சத்துணவுக்கு அழுகிய முட்டைகள் சப்ளை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2013

சத்துணவுக்கு அழுகிய முட்டைகள் சப்ளை?


முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சத்துணவுக்கான முட்டை சப்ளையில், காலாவதியான மற்றும் அழுகிய முட்டைகளை கலப்படம் செய்யப்படுவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து
குறைபாட்டை சரி செய்யவும், குழந்தை பருவ இறப்பைதவிர்க்கவும், உடல்திறன் அதிகரிக்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்க்கவும், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறை சார்பில், சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சத்துணவு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில்வாரத்தில் மூன்று நாட்களும், பள்ளிகளில், வாரத்தில் ஐந்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. இதற்காக, நாமக்கல் பகுதிகளில் இருந்து, தினமும் 70 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்றன.சத்துணவிற்கு வழங்கப்படும் முட்டை, தலா, 46 முதல், 52 கிராம் இருக்க வேண்டும். ஒரு முட்டைக்கு, அரசு கொடுக்கும் விலை, 3.18 ரூபாய். அதேபோல், 12 முட்டைகளை, ஒரே நேரத்தில் எடை போட்டால் 552 கிராம் இருக்க வேண்டும். நாள் வாரியாக முட்டை சப்ளை செய்யப்படுவதை உறுதி செய்ய தினமும் ஒரு வண்ணத்தில் முட்டையின் மீது, "இங்க்" பதிவு செய்ய வேண்டும். அரசின் இந்த கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு டெண்டர் எடுத்தவர்கள், குழந்தைகளுக்கு, முட்டைகளை சப்ளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இரு மாதங்களாக நாமக்கல் பகுதியில், முட்டை கொள்முதல் விலை அதிகபட்சமாக, 4.15 ரூபாய் வரை சென்றது. அதனால் அரசிடம் டெண்டர் எடுத்தவர்களுக்கு உரிய லாபம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அரசின் விலைக்கும், கொள்முதல் விலைக்கும், ஒரு முட்டைக்கு, 1.00 ரூபாய் வரை இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், குறைந்த எடையுள்ள முட்டை, விற்காமல் காலாவதியான முட்டை ஆகியவற்றை, சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டையோடு கலந்து விடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சத்துணவு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: தினசரி மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி முட்டையின் விலை உயர்ந்துள்ள நிலையில், அரசிடம் டெண்டர் எடுத்தவர்கள், அரசு நிர்ணயித்த விலைக்கே சப்ளை செய்கின்றனர். அதில், அவர்களுக்கு லாபம் குறைந்ததால் காலாவதி முட்டைகளை கலந்து விடுகின்றனர். அதனால்,சத்துணவு வழங்கும் பொறுப்பாளர்களுக்கும், புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.அதன்படி, சத்துணவு முட்டையை வேக வைக்கும் முன், தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போடவேண்டும். அதில், மிதக்கும் முட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். உடைந்த முட்டைகள் மற்றும் வேக வைக்கும் போது உடையும் முட்டைகளை, குழந்தைகளுக்கு தரக் கூடாது. அந்த முட்டைகளை, தனியாக எடுத்து கணக்கு வைத்து, டெண்டர் எடுத்தவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யும் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:

சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டைகள், கோழி, முட்டையிட்ட தேதியில் இருந்து, மூன்று நாட்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதனால் முட்டையில் கலப்படம் மற்றும் அழுகிய முட்டை சப்ளை செய்ய முடியாது. யூனியன் வாரியாக, முட்டைசப்ளைக்கு டெண்டர் எடுத்தவர்கள், ஆட்களை நியமித்து, கண்காணித்து வருகின்றனர்.குளிர்கால சீசன் என்பதால், முட்டையை, 20 நாள் வரை வைத்திருந்தாலும் கெடாது. தற்போதைய விலை உயர்வுக்கும், அரசின் டெண்டரில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் வித்தியாசம் அதிகரித்துள்ளது. அதனால், முட்டை டெண்டர் எடுத்தவர்கள், ஏற்ற, இறக்கத்தை சந்தித்தே ஆக வேண்டும்; வேறு வழியில்லை. அழுகிய முட்டைகள் இருந்தால்,தண்ணீரில் போடும் போதே, தெரிந்துவிடும். அதை, டெண்டர் எடுத்தவர்களிடம் திருப்பிகொடுத்தால், எடுத்துக் கொள்வர். அந்த, நடைமுறை ஏற்கனவே உள்ளது. இவ்வாறு அவர்கள்கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி