வெள்ளுடை வேந்தர் தியாகராய செட்டி அவர்களின் பிறந்த தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

வெள்ளுடை வேந்தர் தியாகராய செட்டி அவர்களின் பிறந்த தினம்





நீதி கட்சியின் தலைவரும், நிறுவனருமான தியாகராய செட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று...
சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் நீதிக்கட்சியின்நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின்முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர்பெற்றிருந்தார். 1916 இல் பிராமணரல்லாத சாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர்டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார்.சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித்தலைவராகவே நீடித்தார். இவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தனர்.


இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. தியாகராயர் அம்மாநாட்டை முன்னின்று நடத்தினார். காந்தியடியகள் சென்னை வந்த போது அவருக்குச் சிறப்பானதொரு வரவேற்பைத் தந்தார். 1882 ஆம் ஆண்டு “சென்னை உள் நாட்டினர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடர்ந்து நடத்தினார். இந்தச் சங்கம் பிற்காலத்தில் “சென்னை மகாஜன சபை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இச்சபை அவ்வப்போது சென்னையில் கூடி விவாதித்துக் கோரிக்கைகளை ஆங்கிலேயே அரசுக்குச் சமர்பித்து வந்தது. 1916 ஆம் ஆண்டு வரை அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரராகவே செயல்பட்டார். தந்தை பெரியாருக்கும் முன்னரே சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தவர் இவரே. தமிழக காங்கிரஸில் ஆதிக்க வெறி கண்டு மனம் வெதும்பிய இவர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அப்போது அவரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட பெரியார்,பின்னாளில் அதே காரணத்திற்காகக் காங்கிரஸை விட்டு விலகி, தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தார். 1916 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திராவிடத் தலைவர்கள் டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், கே.வி. ரெட்டி நாயுடு மற்றும் சர். பி. தியாகராயர் ஆகியோர் காங்கிரசு கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

பல கட்சிகளிலும் இருந்த தலைவர்கள் இவரிடம் கொள்கை ரீதியாக வேற்றுமை கொண்டிருந்தாலும் உளப்பூர்வமாக இவரிடம் பேரன்பு கொண்டிருந்தனர். ஒரு சமயம் இவரின் நிர்வாகத்தை எதிர்த்து தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் மிக ஆவேசமாக உரையாற்றினார். அவரிடமும் தியாகராயர் நட்புணர்வு பாராட்டினார். சர்.சி.பி. ராமசாமி அய்யர் தேர்தலின் போது தியாகராயரை எதிர்த்துப் போட்டியிட்டார். துப்பாக்கியைக் காட்டி அவருக்கு எதிராக வாக்கு சேகரித்தார். ஆனால் மிகவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தியாகராயர். அவர் மறைந்த போது அதே சி.பி.ராமசாமி அய்யர், "ஒரு தன்னலமற்ற மனிதாபிமானியை இழந்தோமே" என்று சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

நீதிக்கட்சி

1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னை, வேப்பேரியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் சர். பி. தியாகராயர் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் “நீதி (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இந்த அமைப்பு நடத்தி வந்த "நீதி' என்ற இதழின் பெயரைக் கொண்டே, அந்த அமைப்பை நீதிக்கட்சி (Justice Party) என்ற பரவலாக அழைக்கப்பட்டது.

காந்தியும் தியாகராயரும்…

தியாகராயர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்த போதிலும் பார்ப்பனீய ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தார். அதனால் அவர் மகாத்மா காந்தியிடமும், முரண்பட நேர்ந்தது. காந்திஜியின் கதர் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பழைய முறையிலான கைத்தறி நெசவு நம் இந்திய முன்னேற்றத்திற்கு ஏற்றதல்ல.அதில் புதுமையைப் புகுத்தி தொழில் புரட்சி புரிய வேண்டும் என்பது தியாகராயரின் எண்ணம். அதில் தீவிரமும் காட்டினார். காந்தியடிகள் இவரிடம் முரண்பட்ட போதும், அவர் சென்னைக்கு வந்த போது பிட்டி நெசவாலைக்கு வருகை தந்து அதை பார்வையிட்டார். அதில் ஒரு தறியில் அமர்ந்து நெய்தும் பார்த்தார். அதில் கண்டிருந்த நவீன உத்திகளைக் கற்றுக் கொள்வதற்காகத் தன்னுடைய புதல்வர்களான மணிலால், மதன்லால் ஆகிய இருவரையும் ஆறு மாத கலைப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்.

வெள்ளுடை வேந்தர்

சென்னை மாநகராட்சியின் தலைவராக நீதிக்கட்சி முன்னோடி சர். பி.டி.தியாகராயர் இருந்தபோது வேல்ஸ் நாட்டின் இளவரசர் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் லார்டுவெல்லிங்டன்.தியாகராயரிடம்,சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் வேல்ஸ்இளவரசரை நீங்கள்தான் வரவேற்க வேண்டும். வரவேற்பின்போது நாங்கள் குறிப்பிடும் முறையில் ஆடை அணிந்து வரவேண்டும் என்று சொன்னார் ஆளுநர்.தியாகராயர் கம்பீரமாக,"எங்களின் அடையாளத்தை விடுத்து ஆடை அணிய முடியாது .எப்பொழுதும் போல வெள்ளை ஆடை தான் அணிந்து வருவேன் .விருப்பம் இல்லாவிட்டால் நான் வரவேற்க வரவில்லை "என சொல்ல வெள்ளை ஆடையுடன் வந்து
வரவேற்க அனுமதி தரப்பட்டது .அதனால் வெள்ளுடை வேந்தர் என அறியப்பட்டார்

நத்திகமில்லா திராவிடம் ....

தியாகராயரை எல்லோரும் நாத்திகர் என்றே நம்பியிருந்தனர். ஆனால் அவர் சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் கடவுள் திருப்பணிகளிலும் நிகரற்று விளங்கினார். சென்னையிலுள்ள மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தை ரூபாய் பத்தாயிரம் செலவு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் கோவிலைச் சேர்ந்தோர் இவரைக் கோபுரத்திலேறி கும்பநீரை ஊற்றஅனுமதிக்கவில்லை. பார்த்தசாரதி கோவிலுக்கும் திருப்பணி செய்வித்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் உற்சவ சிம்ம வாகனத்தில் கண்களில் பதிப்பதற்காக இரண்டு கண்ணாடிக் கண் விழிகளை லண்டனிலிருந்து தருவித்தார். இன்றும் அந்த வாகனத்தில் தான் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

பார்ப்பனீய எதிர்ப்பும், பார்பனர்களுக்கு ஆதரவும்...

பார்ப்பனீயத்தை எதிர்த்தாரே தவிர, பார்ப்பனர்களைத் தியாகராயர் வெறுத்ததில்லை. நம் வழக்குகளை நாமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பார்ப்பன வக்கீல்களைக் கொண்டு வழக்கு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினார்.ஆனால், ஏழை பார்ப்பனர்களுக்கு உதவிகள் செய்தார்.

தியாகராயரின் நீண்ட தாழ்வாரத்தில் ஏராளமான பார்ப்பன சிறுவர்கள் அமர்ந்து வடமொழியும், மந்திரங்களும் கற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் அவர் செய்வார்.

யஞ்யராமன் என்ற பிராமணர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டு செய்ய சேரிப் பகுதியில் போய் தங்கினார். அதனால், அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டு வேலையையும் இழந்தார். அப்போது தியாகராயர் தலையிட்டு அவரைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்தார்.

ரிப்பன் மாளிகை எனப்படும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் இவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது

13 comments:

  1. Replies
    1. அருமை நண்பரே....

      இந்த முறையில் உங்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

      Delete
    2. நன்றி Satheesh இனி பதிவின் இடையில் தேவையில்லாமல் குறுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது...

      Delete
  2. Replies
    1. Nalla idea sir. Vaalthukal. Thodarattum ungal pani.

      Delete
    2. Nalla idea sir. Vaalthukal. Thodarattum ungal pani.

      Delete
  3. சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி ....

    நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் மாநில அளவிலான தேர்வாணையம் (தற்போதைய TNPSC) ஏற்படுத்தப்பட்டது ..

    ReplyDelete
  4. இந்தியாவிலேயே முதல் முதலாக மதிய உணவு திட்டம் சென்னை ஆயிரம் விளக்குபகுதியில் இவரால் கொண்டுவரப்பட்டது ..என்பதை நாம் அனைவரும் பாட புத்தகத்தின் மூலமே அறிந்திருப்போம்...ஆனால் இந்த திட்டம் இந்திய அளவில் முதல் முதலாக சென்னை ஆயிரம் விளக்குபகுதியில் செயல் படுத்தப்பட்டது என்பது நமக்கு பெருமையான விஷயம்...

    ReplyDelete
  5. Replies
    1. நன்றி குமார் சார்..

      Delete
  6. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி