தமிழ்தாத்தா உ. வே.சா அவர்களின் நினைவுதினம் இன்று.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2014

தமிழ்தாத்தா உ. வே.சா அவர்களின் நினைவுதினம் இன்று....



தமிழ் தாத்தா என்று அனைவராலும் அழைக்கப்படும் அன்புக்குரியவர் உ. வே.சாமிநாதையர்.



உ. வே. சாமிநாதையர் (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன்) சாமிநாதன் சுருக்கமாகஉ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி   3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

கல்வி

உ.வே.சா தனது தொடக்கத்தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளைஅவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

ஓலைச்சுவடிகளின் மீதான தீராதஆர்வம் 

உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் சீவக சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா என முதலியார் வினவினார்.தனது ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார். இராமசாமி முதலியார் உ.வே.சா வுக்கு அளித்த சமண சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.

இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த “ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர்” ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.
90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.

என்சரிதம் மற்றும் இதர படைப்புகளும்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.
உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரிதம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.
முதன் முதலில் பதிப்பித்த நூல் "சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்காலநூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.


சிறப்புகள் 

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார்.

இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான்தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார்.

உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது

இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.

1 comment:

  1. ஈராக் முன்னால் அதிபர் சதாம் உசேனின் பிறந்தநாளும் இன்று (28/4/1937) தான்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி