பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேர மாற்றம் ரத்து செய்யப்படுமா?: முதல்வரின் முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேர மாற்றம் ரத்து செய்யப்படுமா?: முதல்வரின் முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்...!


கடந்த அரை நூற்றாண்டாக இருந்த வந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கு நேரத்தை தற்போது மாற்றியுள்ள கல்வித்துறையின் அறிவிப்பை முதல்வர் கவனத்தில் கொண்டு சென்று ரத்து செய்ய வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை தொடங்கப்பட்ட காலம்தொட்டு கடந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி- அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நேரம் காலை 10 மணியாகத்தான் இருந்து வந்தது.ஆனால், எவருமே நேர மாற்றம் குறித்த கோரிக்கையோ வேண்கோளோ அல்லது பரிந்துரையோ கருத்துக்கேட்போ எதுவுமின்றி நிகழாண்டுக்கான தேர்வு நேரத்தை சுமார் 45 நிமிடம் முன்னதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரமாற்றத்தால் ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகியோருக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளபடவில்லை என்பது வேதனைக்குரியது.நகரம் சார்ந்த போக்குவரத்து வசதிகள் குறைவில்லாத பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வு மையங்கள் உள்ள நிலையில், தேர்வு எழுதும் நேரம் காலை 10 மணி என்பதில் மாற்றமில்லை. ஆனால், முதல் முறையாக தனது 14 வயதில் அரசுத்தேர்வை எழுதச்செல்லும் மாணவருக்கு காலை 9.15 மணி என்ற தேர்வு தொடங்கும் என்ற நேர மாற்றம் மனதளவிலும், நடைமுறையிலும் சோர்வை உருவாக்கப்போவது உணரப்படவில்லை. குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம். பத்தாம் வகுப்பு எழுத தமிழகம் முழுதும் சுமார் 3600 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 2 ஆயிரத்துக்கும் மேல்பட்ட மையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.இந்நிலையில், முறையற்ற போக்குவரத்து வசதியுள்ள கிராம்ப்புறப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் சாதாரணமாக 8.30 மணிக்கு பேருந்தில் பள்ளிக்குச் செல்லும் நிலையில், தற்போது தேர்வுக்காக காலையில் 6.45, 7.30 சில பகுதிகளில் 8 மணிக்கே பேருந்தைப்பிடித்தாக வேண்டும். இந்தச்சூழ்நிலையில் அனைவருக்குமான காலை உணவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இப்படி அரக்கப்பறக்கச்செல்லும் மாணவர்கள் தேர்வுக்கூடத்தில் 10 மணிக்கு பசி எடுக்கும் போது ஏற்படும் சோர்வை சமாளித்து தேர்வை எழுதியாக வேண்டும். இதைத் தவிர்க்க பெற்றோரின் உதவி அவசியம். ஆனால் அந்த உதவியை எத்தனை பெற்றோர் செய்ய இயலும் நிலையில் இருக்கின்றனர் கேள்விக்குறி. இது ஒரு புறம்.தேர்வுக்கான வினாத்தாளை மையங்களுக்கு எடுத்துச் செல்லும் வழித்தட அலுவலர்களில் நிலை மாணவர்களைவிட மோசம். 10 மணிக்குத் தொடங்கும் பிளஸ்.2 தேர்வுக்காக காலை 6.30 மணிக்கு செல்ல வேண்டிய மையங்களுக்கு, பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக சில பகுதிகளுக்கு அதிகாலை 5.30 மணிக்கே புறப்பட்டாக வேண்டும் என்பது மறுபுறம்.இந்தச்சூழலில், புதுக்கோட்டையிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ள அண்டக்குளத்திலுள்ள தேர்வு மையத்துக்குச்செல்ல காலையில் 6.45 மணிக்கும், 7.50 மணிக்கும், 8.25 மணிக்கும் பேருந்துகள் இயங்குகின்றன. நேர மாற்றம் காரணமாக ஆசிரியரும் மாணவரும் காலை 8.30 மணிக்கே இருந்தாக வேண்டும். இந்த வழித்தடத்திலுள்ள புத்தாம்பூர், செம்பாட்டூர், மூட்டாம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் விரைவாகச் செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்பதை எடுத்துக்காட்டாகக் கூற முடியும்.பல கிராமங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கும் இதே நிலைதான் உள்ளது. எனவே, நேர மாற்றம் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்களும், தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்பாக கிடைக்கு ஒரு மணி நேரத்தில் புத்தகத்தைப் புரட்டிப்பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்துமி் மெல்லக்கற்கும் மாணவர்களும்தான்.

இந்த உண்மை நிலையை கடைசி நேரத்திலாவது பள்ளிக்கல்வித்துறை உணர வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.இப்பிரச்சினையில், நேர மாற்றத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பிப்ரவரி.5 -ல் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினரும், பிப்ரவரி.11 -ல் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினரும்,பிப்ரவரி.13 -ல் தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவில்லை.இனி முதல்வர்தான் கவனிக்க வேண்டும்.இது குறித்து, தமி்ழ்நாடு உயர்நிலை, மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் கு. திராவிடச்செல்வம் கூறியது: கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட யாருடைய கருத்தையும் அறியாமல் தன்னிச்சையாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நேரமாற்றத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கு கோடை காலம் காரணம் எனவும், முதல்வர் முடிவு செய்தார் எனவும் கூறப்படுகிறது. ஆனால், மார்ச்.25 -ம் தேதி வரை நடைபெறும் பிளஸ்.2 தேர்வு வரை அடிக்கும் வெயில், மார்ச்.26 -லிருந்து ஏப்ரல்- 9 வரை நடைபெறுகிற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாறிவிடப்போவதில்லை என்ற உண்மையை ஏற்க கல்வித்துறை மறுத்துவருவது வேதனைக்குரியது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி