இணை பட்டப்படிப்பு: 17 பேருக்கு பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2013

இணை பட்டப்படிப்பு: 17 பேருக்கு பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு.

அனுமதிக்கப்பட்ட பட்டப்படிப்புகளுக்கு இணையான படிப்பினால், ஆசிரியர் பணி நியமனம் வழங்க மறுத்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. நான்கு வாரங்களில், ஆசிரியர் பணியில் நியமிக்கும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.சேலம், வைசியா கல்லூரியில், பி.ஏ., ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) படித்தவர், ஹசினா பானு. பின், பி.எட்., ஆங்கிலம், எம்.ஏ., ஆங்கிலம் படித்தார். இது, பி.ஏ., ஆங்கிலம் படிப்புக்கு இணையானது என, சேலம், பெரியார் பல்கலை, 2010ல் உத்தரவிட்டு உள்ளது.பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, ஹசினா பானு விண்ணப்பித்தார்.சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. தேர்வுப் பட்டியலில், இவரது பெயர் இடம் பெற்றிருந்தது. அதன்பின், தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்தது. காரணம் கேட்டபோது, பி.ஏ., படிப்பு என,தெரிய வந்தது.இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், ஹசினா பானு மனுத் தாக்கல் செய்தார். தான் படித்தது, பி.ஏ., ஆங்கிலம் படிப்புக்கு இணையானதுதான் என்றும், எனவே தனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும்,மனுவில் கோரியிருந்தார்.இவரைப் போன்று, பொருளாதார ஆசிரியர் பணியிடங்களில், எம்.ஏ., (அப்ளைடு எகனாமிக்ஸ்) படித்தவர்களுக்கும், வேதியியல் ஆசிரியர் பணியிடங்களில், எம்.எஸ்சி., (பாலிமர் கெமிஸ்ட்ரி மற்றும் இன் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி) படித்தவர்களுக்கும், கணித ஆசிரியர் பணியிடங்களில், பி.எஸ்சி., (புள்ளியியல்) படித்தவர்களுக்கும், வேலை மறுக்கப்பட்டது.இதுபோன்று, இணைப் படிப்புகளால், ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்ட, 17 பேர், ஐகோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜ், வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், சிராஜுதீன், நல்லியப்பன், லோகநாதன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, மனுதாரர்களுக்கு கல்வித் தகுதி இல்லை எனக்கூற முடியாது. அவர்கள் பெற்ற பட்டப்படிப்பு, அந்தப் பணிக்கு தேவையான பட்டப்படிப்புக்கு இணையானது தானா என்பதுதான் பிரச்னை.இணையான பட்டங்களைப் பொறுத்தவரை, அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது. அதன்படி, அரசு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அறிவிப்பாணையில், இணைப் படிப்புகளும், பரிசீலனைக்கு தகுதி பெற்றவை என, கூறப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்களும், தாங்கள் வழங்கிய பட்டங்கள், குறிப்பிட்ட பணிகளுக்கு தேவையான பட்டங்களுக்கு இணையானது தான் என, கூறியுள்ளன. இணையான பட்டங்கள் குறித்து, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, மனுதாரர்களை, நான்கு வாரங்களில் பணியில் நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி