காத்து வாங்கும் அறிவியல் மையம்: மாணவர்களிடையே ஆர்வம் இல்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2014

காத்து வாங்கும் அறிவியல் மையம்: மாணவர்களிடையே ஆர்வம் இல்லை.


பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த அரசு சார்பில் 8.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மண்டல அறிவியல் மையம் பார்வையாளர்கள் வருகை குறைவால் வீணடிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கட்டுப்பாட்டில் சென்னை,கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல அறிவியல் மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் அதிகளவில் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன; லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.கோவை, அவிநாசி ரோடு "கொடிசியா" வர்த்தக கண்காட்சி வளாகத்துக்கு செல்லும் வழியில் ஏழு ஏக்கர் பரப்பளவில் 8.5 கோடி ரூபாய் செலவில் கோவை மண்டல அறிவியல்மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொருட்கள் வேலை செய்யும் முறை, வேடிக்கை அறிவியல், ஜவுளி அரங்கம், அடிப்படை வானவியல், "3"டி மினி திரையரங்கு, கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், அறிவியல் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டி, அறிவியல் திறனறிவு போட்டி, குளிர்கால மற்றும் கோடைக்கால அறிவியல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனினும், இவற்றில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. தவிர, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், அறிவியல் துறை சார்ந்த முன்னாள் - இந்நாள் வல்லுனர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகின்றனர்.குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி நாட்கள் தவிர மீதமுள்ள 362நாட்களும் தினமும் காலை 10.00 முதல் மாலை 5.45 மணி வரை செயல்படுகிறது.

பொதுமக்களுக்கு 25 ரூபாய், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு 15 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2013 ஜூலை 14 முதல் செயல்படும் இம்மையத்துக்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என, மொத்தம் 15 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை வருகை தந்துள்ளனர்.பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், பல்வேறு அறிவியல் உபகரணங்கள் மையத்தில் வைக்கப்பட்டிருந்தும், கல்வி நிறுவனங்கள் அலட்சியத்தால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது."டிவி", சினிமா, பார்க், பூங்கா, கேளிக்கை நிகழ்ச்சிகள், சுற்றுலா செல்ல இன்றைய மாணவர்கள் காட்டும் ஆர்வம் அறிவியல் மற்றும் அதை சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள காட்டுவதில்லை என்பதற்கு இதுவரை இம்மையத்துக்கு வருகை தந்துள்ளவர் எண்ணிக்கையே சான்று.மாணவர்களுக்கு சலுகைகோவை மண்டல அறிவியல் மைய திட்ட இயக்குனர் அழகிரிசாமி ராஜூ கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க தேவையான அனைத்து உபகரணங்களும், மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு முறை வந்து பார்த்தவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல்களை சொல்லி அதன்படி பலர் இங்கு வருகை தருகின்றனர். ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், தகவல்களை கேட்டு மாணவர்களை அழைத்து வருகின்றன.கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் செயல்படும் கல்விக் குழுமங்கள்மற்றும் அதில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது அறிவியல் மையத்துக்கு இதுவரை வந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவுதான்.பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணத்தில் சலுகை அளித்துள்ளோம்.மையத்துக்கு வருகை தர விரும்புவோர் 0422-257 3025, 257 0325 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. S.SenthilKumar, KarurJanuary 27, 2014 at 8:21 AM

    Sir ipdi oru ariviyal maiyam irukindratharkaga seithi anaithuvagai palli thalamai aasiriyarkaluku muthalil theriyapaduthi irukirargala! Vizhipunarvu ilamai kuda karanamaga irukalam sir by s.s.k karur

    ReplyDelete
  2. இந்த அறிவியல் மையம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், மாணவர்களைப் பத்திரமாக கூட்டிச் சென்று வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்குப் பயந்தே பல பள்ளித் தலைமைகள் தவிர்த்திருக்கலாம். மேலும், அறிவியல் மையம் சென்று வரும் நேரத்தில் பல கேள்விகளை மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பல பெற்றுவிடலாமே என்ற பயனளவைக் கொள்கையை கடைப்பிடிக்கும் பள்ளி நிர்வாகங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

    ஆட்டைக் கொழுக்க வைக்க வேண்டுமென்றால் அதைக் கட்டில் வைக்க வேண்டும் என்ற எளிய உண்மை அறியாதவர்களா மேய்ப்பர்கள்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி