தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2013

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. அரசுஐ.டி.ஐ. மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படுவதுடன்,ஆன்லைனிலும் பதிவு,புதுப்பித்தலும் செய்வதும் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்று வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கூறினர்.தமிழக அரசு வேலைவாய்ப்பு துறை அலுவலகங்களில் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குவதுடன்,பதிவு செய்தவர்களுக்கு அவர்களுடைய கல்வி தகுதிக்கு தகுந்தவாறு வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் ஜி.பிரகாஷ்,இணை-இயக்குனர் வி.மீனாட்சி ஆகியோர் உயர்அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி,தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இதுகுறித்து வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடுகளை அதிகரிப்பதுடன்,மேம்படுத்தும்வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி உள்ளது. இவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.அத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின்கல்வி தகுதிக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வி தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தி வருகிறது.இந்த உதவி தொகையை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 50ஆயிரத்துக்கு மேல் இருக்க கூடாது. இது போன்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று விண்ணப்பதாரர்கள் சுயஉறுதி ஆவணம் அளித்து இருக்க வேண்டும்.தற்போது தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு 100 ரூபாயும்,மேல்நிலைப்பள்ளி முடித்தவர்களுக்கு 200 ரூபாயும்,பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 300 ரூபாய் வீதம் மாதம் வழங்கப்படுகிறது. இந்த தொகை 3 மாதங்களுக்கு ஒரு முறை விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இதுகுறித்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கலெக்டர் அலுவலகம் மூலம் விழிப்புணர்வு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவி தொகை பெறுபவர்களுக்கு வருவாய்துறை சான்று மற்றும் சுய ஆவணம் அடிப்படையில் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதில்ஒரு சிலர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருவது குறித்து தகவல்கள் வருகின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை அவ்வாறு வந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவி தொகையை பொறுத்தவரையில் 3 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும்.உடல் ஊனமுற்றோரை பொறுத்தவரையில் 10-ம் வகுப்புக்கு உட்பட்டவர்களுக்கு 300 ரூபாயும்,மேல்நிலைப்பள்ளி முடித்தவர்களுக்கு 375 ரூபாயும்,பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 450 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்று இருந்தாலும் அவர்களும் தகுதி பெற்றவர்கள்.இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படும். தமிழகம் முழுவதும் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு உதவி தொகைவழங்கப்பட்டு வருகிறது.விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து தான்பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்-லைனிலும் பதிவு செய்வதுடன்,புதுப்பிக்கவும் செய்ய முடியும். தற்போது இந்த வசதியை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவதால்,ஆன்-லைன் பதிவு முறையை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம் அதையும் செய்து கொடுப்போம். இது தவிர 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய பள்ளிகளில் மதிப்பெண் வழங்கும் போதும் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுகிறது. அதன் மூலம் 12 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுகிறது.இதே போன்று கல்லூரிகளிலும் நேரடியாக சென்று வேலைவாய்ப்பு அட்டை வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. தற்போது அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தகார்டில் மாணவர் குறித்த அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும்.மேலும் டி.என்.பி.எஸ்.சி. போன்ற அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் தங்களுடைய வேலைக்கான ஆணை கிடைத்தவுடன் முறையாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து தங்களது பதிவை ரத்து செய்து கொள்ள வேண்டும். அரசு கண்டுபிடித்தால்,நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி