திராவிட மொழிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

திராவிட மொழிகள்

உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை வியத்தகு படைப்புகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
ஆயினும், கண்ணால் காணமுடியாத, நிலையான வடிவத்தைத் தரவியலாத காற்றினால் ஏற்படும் ஒசையை ஓலியாக்கி, அதற்கு வரிவடிவம் தந்து, மொழியாக நிலைபெறச் செய்த மனிதனின் செயலுக்கு இணையான படைப்போ கண்டுபிடிப்போ இந்நாள்வரை தோன்றவில்லை என்பதே உண்மை.

மொழி என்பது ஒருவர் எண்ணங்களையும் கருத்துகளையும் மற்றொருவர் அறிவதற்கு உதவும் கருவியாகும். ஆனால் இக்கருத்தில் வேறுபடுபவர்களும் உள்ளனர். கருவி என்ற எல்லையைத் தாண்டி மொழி பல்வேறு தளங்கலில் பயன்படுவதைக் காண வேண்டும் என்று வேறுபடும் கருத்துடையோர் கூறுகின்றனர்.

உலகில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள், தனக்கெனத் தனிச்சிறப்பும் பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழியே மூலமொழி. அதிலிலருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் கிளைமொழிகள். அவற்றின் பொதுத்தன்மையின் அடிப்படையில், அவற்றை ஒரே மொழிக்குடும்பத்தில் அடக்குவர் மொழியியல் அறிஞர்கள்.

இந்திய மொழிக் குடும்பங்கள்: இந்திய மொழிக் குடும்பங்கள் நான்கு வகைப்படும். அவை:
01. இந்தோ - ஆசிய மொழிகள்
02. திராவிட மொழிகள்
03. ஆஸ்திரோ - ஆசிய மொழிகள்
04. சீன - திபெத்திய மொழிகள்

                undefined


மொழிகளின் காட்சி சாலை: இந்தியாவில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளை மொழிகளும் பேசப்படுவதால், மொழிகளின் காட்சி சாலை (Museum of Languages) என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார்.

நடைமுறையில் உள்ள திராவிட மொழிகள்: இன்றைக்கு இருபத்து மூன்றனுக்கும் மேற்பட்ட திராவிடமொழிகள் நடைமுறையில் உள்ளன. இம்மொழிகள் 01. தென் திராவிட மொழிகள் 02. நடுத்திராவிட மொழிகள் 03. வடதிராவிட மொழிகள் என்று பிரிக்கப்படுகின்றன.

தென் திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், துளு, குடகு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.

நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூலி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு

வட திராவிட மொழிகள்: குரூக், மால்தோ, பிராகுய்

திராவிடப் பெருமொழிகள்: நடுத்திராவிட மொழிகள் மற்றும் தென் திராவிட மொழிகளில் அடங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை திராவிடப் பெருமொழிகள் என்றழைக்கின்றனர்.

திராவிட நாகரிகம்: மொகஞ்சதாரோ, அரப்பா அகழ்வாய்வுக்குப் பிறகு இந்தியாவிலும் மிகச் சிறந்த நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே பரந்து விரிந்திருந்த அப்பழம்பெரும் நாகரிகத்தையே திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும். திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு என்னும் பொருளைத் தருவது. திராவிட மொழிகள், திராவிட இநம், திராவிட நாகரிகம் என்னும் சொற்றொடர்களுள் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல், தமது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார். குமாரிலபட்டர் திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கினார். கால்டுவெல் அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்
.
திராவிடமும் மொழியியல் அறிஞர்களும்: மொழியியல் அறிஞர்கள் தமிழையும், கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை தமிழியன் (Tamilian) அல்லது தமுலிக் (Tamulic) என்று வழங்கினர். எனவே இவ்வின மொழிகள் அனைத்தையும் திராவிட என்னும் சொல்லால் தாம் குறிப்பிட்டுள்ளதாக கால்டுவெல் கூறியுள்ளார்.

திராவிடமும் - தமிழும்: தமிழ் என்னும் சொல்லிலிருந்து உருவானதே திராவிடம் என்னும் சொல்லாகும். மற்ற திராவிட மொழிகளை விட தமிழே பழமையானதென்பதாலும், மற்ற திராவிட மொழிகளின் பல்வேறு அம்சங்கள் தமிழியே காணப்படுவதாலும், தமிழை உயர்தனிச் செம்மொழியாகவும் உலகின் மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

திராவிட மொழிகளுள் தமிழ்க்குரிய இடம்: தமிழில் இருந்து திராவிடம் என்னும் சொல் பிறந்தது. தமிழ் -> திரமிள -> திரவிட -> திராவிட என்று உருமாறி வந்ததாக ஈராஸ் பாதிரியார் கூறுகின்றார். திராவிட மொழி என்றாலே தமிழ்மொழியையே குறிக்கும். திராவிட மொழிகளுள் மிகவும் தொன்மையான, பண்பட்ட மொழி தமிழே, திராவிடமொழிகளுள் மூலத் திராவிடமொழியின் வடிவத்தையும் மொழிக் கூறுகளையும் வேர்களையும் பெருமளவில் கொண்டுள்ள மொழி தமிழே. இத்தகைய தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.

தமிழ்மொழியின் தொன்மை: கடல்கோளால் அழிந்ததாகக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் தோன்றியதாகவும், மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து திராவிட இனமும் அவர்தம் மொழியும் இந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும் என்றும் ஆரியர் வருகைக்கு முன்னரே தமிழ் இந்தியாவில் பேசப்பட்டு வந்ததாகவும், பல்வேறு ஆய்வுக்குரிய கருத்துக்கள் உள்ளன.

தொல்காப்பியமும் - இலக்கணங்களும்: திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை, முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிடமொழி, தொன்மைத் திராவிடமொழி எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர். அம்மூலமொழியே தமிழ்மொழி. ஏனைய திராவிட மொழிகள் தமிழிலிருந்து தோன்ற வளர்ந்தவை.

தமிழ் நூல்களுல் இன்று நமக்குக் கிடைக்கும் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஒரு இலக்கண நூல் உருவாக வேண்டும் என்றால் அதற்குமுன் பழமையான இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பல் என்பதுதான் அறிவியல். எனவே தொல்காப்பியத்திற்கும் முன்பே பழமையான இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் தமிழ் பழமையான செம்மொழி என்பது உறுதியாகிறது.

செம்மொழிக்குறுகளும் தமிழ்மொழியும்: தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய - இலக்கண வளம், சிந்தனைச் செம்மை, கலை - பண்பாட்டு வளம், இவற்றுடன் பல்வேறு நாட்டில் பேசப்படும் மொழியாக விளங்கும் மொழியே செம்மொழியாகும். இவையே செம்மொழிக்கான (Classical Language) கூறுகளாகவும் கருதப்படுகின்றன.

மேற்கொண்ட அளவுகோள்களில் உள்ள அனைத்தும் தமிழ்மொழியில் காணப்படுவதால் தமிழே மிகச்சிறந்த செவ்வியல் மொழியாகும்.
தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழராகிய நமது கடைமையாகும். இதனை உணர்ந்து தமிழின் சீரிளமையைக் காக்க, என்றும் பாடுபடுவோம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் சில வினாவிடைகள்:
* மொழிகள் பல தோன்றி வளர அடிப்படையான மொழியை மூலமொழி என்பர்.

* இந்தியாவை மொழிகளின் காட்சிச்சாலை எனக் குரிப்பிட்டவர் ச.அகத்தியலிங்கம்

* ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும்மொழியை கிளைமொழி என்பர்.

* தமிழ்மொழியிலுள்ள மிகப் பழைமையான நூல் தொல்காப்பியம்.

* திராவிடம் என்னும் சொல்லை உருவாக்கியவர் - குமரிலபட்டர்

* இலெமூரியாக் கண்டம் - கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம்.

* இந்தியாவில் மொத்தம் பன்னிரண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள், முந்நூற்று இருபத்தைந்து மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்புத் தெரிவிக்கின்றது.

* யுனஸ்கோ நிறுவனம், அழிந்து வரும் பண்டைய தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

* திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ராபர்ட் கால்டுவெல்.

* திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தவர் - ராபர்ட் கால்டுவெல்

 ராபர்ட் கால்டுவெல் பிறந்த ஆண்டு 1814
அயர்லாந்தின் கிளாடி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார்.
இவர் பதினாறு வயது வரை ஆங்கில இலக்கிய இலக்கணங்களைக் கற்றறிந்தார்.

இருபதாம் வயதில் இலண்டன் சமயத் தொண்டர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கே சர். டேனியல் சேண்ட்ஃபோர்டு என்பவர் கிரேக்கமொழியுடன், உலகின் * ஏனைய செம்மொழிகளுடன் ஒப்பிட்டுப் பாடம் நடத்தியதே பின்னாளில் இவரை மாபெரும் ஒப்பிலக்கண அறிஞராய் ஆக்கியது.

 ராபர்ட் கால்டுவெல் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விலங்கியது கண்டு லண்டன் சமயத்தொண்டர் சங்கம், இந்தியாவின் தென் பகுதியில் கிறித்துவ சமயப் பணியாற்ற அனுப்பி வைத்தது.

1823 ஆம் ஆண்டு கால்டுவெல் சென்னை வந்திறங்கினார். சென்னையில் தமிழறிஞர்களாயிருந்த துரூ, உவின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலியோர் நட்பு கிடைத்தது.

 பாண்டி நாட்டின் சிறப்பைக் கேட்டறிந்த கால்டுவெல் சென்னையிலிருந்த கால்டுவெல் சென்னையிலிருந்து பாண்டி நாட்டிற்கு நடந்தே செல்வதென முடிவெடுத்தார்.

தரங்கம்பாடி சென்று டேனிஷ் கழகத்தார் ஆற்றிய சமயப்பணிகள், தமிழ்பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

- தரங்கம்பாடியிலிருந்து தஞ்சைக்கு சென்றார். அங்கே நெல்லையில் பிறந்த வேதநாயக சாஸ்திரிகளின் தொடர்பு கிடைத்தது. அந்நட்பு தமிழ் கீதங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியது.

பிறகு காவிரிக்கரையின் திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், கண்டு ரசித்து நீலகிரி சென்றார். ஸ்பென்சர் என்ற சமயக்குருவுடன் ஒரு மாதம் தங்கி இருந்தார்.

பிறகு மதுரை வந்து, மீனாட்சியம்மன் கோயில் அழகையும், பாண்டி நாட்டின் பைந்தமிழ் சிற்ப்பையும் நேரில் கண்டும், கேட்டும் இன்புற்று பின் நெல்லைச் சீமையின் - அழகிலும், தமிழிலும் தன்னை இழந்து நாசாரத் வழியாக இடையன்குடி சென்றடைந்தார்.

இடையன்குடியை சீர்செய்தார். 1843 ஆம் ஆண்டில் இவருக்கு எலிசா என்னும் நாகர்கோவில் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இரு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையுமாய் மூன்று செல்வங்கள் பிறந்தன.

இடையன்குடிப்பகுதியின் செம்மண்ணான குறுமணலை வியன்னா நகர ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிவைத்தார். உலகில் வேறெங்கும் இதுபோன்ற செம்மண் இல்லையென்று நிரூபித்து தாமிரபரணியாற்றுக்கும், திருநெல்வேலிக்கும் பெருமை சேர்த்தார்.

இடையன்குடிப்பகுதியில் இருந்த ஆறாயிரம் கிறித்தவர்களை பத்தாயிரம் கிறித்தவர்களாக மாற்றம் செய்தார்.

இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் 1856 இல் வெளியானது. இதனால் திராவிட மொழிகளின் பெருமையையும், இவருடைய பெருமையையும் உலகறிந்து போற்றியது.

இப்புத்தகத்திற்காக இலண்டன் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

மேலும் கால்டுவெல் திருநெல்வேலிச் சரித்திரம், தாமரைத் தடாகம், ஞானஸ்நானம், நற்கருணை முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.
பிறகு தன்னுடைய முதுமைக் காலத்தில் கொடைக்கானல் சென்று வாழ்ந்து வந்தார்.

இறைபணி, சமயப்பணி, மொழிப்பணி, ஏழைகளுக்கு எழுத்திறிவிக்கும் பணிக்கான ஆலயங்கள் கட்டிய பெருமையும் இராபர்ட் கால்டுவெல்லுக்கு உண்டு.

திருநெல்வேலியில் கட்டிய கிறித்துவக் கோயிலும், கொடைக்கானலில் கட்டிய தேவாலயமும் இவருக்கு இறவாப்புகழைத் தந்தன.

இருதியில் இப்பெருமகன் 1891 இல் ஆகஸ்ட் 28 ஆம் நாள் கொடைக்கானலில் மறைந்தார். இவருடைய விருப்பப்படி இவருடைய உடல் இடையன்குடி கொண்டுவரப்பட்டு, அங்கு அவர் கட்டிய ஆலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இவரை கால்டுவெல் ஐயர் என்று தமிழகம் அழைத்தது. அதனால் தான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரா.பி.சேதுப்பிள்ளை ஐயர் தம் பெருமை அளவிடப்போமோ என்று புகழ்வதற்குக் காரணமாயிற்று.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி