மதிய உணவு வழங்காததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் சாலைமறியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2014

மதிய உணவு வழங்காததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் சாலைமறியல்.


மக்களவைத் தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தொகுதில் பணிபுரியவுள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் சுமார் 1,100 பேர் பயிற்சிக்காக வந்திருந்தனர்.அவர்களுக்கு, காலையில் வழக்கமாக வழங்கப்படும் டீ, பிஸ்கட் வழங்கப்படாததோடு, குடிக்கத் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லையாம். இதனால்,அதிருப்தியில் இருந்த நிலையில், மதியம் 2 மணியாகியும் உணவும் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லை எனக் கூறியுள்ளனர். கும்பகோணத்தில் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே என்றபோது, அதைப்பற்றி எங்களுக்கு தெரியாது என்றனராம். இந்தநிலையில், சிறிது நேரம் கழித்து சுமார் 100 உணவுப் பொட்டலங்களை மட்டும் கொண்டு வந்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். 1,100 பேருக்கு இது எப்படி போதும் என்று கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தஞ்சை கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், முறையான ஏற்படாடு செய்யாததால் அதிருப்தியுற்று பாதியிலேயே சென்று விட்டனர். மீதம் இருந்தவர்களும் மாலை 3.30 மணியளவில் பசியுடனே புறப்பட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி