‘குரூப் ஸ்டடி’ சரியா? தவறா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

‘குரூப் ஸ்டடி’ சரியா? தவறா?

‘குரூப் ஸ்டடி’ என்ற ஒரு விஷயத்தை, ‘படிப்பதாக கூறி ஏமாற்றும்‘ ஒரு வித்தை என்றே இன்றும் பலர் நினைக்கின்றனர்.

இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் ‘குரூப் ஸ்டடி’யில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. ஏனெனில் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கிறேன் என்ற போர்வையில், அரட்டை அடித்து நேரத்தை தங்களின் பிள்ளைகள் வீணாக்குகின்றனர் என்றே அவர்கள் கவலைப்படுகின்றனர்.

‘குரூப் ஸ்டடி’ என்ற வெற்றிகரமான பயிற்சியை சரியாக அமைத்துக்கொள்ளவில்லை எனில், பெற்றோர்களின் கவலை நிஜமாகிவிடும். ஆனால் ‘குரூப் ஸ்டடி’, அதன் உண்மை அம்சத்தோடு மிகச் சரியாக மேற்கொள்ளப்பட்டால், அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

‘குரூப் ஸ்டடி’ என்பது தேர்வு நேரத்தில் மட்டுமின்றி, எல்லா காலங்களிலும், மாணவர் பருவம் முழுவதும் கடைபிடிக்கத்தக்க ஒரு வெற்றிகரமான அம்சம். சிறந்த நன்மையைத் தரும் ‘குரூப் ஸ்டடி’யை எவ்வாறு மேற்கொள்வது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இங்கே:
* ‘குரூப் ஸ்டடி’க்கு தகுந்த நபர்கள் அமைவது முதலில் மிக அவசியமானது. ஒரே வகுப்பில் அல்லது ஒரே பள்ளியில் படிக்கும் அல்லது அருகருகே வசிக்கும் மாணவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். படிப்பில் அக்கறையும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.

* ஒரு நல்ல ‘குரூப் ஸ்டடி’ என்பது மற்றொரு வகுப்பறை போன்றது. ஏனெனில் பல மாணவர்கள் சேரும்போது ஒரு பாடத்தில் தங்களின் தனிப்பட்ட புரிந்துணர்வுகளை பரவலாக பகிர்ந்துகொள்கின்றனர். ஒரு பாடத்தை படிக்க எடுத்துக்கொள்ளும்போது, எத்தனை மாணவர்கள் இருக்கிறார்களோ அத்தனை பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அந்த பாடத்தை அனைவரும் முடிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
முடிவில் பிரித்துக்கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் அவரவர்களுக்கு புரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் ஒரே பாடத்தில் பரவலான புரிதல் ஏற்படும். அந்த பாடத்தைப் பற்றிய பயமும் போகும். ஒருவேளை அதுசம்பந்தமான ஏதேனும் குழப்பங்கள் தோன்றினால், ஆசிரியரிடம் கேட்டு சரிசெய்துகொள்ள வேண்டும்.

* பகுதிகளைப் பிரித்துக்கொண்டு படிக்கும்போது, தங்களின் பகுதியை நன்கு படித்து தெளிவாக விளக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் ஆழமாகவும், கவனமாகவும் படிப்பார்கள். இதனால் ஒரு ஆரோக்கியமான படித்தல் போட்டி அங்கே உருவாகும். ஒருவருக்கு சரியாக தெரியாத விஷயம் மற்றவருக்கு நன்றாக தெரிந்திருக்கும். இதன்மூலம் பாடத்தில் எழும் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

* ‘குரூப் ஸ்டடி’க்கு தேர்ந்தெடுக்கும் இடம் பற்றி யோசிக்க வேண்டியதும் முக்கியம். எந்த தொந்தரவும், இரைச்சலும் இல்லாத, கவனம் சிதறும் வகையிலான விஷயங்கள் இல்லாத இடமாக இருந்தால் மிகவும் நல்லது. ஒரு நல்ல அறையாகவோ, மொட்டை மாடியாகவோ மற்றும் ஒதுக்குப்புறமான மரத்தடியாகவோ இருக்கலாம்.

* ‘குரூப் ஸ்டடி’யில் தேர்வுக்கான ஒரு மாதிரி கேள்வித்தாளை உருவாக்கி நண்பர்களுக்குள் எழுதிப் பார்க்கலாம். அவற்றை மாற்றி மாற்றி திருத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான நேரத்தையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இதனால் ஒரு பயிற்சி தேர்வை எழுதிய அனுபவம் உங்களுக்கு கிடைத்து, தேர்வு பயம் அகன்றுவிடும். விடைத் தாள்களை மாறி மாறி திருத்திக் கொள்வதால் உங்களின் தவறுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படும்.

* ‘குரூப் ஸ்டடி’யில் ஈடுபடும் முன்பாக ஒரு குழு தலைவரை தேர்வுசெய்து கொள்ளுதல் நல்லது. அவர் குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பார். ஒவ்வொரு மாணவரும் மாறி மாறி குழுத் தலைவராக இருக்கலாம். ஆனால் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி