தரமான கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிப்பதால் தேசிய நல்லாசிரியர் விருது : மதுரை ஆசிரியர் பெருமிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

தரமான கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிப்பதால் தேசிய நல்லாசிரியர் விருது : மதுரை ஆசிரியர் பெருமிதம்

மாணவர்களின் கல்விக்கு அப்பாற்பட்டு அவர்களின் ஒழுக்கத்தின் மீதும் கவனம் செலுத்தி வருவதாலேயே தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளதாக மதுரை தலைமை ஆசிரியர் முத்தையா தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்தையாவிற்கு,48, தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே அவருக்கு மாநில நல்லாசிரியர் விருதும் கிடைத்துள்ளது.

அவர் கூறியதாவது: டி. கல்லுப்பட்டி அரசினர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றேன். ஆசிரியராக தேனி மாவட்டம் வருசநாடு ஒட்டணை கிராமத்தில் சேர்ந்தேன். பின் குறவகுடிக்கு மாறுதலாகி போலக்காபட்டியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். செம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றியபோது முதன் முதலாக செயல்வழிக்கற்றல் அறிமுகமானது. மாநில அளவில் பயிற்சி பெற்று மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்றுனராக பணியாற்றினேன். மாவட்ட அளவில் அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்க முற்பட்டதும் இங்குதான். 2008ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தது. தற்போது தேசிய அளவில் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

செம்பட்டி பள்ளியில் 80 மாணவர்கள் 4 ஆசிரியர்கள் நான் சேர்ந்த போது இருந்த எண்ணிக்கை, தற்போது 200 மாணவர்கள் 12 ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். மாணவர்களின் கல்வி மட்டுமல்லாது, அவர்களது ஒழுக்கத்தின் மீதும் கவனம் செலுத்தினால் தரமான கல்வி அவர்களுக்கு தானாக கிடைக்கும், என்றார்