பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2014

பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு!


கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத வேண்டும்.
தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தை அமல்படுத்தாததால், தமிழ் அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழிப் பாடத்தை, முதல் பாடமாக படித்து வருகின்றனர். இவர்கள், எப்படி, தமிழை, பொது தேர்வாக எழுதுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், தற்போது வரை, தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே, பத்தாம் வகுப்பு பொதுதேர்வை எழுத முடியும் என்ற நிலை இருக்கிறது. மொழிப்பாடமாக, பிரெஞ்ச், இந்தி, ஜெர்மன், உருது, மலையாளம் ஆகிய பாடங்களை, முதல் பாடமாகவும், இரண்டாவது பாடமாக, ஆங்கிலத்தையும் தேர்வு செய்கின்றனர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை, மற்ற மாணவர்களைப் போல் படிக்கின்றனர்.

கட்டாய தமிழ் சட்டம் அமல்:

'இந்த நிலையை மாற்ற வேண்டும், குறைந்தபட்சம், பத்தாம் வகுப்பு வரையாவது, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும்' என, கருதி, முந்தைய தி.மு.க., அரசு, நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தை, 2006ல் அமல்படுத்தியது. 2006- 07ல், முதல்வகுப்பிற்கு, தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இது, ஒவ்வொரு ஆண்டும், படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி, 2006 - 07ல், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவியர் அனைவரும், வரும், 2015 - 16ல் (வரும் பொதுத்தேர்வுக்கு, அடுத்த பொதுத்தேர்வு),பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதுவர்.

அமல்படுத்தாத பள்ளிகள்:

இச்சட்டத்தின்படி, 2006 - 07ல், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும், தமிழை படிக்கின்றனரா என்பதை, அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. தனியார் பள்ளிகளும், சட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால், தமிழ் அல்லாத பிற மொழியை, தாய் மொழியாக கொண்ட மாணவ, மாணவியர், தமிழை படிக்க முடியாமல், அவர்களின்தாய்மொழி பாடத்தையே, ஒரு பாடமாக படித்து வருகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி, தேனி, வேலூர் உள்ளிட்ட, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர், தமிழை படிக்க முடியாமல், மலையாளம், தெலுங்கு, உருது, கன்னடம் ஆகிய மொழிகளில், மொழிப்பாடத்தை படித்து வருகின்றனர். இப்போது, '2015 - 16ல் நடக்கும் பொது தேர்வில், தமிழை, முதல் பாடமாக கண்டிப்பாக எழுத வேண்டும்' என, கல்வித்துறை, உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் கூட்டத்தில் விவாதம்:

கடந்த, 27ம் தேதி, சென்னையில் நடந்த கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து, விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய மெட்ரிக்பள்ளிகள் இயக்குனர், பிச்சை, 'கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, 2016 பொது தேர்வில், தமிழை, முதல் பாட தேர்வாக, அனைத்து மாணவர்களும் எழுதவேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பேட்டி:

இது குறித்து, இயக்குனர், பிச்சை, நேற்று கூறியதாவது: கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, 2014 - 15 கல்வி ஆண்டில், 9ம் வகுப்பு மாணவர்கள், தமிழை, ஒரு பாடமாக படிப்பர்.இவர்கள், 2015 16ல் நடக்கும் பொது தேர்வில், தமிழை, முதல் பாட தேர்வாக, கண்டிப்பாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத, இதர மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும். இதனால், எல்லை மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் பாதிப்பர் என, கூறுகின்றனர். ஆனால், சட்டத்தின்படி, அவர்கள், தமிழை, முதல் பாட தேர்வாக எழுதி தான் ஆக வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, ஐந்துதேர்வுகளை எழுத வேண்டும். இதை, சுற்றறிக்கையாக, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், இப்போதே தெரியப்படுத்தி உள்ளோம். இவ்வாறு, பிச்சை கூறினார்.

கோர்ட்டுக்கு செல்வோம்:

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறுகையில்,''கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தால், எல்லையோர மாவட்ட மாணவர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த விவகாரத்தை, கோர்ட்டுக்கு கொண்டு செல்வோம்,'' என்றார்.

'தேர்வெழுத அனுமதி கிடையாது':

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஜெயக்குமார் கூறியதாவது: தமிழ், முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டும் என, முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில, 'ரேங்க்' தரப்படுவதில்லை. இவ்வாறு, ஜெயக்குமார் கூறினார்.

2 comments:

  1. appadiye govt schoolil padikkum manavarkalukke govt job munnurumai ennru sattam vanthal naduthara makkalin varumanam minjum

    ReplyDelete
  2. appadi oru sattam vandhaal private school kku velai kidaiyadhu govt school grade uyarum result varum arasiyale Peru matram varum etc nalladhai ellaam ivanga seyyamattanga boss....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி