 1998ம் ஆண்டுக்கு முன் சேர்ந்திருந்தால், அவர்களுக்கான சிறப்பு ஊதியம், 100 சதவீதம்; 1998ம் ஆண்டுக்கு பின் சேர்ந்திருந்தால், 50 சதவீதம் உயர்த்தப்படும்.
* புதிய ஊதிய உயர்வு நிர்ணயத்தில், முரண்பாடு இருந்தால், ஆறு மாதங்களுக்குள், முறையீடு செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி:

ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து, புதிய ஊதிய உயர்வை அறிவித்த முதல்வருக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், தமிழக ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கம் உட்பட, பல்வேறு சங்கங்கள் நன்றி தெரிவித்து உள்ளன.

துணை செயலர்கள் அதிருப்தி:

தலைமைச் செயலகத்தில், துணைச் செயலர்களாக உள்ளோருக்கும், இணைச் செயலர்களாக உள்ளோருக்கும், ஊதிய வித்தியாசம், 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இவ்வேறுபாட்டை களைய வேண்டும் என, துணைச் செயலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக, அரசாணை எதுவும் வெளியாகாததால், துணைச் செயலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெரிய மாற்றம் இல்லை:

ஆசிரியர்கள் கருத்து:"சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
       பத்து ஆண்டு, 20 ஆண்டு பணி முடித்த, தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதத்தில் இருந்து,6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆசிரியர்களுக்கு, 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய், கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு பெற, தர ஊதியம் உயர வேண்டும். இந்த தர ஊதிய அளவில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, கல்விப்படி ஆகியவற்றில், மாற்றம் வரும் என, எதிர்பார்த்தோம். அதுபோல், இந்த படிகளில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் தர ஊதியம், 4,700 ரூபாயாக, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்,இவரின் கீழ் வேலை பார்க்கும் கண்காணிப்பாளரின் தர ஊதியம், 4,800 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களின் தர ஊதியம், 4,900 ரூபாயில் இருந்து 5,100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் அளவில், தர ஊதியம் உயர்த்தப்பட்டபோதும், இதை, ஆசிரியர்களுக்கு உயர்த்தவில்லை. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி