பள்ளிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் விளையாட்டுப் பாடங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

பள்ளிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் விளையாட்டுப் பாடங்கள்.


சுவர் இருந்தால்தான், சித்திரம் வரைய முடியும்" என்ற பழமொழியின் அர்த்தத்தை ஆழமாக உணர்ந்தவர்கள், உடலுக்கு முக்கியத்துவம் தராமல் இருக்க மாட்டார்கள்.
தேக ஆரோக்கியத்தை வலுப்படுத்தத்தான், தமிழர்களுக்கு என்று பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், மல்லர் கம்பம், கபடி, இளவட்டக்கல் போன்ற விளையாட்டுகள் நம்மை அடையாளப்படுத்தின.இந்த விளையாட்டுகளை மிஞ்சி, கொஞ்சம், கொஞ்சமாக தலையெடுக்க ஆரம்பித்த தடகளம், கிரிக்கெட், கால்பந்து போன்றவை வேகமாக வளர்ந்தன. தற்போது, உலக அளவில் கால்பந்து விளையாட்டு ஹீரோவாக இருந்தாலும், இந்திய அளவில், கிரிக்கெட்தான் பிரபலம். கடந்த வாரம், கோவையில், கிரிக்கெட் வீரர் தோனி, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வந்தபோது, இவர்களை பார்க்க திரண்ட கூட்டம், இதை உறுதிப்படுத்தியது.

படிப்புதான் அடுத்த கட்டத்துக்கு ஒருவனை உயர்த்துகிறது என்ற மாற்று சிந்தனையால், பல பள்ளிகளில், உடற்பயிற்சிக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தையும், மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுகின்றனர். மைதானத்தில் நடக்க வேண்டிய வகுப்பு, கரும்பலகையில் வெள்ளை எழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது. விளைவு, மன உளைச்சல், கோபம், உடலை கட்டுக்கோப்பாக வைக்கத் தவறுதல் என, பல விஷயங்கள் அரங்கேறுகின்றன.விளையாட்டை மேம்படுத்தும் வகையில், அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய், வெள்ளி வென்றால் ஒரு கோடி, வெண்கலம் வென்றால் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் வென்றால் முறையே, ஒரு கோடி, 50 லட்சம், 25 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட, 5 லட்சம், 3 லட்சம், 2 லட்சம்ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது.

இதேபோல, வேலை வாய்ப்புத் துறையிலும், 10 ஆயிரம் பேரில், ஆயிரம் பேர், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக தங்கள் மகனோ, மகளோ உருவாக வேண்டும் என்று நினைக்கும் பலரால்தான், தமிழக விளையாட்டு துறையில் அவ்வப்போது சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்த, பெற்றோரும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும். விளையாட்டுகளுக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை அரசும் முழுமையாக செய்து தர வேண்டும். அப்போது, ஆசிய போட்டி முதல் ஒலிம்பிக் போட்டி வரை, தமிழக வீரர்களும் பதக்கம் பெறக் கூடிய சூழல் உருவாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி