நூற்றுக்கு நூறு எனும் அபத்தம்! ரா.தாமோதரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

நூற்றுக்கு நூறு எனும் அபத்தம்! ரா.தாமோதரன்


'ஆயிரம் பேர் சென்டம் - மகிழ்ச்சியில் கல்வித்துறை''

தமிழ், கணிதம், வேதியியல் பாடத்திலும் மாணவர்கள் அதிக சென்டம் எடுத்திருக்கிறார்கள்.'

சில நாட்களுக்கு முன் இந்த இரண்டு செய்திகளை வாசித்தபின்தான் எனக்கு நமட்டுச் சிரிப்பு வந்தது.தமிழ் விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சரியாக எழுதவில்லை. அதெப்படி? மாணவர்கள் சரியாக எழுதியிருந்ததால்தானே நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறார்கள் என்று பதில் வரலாம். ஆனால் திரும்பவும் சொல்கிறேன் - "விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சரியாக எழுதவில்லை." எப்படி?அறிவியல் மற்றும் கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுப்பது சாதனை அல்ல.

இயல்பான ஒன்று. கணிதத்தைப் பொறுத்தவரை, படிகள் மற்றும் விடை சரியெனில் நூறு கிடைத்துவிடும். அறிவியலில் எழுத்துப்பிழை பார்ப்பதில்லை. ஆக்சிஸன் என்றாலும் அக்சிசன் என்றாலும் ஒன்றே. அதாவது உச்சரிப்பு மட்டுமே தேவைப்படலாம். அறிவியல் என்பது மொழி அல்ல. அது ஒரு சிந்தனைக்குட்பட்ட பாடம் என்பதால், மொழிப் பிரச்னை அதில் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், தமிழ் அப்படியில்லை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே.தன் பிள்ளை / மாணவர் தமிழில் யாரும் எடுக்க முடியாத நூறு எடுத்துவிட்டார் என்று ஆசிரியர் / பெற்றோர் சந்தோஷப்படலாம். உண்மையில் இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இல்லை. நாம் வருத்தப்படவேண்டும். ஏன்?காலங்காலமாக ஏதாவது ஒரு தனியார் குறிப்பேட்டைத்தான் (நோட்ஸ்) தமிழ் பண்டிட்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். (பரிந்துரைக்காத ஐயாக்களுக்கு,அம்மாக்களுக்கு வாழ்த்துகள்) அவர்கள் பரிந்துரைத்த குறிப்பேட்டைப் பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். பெற்றோர் வாங்கித் தந்த குறிப்பேட்டை டப்பா அடித்து, மாணவர்கள் கக்கி, முழு மதிப்பெண் பெற்று எல்லாரிடமும் வாழ்த்து பெறுகிறார்கள்.

கிளிப்பிள்ளைப் போல் அட்சர அட்சரமாகத் தவறில்லாமல் எழுதிவிடுகிறார்கள் புத்திசாலிகள். இதற்கு நாம்எப்படி பெருமைப்பட்டுக் கொள்ளமுடியும்?இப்போது பத்தாம் வகுப்புத் தமிழ் விடைத்தாள் திருத்திக்கொண்டிருக்கிறேன். சில விடைத்தாள்கள் நூறு அருகில நெருங்கிவிடும்போது, சக ஆசிரியர்கள் பயந்து என்னிடம் பார்வைக்குத் தருவார்கள். மொழி என்னும் பூதக்கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, விடைகளில் உள்ள சந்திப்பிழை, ஒற்றுப்பிழை, தொடர்பிழை தெரிந்துவிடும். சுழித்துவிடுவேன். தேர்வர் நூறிலிருந்து சருக்கி 90 அருகில் வந்திடுவார். பிறகென்ன நூற்றுக்கு நூறு கனவு அம்போதான். எனவே பெரும்பாலான தமிழ் பண்டிட்கள் தவற விடுவது, இந்தப் பிழைகளைக் கண்டுகொள்ளலாமல் விட்டுவிடுகிறார்கள. (நாங்கள் அப்படி இல்லை என்கிற தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்). திருத்தப்பட்ட விடைத்தாள்கள் விடைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன. எனவே இரண்டு விஷயங்கள் தென்படுகின்றன. ஒன்று, தனியார் குளிப்பேடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதை மாணவர்கள எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டிலுமே தவறு நிகழ்ந்திருக்கிறது.

எப்படி?.தேர்ச்சி இலக்கு 100 சதவீதம் என்பது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம், மொழிப்பாடத்தில் நூற்றுக்கு நூறு. அப்படி எனில் யார்தான் நூற்றுக்கு நூறு எடுப்பார்கள்? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.மொழிப்பாடத்தைப் பொறுத்தவரை, தமிழ் முதல் தாளில் வினா-விடைகள் மட்டுமே உண்டு. அதில் மனப்பாடமும் அமையும். இந்தப் பகுதியில், பத்திப் பத்தியாகமனப்பாடம் செய்து, அப்படியே பிழையில்லாமல் கக்கினால் நூறு என்பது சாத்தியமே. இதில் மாணவனின் மொழித்திறன் அறியப்படுவதில்லை. அவருடைய நினைவுத்திறன் மட்டுமே வியக்கப்டக்கூடியது. இப்படிப்பட்ட மாணவர் ஒரு செல்ல கிளிப்பிள்ளை. அவ்வளவே.இரண்டாம் தாள், அதிகம் சவாலானது. அதாவது படைப்புத் திறன் மிக்கது. கவிதை எழுதுதல், பொதுக்கட்டுரை, துணைப்பாடக்கட்டுரை, கடிதம் எழுதுதல் போன்றவை இதில் அடக்கம். இப்பகுதியிலும் மாணவர்கள் தனியார், ஆசிரியர் குறிப்பேட்டைப் பயன்படுத்திக் கக்கி விடுகிறார்கள். திருத்தும் ஆசிரியர்களும் சந்தோஷத்தில் தவறு செய்து மதிப்பெண் அள்ளி வீசுகிறார்கள்.

எனவே விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை என்ற வரி உண்மையாகிவிடுகிறது.எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியாகக் கவிதை எழுதுவது, பொதுக்கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது என்பது ஈ அடிச்சான் காப்பிதானே. இதற்கு ஏன் ஆசிரியர்கள் முழு மதிப்பெண் தருகிறார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள்எழுதிய விடைகளில் உள்ள எல்லாப் பிழைகளையும் தமிழ் இலக்கணம் நன்கு தெரிந்த (பல தமிழ் ஆசிரியர்களுக்கு இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத்தெரியாது) ஆசிரியர்கள் மிகச் சரியாகத் திருத்திவிடுவாரக்ள். அவர்களிடம் நூற்றுக்கு நூறு ஜம்பம் பலிக்காது.தமிழ் வினாத்தாளில் முதலிலேயே ஒரு எச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது. “விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல்வேண்டும்” என்று. உண்மையில் உங்கள் பிள்ளை / மாணவர் சொந்த நடையில்தான் எழுதுவாரா என்ற கேள்வியைப் பெற்றோரும் ஆசிரியரும் தமக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும்.தனியார் குறிப்பேட்டையோ, ஆசிரியரின் விடையையோ நகல் எடுத்து எழுதுவது தவறான செயல். ஒரு மாணவரின் தனிப்பட்ட மொழி ஆளுமை காணாமல் போகிறது. மொழிச்சிந்தனை ஒன்று அறவே இல்லாமல் போகிறது. நூற்றுக்கு அருகில் வரும் மாணவரை அழைத்து, புத்தகத்தில் இல்லாத ஒரு செய்தியைச் சொந்த நடையில் எழுதச் சொன்னால்போதும், மாணவர் நிலை என்ன என்பது நமக்குப் புரிந்துவிடும்.சொந்த நடையில் எழுதப்படாத எந்தவொரு விடைக்கும் நாம் முழுமதிப்பெண் அளிப்பது தவறான செயல். மொழியின் ஆளுமை என்பது சிந்தனைவயப்பட்டது.

அவனுடைய மொழி ஆளுமையை அறிந்து கொள்ளவே கவிதையும் கட்டுரைகளும் கடிதமும். இதில் சொந்தநடை இல்லாதபோது, எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் தமிழ்ப் பண்டிட்கள் எப்படி நூறு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே, விடைத்தாள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்றுதானே அர்த்தம். இந்த தவறைத் திரும்ப திரும்ப தமிழ்க்கூறும் நல்லுலக ஆசிரியர்கள் ஏன் செய்கிறார்கள்? என்றுதான் தெரியவில்லை.அப்படியெனில் ஒரு மாணவர் சொந்தநடையில் விடைகளை, இலக்கணப் பிழையில்லாமல் எழுதும்போது, முழுமதிப்பெண் வழங்கலாமா? என்ற கேள்வி வரலாம். அதுவும சாத்தியமில்லை. ஒரு மாணவனின் கட்டுரை, கவிதை மீதான மதிப்பீட்டுப் பார்வை ஒவ்வொரு ஆசிரியருக்கும் வெவ்வேறாக அமையும்போது, நூற்றுக்கு நூறு சாத்தியமில்லை. பொதுக்கட்டுரையும் சரி, கவிதையும் சரி விரிவானவை, திறந்தவெளிக்கானவை. அங்கே முழுமையான விடை என்பது சாத்தியமில்லை.

அது கணிதம் அல்ல என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும். எனவே நூற்றுக்கு நூறு எப்போதும் சாத்தியமில்லை.இதையெல்லாம் மீறி, வெறும் டப்பா விடைகளுக்கு நூற்றுக்கு நூறு என்று கல்வித்துறையும் பெற்றோரும் மார்தட்டிக்கொள்வது வேதனைக்குரியது, சிரிப்புக்குரியது, அவமானத்துக்குரியது.உங்கள் பிள்ளையால் சொந்தநடையில் தமிழை எழுத முடியாதபோது, நீங்கள் தயவு செய்து சந்தோஷப்பட வேண்டாம். 100-ல் இருக்கும் பூஜ்யம், உங்கள் பிள்ளையின் மொழித்திறனாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.எனவே திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன் - "விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சொந்தமாக எழுதவில்லை.

6 comments:

  1. i like this write, you are justified your subject.good!!

    ReplyDelete
  2. This is sheer non sense and I want to strongly condemn Mr Dhamaodharan (of course with due respect). How is that? You will give a questions paper in which a student cannot score 100. This is a big problem with language teachers. You expect your student to write in style even M.Phil students cannot do. How many of you (you = teachers) write your own thesis Mr Dhamodharan? Please understand this... How can you measure the style of the student. This is utter nonsense. There is no methodology in this WHOLE WORLD to measure/assess the writing style of the student. If getting 100 in the current question paper is non-sense for you, then please create an assessment style in which writing style can be measured. DO NOT COMPLAIN LIKE POLITICAL PARTIES. Please share your views on this. If you want to reply me directly you can slap me through shankarsense123@gmail.com

    ReplyDelete
  3. Dear Mr.Damodharan ! I agree with your article and like to say that no one is perfect in language even in your mother tongue . Am teacher in english I can't agree if someone is given centum in language either english or tamil .A teacher of language can easily find a mistake spelling ,grammar,syntax, tenses and so on .
    When students memorize a content and reproduce in the exam it is ridiculous to give centum . This is high time to think of imparting creativity and innovation to think and write .Instead of copying bazaar guides and notes .

    ReplyDelete
  4. Enna senjalum kutram solra ungala madhiri aalungalala dhan pavam romba pullainga paazha poranga sir. Sey to say this sir. Oruthara paaratala naalum Paravalla. Ipdi polamburadha niruthunga. Tamil film heroes madhiri Neenga mattum nallavaru matha ellarum onnum Theriyadhavanga apdingra image a vuruvakadheenga pls

    ReplyDelete
  5. 1.blue print should not be given
    2. question paper pattern shoul not be too easy
    3. We should maintain quality not quantity
    4.about can not write his name in tamil but he will get pass mark ,what is the use of exam
    WE SHOULD REALISE OUR MISTAKE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி