மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த "ஒபாமா-சிங்' திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2013

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த "ஒபாமா-சிங்' திட்டம்.


மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் மத்திய அரசின்"21ம் நூற்றாண்டின் அறிவுசார் திட்டம்', கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் நேற்று துவங்கியது. "ஒபாமா-சிங்' என
பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.1.5 கோடி ஒதுக்கியுள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை கல்வியை முறையாக கற்பிக்காததால், உயர்கல்வியில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் 50 சதவீத கல்லூரிமாணவர்களுக்கு, எளிய ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் கூட தெரியவில்லை; 60 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிய வார்த்தையை கூட உச்சரிக்கத் தெரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, அடிப்படை கல்வியில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்த, மத்திய அரசு சார்பில் அறிவுசார் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கோவை அவினாசிலிங்கம் பல்கலை உட்பட ஐந்து இந்திய பல்கலைக்கழகங்களும், அமெரிக்காவின் மினிசோடா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்திய பள்ளி மாணவர்களின் கல்வி குறித்து ஆய்வு செய்து, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களின் துணையோடு, புதிய கற்றல் முறை தயாரிப்புக்கான ஆய்வு பணிகள் துவங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெயர்களை இணைத்து, "ஒபாமா-சிங்' என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்த, 10 மாநகராட்சி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்காக மத்திய அரசின் சார்பில் 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் பட்சத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த திட்ட துவக்க விழாவில் பேசிய துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன், ""அரசுப்பள்ளி மாணவர்களின் புரிதல் திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு பாடத்திட்டங்களை தயார் செய்து வருகிறோம். இதற்கான ஆய்வு முடிந்ததும், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிஅளிக்கப்படும். இத்திட்டத்திற்கான கால அவகாசம் மூன்று ஆண்டுகள். கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில், திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த அரசு முன்வரும்,'' என்றார். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் வேலுச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். அமெரிக்காவின் மினிசோடா பல்கலை பேராசிரியர்கள் ரெனிட்டா டிச்சா மற்றும் பிரைன் அபிரி ஆகியோர்"ஸ்கைப்' தொழில் நுட்பத்தில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி