தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு: கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு: கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு!


கொடைக்கானலை சேர்ந்த பெண்ணிற்கு கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச்சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால், பெல்ஜியம் தூதரகம் விசா மறுத்தது.
தற்போது அப்பெண் அரசிதழில் பெயர் மாற்றம் செய்துள்ளபடி, பிறப்புச் சான்றில் திருத்தம் செய்து வழங்குமாறு, நகராட்சிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.கொடைக்கானல் ஜேம்ஸ் தாக்கல் செய்த மனு: என் மகள் ஏஞ்சலின் மேரி பிரியதர்ஷினி. அவர், 1979ல் பிறந்ததை, கொடைக்கானல் நகராட்சியில் பதிவு செய்தோம். அவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 'பிரியா' என அழைக்கின்றனர்.

பள்ளி, பல்கலை சான்றிதழ்கள், அடையாள அட்டை, பாஸ்போர்ட்டில் 'பிரியா' என பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எங்களின் அறியாமையால் நேர்ந்த தவறு. பிரியாவிற்கும், ஜெரால்டு பிரேம்குமாருக்கும் திருமணம் நடந்தது. தொழில் தொடர்பாக ஜெரால்டு பிரேம்குமார், பல்வேறு நாடுகளுக்குச் செல்வார். தற்போது பெல்ஜியத்தில் உள்ளார்.பிரியாவை அழைத்துச் செல்ல, பெல்ஜிய தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தார். பள்ளி, பல்கலை சான்று, பாஸ்போர்ட்டில் 'பிரியா' எனவும், பிறப்புச் சான்றில் ஏஞ்சலின் மேரி பிரியதர்ஷினி என உள்ளதால், விசா வழங்க மறுத்து விட்டனர். அரசிதழில் 'பிரியா' என பெயர் மாற்றம் செய்தோம். அதனடிப்படையில் பிறப்புச் சான்றில் திருத்தம் செய்து வழங்குமாறு, கொடைக்கானல் நகராட்சி கமிஷனர், பதிவாளரிடம் (பிறப்பு, இறப்பு) விண்ணப்பித்தோம். நடவடிக்கை இல்லை. சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.சுப்பையா முன்,விசாரணைக்கு மனு வந்தது. அரசு வக்கீல் வாதிடுகையில், "பிறப்புச் சான்றில் உள்ளபெயரில் திருத்தம் செய்ய, விதிகளில் இடமில்லை,” என்றார்.

நீதிபதி உத்தரவு: அனைத்திற்கும் சட்ட விதிகளில் இடமிருக்கும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. பெயர் மாற்றம் மேற்கொள்ள தகுந்த காரணங்கள் இருந்தால் போதும். கல்விச்சான்றிதழ்களில் பெயர்கள் ஒரே மாதிரி உள்ளன. அரசிதழில் 'பிரியா' என பெயர் மாற்றம் செய்துள்ளனர். இதனால், பிறப்புச் சான்றில் பெயர் மாற்றத்திற்கான திருத்தம் மேற்கொள்ள தடையில்லை. மனுதாரரின் மகளுக்கு, மூன்று வாரங்களுக்குள் கொடைக்கானல் நகராட்சி சான்று வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி