ஆங்கில மோகத்தால் தமிழை ஒதுக்குவது தவறு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

ஆங்கில மோகத்தால் தமிழை ஒதுக்குவது தவறு

ஆங்கில மொழியின் மீது உள்ள மோகத்தால் கலாசாரம், பாரம்பரியமிக்க தமிழ் மொழியை ஒதுக்குவது தவறானது என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.


சென்னை பெரம்பூரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா மெட்ரிகுலேசன் பள்ளியின் 16-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிழ்ச்சியில், பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கலந்து கொண்டு, பள்ளியின் நிறுவனர் மறைந்த ஜெய்கோபால் கரோடியாவின் சிலையைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

                                       


ஆங்கிலத்தில் பேசுவதுதான் மேலானது. அதுதான் அனைத்துக்கும் முதுகெலும்பு என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தப் பொய்யான மோகத்தால் வீடுகளில்கூட தமிழ் பேசுவது குறைந்து வருகிறது. 

கடந்த மூன்று மாதங்ளுக்கு முன்பு ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அடுத்த 25 ஆண்டுகளில் உலகில் உள்ள பல மொழிகள் அழியும் சூழல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நம் தமிழ் மொழியும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது என நாம் விரும்புகிறோம்.

ஆங்கில மொழியால் பிற நாடுகளுடன் தொடர்பு கொள்ள, உலக அறிவைப் பெற, விஞ்ஞானம் சார்ந்த தகவல்களை அறிய வேலைவாய்ப்பைப் பெற முடியும். ஆனால் பண்பு, கலாசாரம், பாரம்பரியம் போன்ற வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற முடியாது.

 தமிழ் மொழியில் ஆத்திச்சூடி, திருக்குறள், திருவாசகம், தேவாரம் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான பல நூல்கள் இருக்கின்றன. தமிழ் மொழியைச் சிறப்பாகக் கற்பதன் மூலமே இவற்றை அறிய முடியும். அமெரிக்காவில் 4 சதவீதமே உள்ள ஆசிய நாட்டவர் அங்குள்ள உயர் கல்வி நிலையங்களில் 35 முதல் 40 சதவீதம் இடங்களைப் பெற்றுள்ளனர். இப்படி ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக் காரணம் குறித்து அறிய கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பெரியவர்களை மதிக்கும் பண்பே என்பது தெரியவந்தது. 

புத்தகங்களை சரஸ்வதியாவும், கடவுளாகவும் மதிக்கும் பண்பும், குடும்பமாக வாழ்வது,  பெரியவர்களைப் பாதுகாப்பது போன்ற பழக்கங்கள் நம் நாட்டில் ஆழமாக வேரூன்றி உள்ளன. இவையெல்லாம் மேலை நாடுகளில் கிடையாது.
இதுபோன்ற சிறந்த பண்புகளைப் போதிக்கும் தமிழ்மொழியை ஆங்கில மோகத்தால் ஒதுக்குவது தவறு.

அதேபோல பள்ளிகளில் மாணவர்களுக்கு தேச பக்தியையும் தமிழ்ப் பற்றையும் போதிக்க வேண்டும் என்றார் எஸ்.குருமூர்த்தி.முன்னதாக பள்ளி அளவில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கும்,பாட வாரியாக முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளையின் அறங்காவலர் அசோக் கேடியா, அறக்கட்டளை உறுப்பினர்கள் மெய்யப்பன், சோமநாதன், ஹித்தீஷ் கனோடியா, முதல்வர் ஹேமமாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

24 comments:

  1. மணியரசனின் தொடர்ச்சியான முயர்ச்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நடந்தது என்ன..?
      2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர் 14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது. தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகை அளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறைய கூடாது 90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறி வந்தது.
      2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி "TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாக TET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90 மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே இட ஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.
      'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'
      அப்படி மீறியதால்
      "வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...
      அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.
      TET ல் 90 மதிப்பெண் பெற்றும் தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு பாதிப்படைந்த ஆசிரியர்கள் இன்று உயர்நீத த்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். உயர்நீதி மன்றம் நல்தீர்ப்பை வழங்கி பாதிப்படைந்த ஆசிரியர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

      Delete
  2. இந்தியாவில்தான் முதியோர்கள் அனாதை களாக விடப்படுகிறார்கள் வளந்த நாடுகளில் பராமறிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் பெற்றோர்களை கடவுளைப்போல் பார்த்துக்கொள்ளுகின்றனர்

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது தமிழ் இன்றும் வாழ்கிறது என்றால் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர் என்ற போர்வையில் இருக்கும் அரசியல்வாதிகளால் என்று அனைவரும் நினைகிறீர்கள் தமிழ் வாழ்வது அந்த தமிழ் கூட எழுத படிக்த் தெரியாத பாமர மக்களால் சேற்றில் கால் கைக்கும் உழவனால் கூலி வேலைபார்க்கும் வியர்வையின் சொந்தங்களால் தான் தமிழ் வாழ்கிறது அவர்கள் தான் பிற மொழிச் சொற்கள் கலப்பு இல்லாமல் ஆங்கில வர்த்தை சிறிதும் இல்லாமல் அந்த பாட்டாளி மக்கள் தான் தமிழ் மொழியில் பேசுகிறார்கள்

      இன்று கிராமங்களால் தான் தமிழ் மொழி அதிகம் பேசப்படுகிறது அவர்களுக்கு தமிழின் அருமைகூட அறியாமல் தமிழில் பேசும்போது
      அதன் அருமையை அறிந்த நாம் நம் வீட்டு பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் படிக்க வைத்து அவர்கள் அம்மா என்று அழைத்தால் எதோ கெட்ட வார்த்தை போல் அவர்களை பார்த்து உங்கள் பள்ளியில் என்ன சொல்லிக்குடுக்குறாங்க என கேள்வி கேட்கிறோம்

      மம்மி என்று சொன்னால் அந்த குழந்தையை வாரி அனைத்து முத்தம் தரும் மம்மிக்கள் இருக்கும் வரை தமிழை எத்தனை திருவள்ளுவர் வந்து பாடல் எழுதுனாலும் சரி எத்தனை உ.வே.சா வந்தாலும் தமிழை வளர்க்க முடியாது

      தமிழ் மொழி இனி வரும் காலங்களில் பேச்சு வழக்கு மொழியாகத்தான இருக்குமோ தவிற அதுவும் அதிகம் ஆங்கிலம் மற்றும் பிற மொழிச்சொற்களை கலந்து தான் பேசும் மொழியாகத்தான் இருக்கும் மற்றபடி தமிழை வளர்ப்பது கடினம்

      அத்தையையும் ஆங்கிலத்தில் ஆண்டி என்றும் பெரியம்மாவையும் ஆண்டி என்று தான் அழைத்து உறவுகளும் கலாச்சார பழக்க வழக்கங்களும் மறந்து இனி நமது பழம்பெருமை வாய்ந்த மொழியை மறக்கத்தான் போகிறோம் இதற்கு இன்னும் சில ஆண்டுகளே தான்


      பல நுாற்றாண்டுகளை கடந்து வந்த என் தாய் மொழி தமிழ் இன்னும் சில ஆண்டுகளில் அழியக்கூடிய அபாயம் மிக அருகில் வந்து விட்டது

      நமது அடையாளத்தையே இன்னும் சிறிது காலத்தில் அழித்து அடையாளமற்ற மனிதனை பழம்பெருமைகளை இழந்து அடையாளம் அற்ற ஓர் இனமாய் வாழப்போகிறோம்

      என்று கிராமங்கள் அழிந்து அவை நகரங்களை நோக்கி வருகிறோதோ அன்று அழிவுகாலம் தமிழுக்கு ஆரம்பம் இதனை தடுக்க முயற்சித்தாலும் பயன் குறைவு

      Delete
  3. யாரிந்த குருமூர்த்தி?

    ஆத்திச்சூடி "தையல் சொல் கேளேல்" என்று பெண்களை இழிவுபடுத்துகிறது. அதுதான் நம் கலாச்சாரம், பண்பாடு. அதைத்தெரிந்துகொண்டு நாம் பின்பற்றவேண்டுமா?

    குறளும் குறைந்ததில்லை. "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனெப் பெய்யும் மழை" என்று பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது. அதுமட்டுமில்லை. ஓரிடத்தில் "தொட்டணைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றணைத்தூறும் அறிவு" என்றும் மற்றோரிடத்தில் "நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்" என்று முன்னுக்குப்பின் முரணாகவும் விதியை வலியுறுத்திப் பேசுகிறது. இதைப் பின்பற்றவேண்டுமா?

    தேவாரத்தில் இன்று நாம் அனைவரும் புத்தபிரான் என்று ஏற்றுக்கொண்ட புத்தரைப் பின்பற்றியவர்களை சாக்கியப்பேய்கள் என்று திட்டுவதும் சிவனைத்தவிர பிறகடவுள்களை வணங்குவோரை நாக்கூசாமல் வைவதும் தடுக்கிவிழுந்தால் கிடைக்கும். அதுபோக சமணர்களைக் கொடூரமாகக் கழுவேற்றிய மன்னனைப் புகழ்ந்தும் பாராட்டியும் மொழியறிவு மிக்க பாடல்கள் வேறு. இதில் நாம் எதைக்கற்றுக்கொண்டு வாழ்வை செம்மைப்படுத்திக்கொள்ளவேண்டுமென்று குருமூர்த்திதான் விளக்கவேண்டும்.

    அதன் குறைகளை மட்டும் எடுத்து விமர்சிக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். நான் சொல்லவருவது யாதெனில் எல்லா மொழிகளிலும், நாடுகளிலும், கலாச்சார பண்பாடுகளிலும் நல்லது கெட்டது இரண்டும் அந்தந்த காலங்களின் தேவைகளுக்கேற்ப கலந்தும்கட்டியுமாகத்தான் இருக்கும். அதில் இன்றைக்கு பொருந்தாதவைகளை நாம் களைந்துகொள்ளத்தான் வேண்டும்.

    புத்தகங்களை சரஸ்வதியென்று மிதித்துவிட்டால் தொட்டுகும்பிட்டுப் போவதும் பெரியவர்களை 'யோவ் பெருசு' என்று மதிப்பதும்தான் நம் முன்னேற்றத்திற்கு காரணம்; அதற்கு தமிழ்மொழி அவசியம் என்றெல்லாம் என்ன வெட்டிப்பேச்சு இது?

    எனக்குத்தெரிந்து தமிழ்மொழியை வாழவைக்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் 99% பேர் ஸ்டெரெயிட்டா போய் லெப்ட் கட் பண்ண சொல்பவர்கள்தான். தமிழ்மொழியை வாழவைக்க ஆங்கிலத்தையும் மேலை சமுதாயத்தையும் குறைகூறித்தான் பேசவேண்டுமா?

    உ.வே.சாமிநாதய்யரின் 'என் சரித்திரம்' சுயசரிதையை வாசியுங்கள். அவரை ஏன் நீ ஆங்கிலம் படித்து உத்தியோகத்துக்குப் போகாமல் தமிழ்படிக்கிறாய் என்று அனைவரும் கடிந்து சொன்னதாக எழுதியிருக்கிறார். உடனே அவர் தன் தமிழறிவால் ஆங்கிலத்தை ஏசிக்கொண்டு திரியவில்லை. தமிழுக்கு என்ன செய்தால் அதன் தரம் உயரும் என்று தன் வாழ்வையே தமிழ் நூல்களை அச்சிட அர்ப்பணித்தார். மஹா மஹோ உபாத்யாயர் என்றால் ஆகச்சிறந்த ஆசிரியர் என்று பொருள்கொள்ளலாம். ஆசிரியர்களாகிய நீங்கள் அவர் வழியில் செல்லவேண்டும். குருமூர்த்தியின் குறுக்குவழியிலல்ல!

    தமிழைத்தரமாகக் கற்றுக்கொள்ளுங்கள். அதே தரத்துடன் ஆங்கிலம் உட்பட எத்தனைப் பிறமொழிகள் உள்ளதோ முடிந்தவரைக் கற்றுக்கொள்ளுங்கள். குருமூர்த்தியைப்போல் ஒருமொழி மற்றொரு மொழியை அழிக்கிறது என்று யாராவது சொன்னால் புன்சிரிப்புடன் கடந்துபோய்விடுங்கள். அதைப்பெரிய விஷயமாக பதிவிடாதீர்கள். நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. அருமையான சிந்தனை சிவானந்தம் அவர்களே.உங்கள் சிந்தனையில் முற்ப்போக்கு இருக்கிறது.மொத்தத்தில் சொந்தமாக சிந்திக்கிரீர்கள்.உங்களை போல் சிந்தனைகள் இன்று அதிகம் தேவைப்படுகிறது நிறைய பதிவுகளை செய்யுங்கள் அது பிறரதது சிந்தையை தூண்டுவதாக அமையட்டும் நன்றி சிவானந்தம் அவர்களே.

      Delete
    2. நண்பர் திரு சிவானந்தம் அவர்களே,

      """""ஆத்திச்சூடி "தையல் சொல் கேளேல்" என்று பெண்களை இழிவுபடுத்துகிறது. அதுதான் நம் கலாச்சாரம், பண்பாடு. அதைத்தெரிந்துகொண்டு நாம் பின்பற்றவேண்டுமா?"""""""

      இதென்ன இப்படி ஒரு தவறான விமர்சனம். உங்களது பதிலுக்கு மறுப்புரை எழுத விழைகிறேன்.......

      எழுதலாமா?

      Delete
    3. திரு சிவானந்தம் அவர்களே உங்களுக்கு நிறைய வாசிப்புப் பழக்கமும்,பல்துறை அறிவும் இருக்கிறது.அதிலெந்த மாற்றுக் கருத்துமில்லை.

      நான் இதை சொல்ல உங்களோடு நீண்ட காலம் பழகியிருக்க வேண்டுமென்று அவசியமில்லை.பாம்பின் காலை பாம்பரியும் என்பதைப் போல உங்களது சில வரிகளை வைத்தே கணக்கீட்டு சொல்லலாம்.

      ஔவையின் "தையல் சொல் கேளேல்" தையல் என்பதற்கு மேலோட்டமான பார்வையில் "பெண்" என்று பொருள் பொருள் படும். மேநாட்டு அறிஞர்கள் பலரை உதாரணமாகக் காட்டும் நீங்களும் மேலோட்டமான பார்வையை கொண்டிருக்கிறீர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

      'தையல்' எனும் சொல் ஒளவையார் வாழ்ந்த நாளில் கட்டழகுள்ள இளம்பெண்கள் எனக் குறிப்பிட்டு,'தையல் சொல் கேளேல்" என்றால் பொதுவாக பெண்கள் சொல்லைக் கேட்காதே என்பதல்ல,மோகத்தின்பால் அழகிய பெண்கள் வசம் சிக்கி அந்த மனமயக்கத்தில் அவர்கள் சொல்வதைக் கேட்காதே எனும் பொருளில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு தையல் எனும் சொல்லுக்கு அகராதிகளிலும் 'கட்டழகு இளம் பெண்' என்றுதான் குறிப்பிடப்படுகிறது.

      திருக்குறள் குறித்த உங்களது விமர்சனமும் இவாறானதே! அதற்கு விளக்கமளிக்க வேண்டுமானால் பெரும் பகுதி தேவைப்படும்.

      திருக்குறள் கருத்துக்கள் ஒன்றிலிருந்து ஒன்று முரண்படுகிறது என்று சொல்லி திருக்குறளோடு முரண் படும் நானறிந்த முதல் மனிதர் நீங்கள்தான்!

      நீங்கள் ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் மகாபாரத்தத்தை விமர்சித்து விடலாம்.ராமாயணத்தையும் விமர்சித்து விடலாம்.அதாவது பொருளளவில்..........

      ஆனால் குறளையும் அவ்வைக் கிழவியின் ஆத்திசூடியையும் இன்னும் பிற நூல்களையும் நீங்கள் மட்டுமல்ல வேறெந்தக் கொம்பனாலும் நெருங்கவே முடியாது.

      ஔவையே ஒரு பெண் , ஒரு பெண்ணே பெண்ணின் சொல்லைக் கேளாதே, என்று எழுதுவாளா?

      சைக்காலஜி(உளவியல்) அறிஞர்கள் பலரை உதாரணமாகக் காட்டிய நீங்கள் அவ்வைக் குறித்த விஷயத்தில் சைக்காலஜி பார்க்காமல் போனதுதான் விந்தை...

      இந்தியக் கலாச்சாரமும் பண்பாடும் தான் உலகளவில் சிறந்தது என்று நான் கூறவில்லை.உலகமே கூறுகிறது.மேநாட்டுக்
      கலாச்சாரத்தை விளக்க வேண்டுமானால் "தேவையற்ற" விளக்கங்களை எழுத வேண்டுமென்பதால் அதனைத் தவிர்க்கிறேன்.

      நீங்கள் பனைமரம் மட்டுமல்ல ஈச்ச மரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் அதுவும் கள்தான் என்று சொல்வீர்கள் போல....... குருமூர்த்தி குறித்த உங்களது விமர்சனமும் அவ்வாறே............

      Delete
    4. சோட்டா பீம்ல வர சோட்டா பீம் மாதிரியே பேசரப்பா??????

      Delete
    5. அன்புள்ள மணியரசன்,
      நான் அவ்வையைக்குறைகூறவில்லை. அவள் வாழ்ந்த காலத்தின் நியதி அது. உங்கள் விளக்கத்தையும் அதுபோன்ற வேறு சில விளக்கங்களையும் நான் வாசித்ததுண்டு. இன்னும் தேடித்தேடி வாசித்துக்கொண்டுமிருக்கிறேன். ஒரேயொரு விளக்கத்தில் திருப்திகொள்வதில்லை. பேராசிரியர் அ.மார்க்ஸ் தளத்தில் பெரும் தமிழ்ப்புலவர்கள் அளித்த மேலும்சில விளக்கங்களையும் காணுங்கள்.
      http://amarx.org/?p=1017

      ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் போகவேண்டாம். நூறே வருடங்கள் பின்னோக்கிச்செல்வோம். பாரதி மனைவியை அடித்ததுண்டு. பின் வருத்தப்படுகிறார். காந்தி மனைவியை இழுத்துப்போட்டு அடித்துவிட்டு பின் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். இவர்கள் உண்மையில் பெண்களை முன்னேற்ற முயன்றவர்கள்தாம். சந்தேகமில்லை. ஆனால் அன்றைய சூழல் அப்படி. மனைவியை போகப்பொருளாக ஆண்கள் நினைப்பது இயல்பு, சகஜம்.

      அப்படியே பத்து, இருபது நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணியுங்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று அவ்வையே சொன்னாலும் பெண்களே சிரிப்பார்கள். செல்லம்மாவே சிரித்தாரே. வரலாற்றில் பதிவாகியுள்ளதே? அது அப்படியொரு சிந்தனையே எழாதகாலம். சமகாலத்திய ஆண்பாற் புலவர்கள் என்ன எழுதினார்களோ அதை ஒட்டியே அவ்வையும் எழுதியிருக்கிறார் அவ்வளவுதான். தமிழகத்திலோ இந்தியாவிலோ அல்ல உலகத்தின் எந்த பண்பாட்டிலும் இதையேதான் மீண்டும் மீண்டும் காண்போம். இன்று ஆணும் பெண்ணும் சமமென்று எல்லோரும் எழுதுகிறார்கள். அதை அனுசரித்தே புதியவர்களும் எழுதுவார்கள்.

      உ.வே.சா. தன் பதின்மவயதில் அவர் அதுவரை கற்றிருந்த தமிழ்ப்பாடல்களை அனுசரித்து அதே கருத்துகளை வெவ்வேறு வார்த்தைகளில் செய்யுளாக எழுதித் தன் தந்தையிடம் காட்டுகிறார். எல்லாம் கிட்டத்தட்ட அவ்வையும் பட்டினத்தாரும் சொல்லும் மைவிழியார் மனையகல், எத்தனைபேர் நட்ட குழி வகையறா. அவர் தந்தை சிரித்துவிட்டு இதெல்லாம் வாழ்ந்துமுடித்தவர்கள் எழுதுவது. நீ சின்ன பையன் இப்படி எழுதக்கூடாது என்று அறிவுரை சொல்கிறார். அது ஏன் அப்படி என்று தனக்குப்புரியவில்லை என்று தமிழ்த்தாத்தா எழுதுகிறார். அவ்வையும் வள்ளுவனும் அதையேதான் செய்தார்கள். அன்று எது நீதி என்று நம்பப்படுகிறதோ அதைத்தான் எழுதினார்கள். அவர்களுடைய கஷ்டத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

      அந்த மரபையொட்டியே இன்றும் நாம் விபச்சார அழகிகள் கைது என்ற செய்தியைப்பார்த்தவுடன், விபச்சாரம் ஒரு பெண்மட்டும் தனியாக செய்யக்கூடிய காரியமில்லையே? அந்த ஆணையும் சேர்த்து ஏன் கைது செய்யவில்லை என்று இயல்பாகவே நாம் கேட்பதில்லை. செய்தித்தாள் வாசிக்கும் பெண்கள் உட்பட! சமீபத்தில் ஒரு பெண்ணியவாதி 'எத்தனைபேர் நட்டகுழி என்றெழுதிய பட்டினத்தார், ஏன் எத்தனை பேரில் நட்டகழி என்றெழுதவில்லை' என்று கேட்டார். அது காலத்தின் பிரச்சனை. அதை விடுங்கள்.

      இன்று தமிழர்களாகிய நமக்கு ஒரு பெரும்வியாதி வந்துவிட்டது. அதாவது தெய்வப்புலவர் என்றொரு அடைமொழியைத் தந்துவிட்டு அவர் தவறாகவோ (அவர் எழுதிய காலத்தில் அல்ல), உயர்வு நவிற்சிக்காக தான் பேசும் விஷயத்தைத் தூக்கி பேசும்போதும் (உ.ம். ஊழ்) அதைப் புலவர்கள் இயல்பு என்று புரிந்துகொள்ளாமல் நாமாக ஒரு இயல்பில்லாத விளக்கத்தை அவர்கள்மேல் ஏற்றி சிக்கலாக்கிவிடுகிறோம். எந்தக்கொம்பனும் நெருங்கமுடியாது என்ற உங்கள் வரிகள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் சோர்வுறச்செய்தது.

      மேலைச்சிந்தனையின் அஸ்திவாரத்தை அமைத்த சாக்ரடீஸ் அடிமை முறையை ஆதரித்தார். சிலர் அடிமைகளாக மட்டுமே செயல்படும் 'தகுதி' படைத்தவர்கள் என்பது அவர் துணிபு. அதற்காக மேற்குலகம் அவரைக் கொண்டாடாமலுமில்லை, அவரை நியாயப்படுத்தவுமில்லை. அது அந்த காலத்தின் பிரச்சனை என்று இயல்பாகப் புரிந்துகொண்டு மற்றபடி என்ன சொன்னார் என்று பார்க்கிறார்கள். அவ்வளவு பின்னால் போவானேன்? ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பெரும்போருக்குத் தலைமை தாங்குகையில் அவருடைய பண்ணைகளில் நூற்றுக்கணக்கில் அடிமைகள் வேலை செய்தது ஒரு பிழையாக அவருக்குத்தெரியவில்லை. அதையும் தெரிந்துகொண்டுதான் அமெரிக்கர்கள் அவரைக்கொண்டாடுகிறார்கள்.

      அவ்வளவு ஏன்? கிளிண்டன் ஆம், தவறுதான் என்று மன்னிப்புக்கேட்டுவிட்டுத் தன் வேலையைப் பார்க்கப்போய்விட்டார். ஆனால் கையும்களவுமாகப் பிடிபட்டும் நித்தி இல்லவேயிலையென்று சாதிக்கிறார். இதுதான் நம் பிரச்சனை.

      ஆத்திச்சூடியை என் தலைமுறைக்கு நிச்சயம் சொல்லிக்கொடுப்பேன். ஆனால் இயல்பில்லாத விளக்கங்களுடன் அல்ல. இந்த உண்மைகளுடன். நான் நிச்சயம் கொம்பனல்ல. அப்படி ஆகவும் விரும்பவில்லை. ஆனால் சாதாரண உண்மைகளைக்கூட ஏற்றுக்கொள்ள திராணியற்ற தமிழர்களை எதிர்கொள்கையில் ஆவேசமும் அயர்ச்சியும் ஒன்றாகவே வருகின்றன. தமிழனின் சாபக்கேடு போலும் :-(

      Delete
    6. நான் குறிப்பிட்டிருந்த குறள்களுக்கிடையேயான முரணை என் தாத்தாவிடம் (தற்போது உயிருடனில்லை) கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, முரண்பாடு இல்லாம பண்ணிடுவமா? என்றார். எப்படி என்றேன்.

      வழக்கமான முறையில் வாசிக்காமல், தொட்டணைத்தூறும் 'மணற்கேணி மாந்தர்க்கு' என்று படித்தால் சரியாப்போச்சு என்றார். அதாவது மணற்கேணி போன்ற மாந்தர்களுக்கு கற்கக்கற்க அறிவு வளரும். மற்றவர்களுக்கு என்னதான் கற்றாலும் விதிவிட்ட வழிதான். எப்படி விளக்கம்?

      இது இயல்பானதில்லை. உவமையின் பகுதியைப்பிரித்து இப்படிப்பொருள் கொள்வது பிழை. என்ன செய்வது? வள்ளுவரை விட்டுவிடமுடியுமா?

      என் தாத்தாபோல பல தாத்தாக்கள் தங்கள் புத்திகூர்மையால் கொடுத்த இயல்புக்கு மாறான விளக்கங்களை இன்று நம் தலைமுறை சுமந்துகொண்டு அவ்வை, வள்ளுவன் போன்ற புலவர்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக வழிபாட்டு மனநிலையில் ஆராதிக்கமட்டுமே செய்து, சொந்தமாக சிந்திப்பதைக் கோட்டைவிட்டு விடுகிறோம்.

      நான் மணியரசனுக்கு மட்டுமே இதுவரை பதிலளித்துவந்ததின் அக்கறை உணர்ச்சிவசப்படாத ஆராய்ச்சி மனநிலையின் கீற்றுகளை அவர் வரிகளில் கண்டதால்தான். அனேகமாக இனி அந்தக்கஷ்டமும் எனக்கு இருக்காதுபோல் தோன்றுகிறது. எந்தக்கொம்பனாலும் நெருங்கவேமுடியாதபோது சாதாரணன் நான் நெருங்க நினைப்பதில் பொருளில்லை.

      தொடர்ந்து வாசியுங்கள். எழுதுங்கள். வானம் தொட்டுவிடும் தூரம்தான். வாழ்த்துக்கள்!

      Delete
    7. நண்பர் திரு சிவானந்தம் அவர்களுக்கு,

      கொம்பன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது உங்களைக் குறிப்பதற்கு அல்ல.

      """"""குறளையும் அவ்வைக் கிழவியின் ஆத்திசூடியையும் இன்னும் பிற நூல்களையும் நீங்கள் மட்டுமல்ல வேறெந்தக் கொம்பனாலும் நெருங்கவே முடியாது.""""""""

      என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.அதை கடினமான வார்த்தையாகவும் நான் கருதவில்லை.வள்ளுவன்,அவ்வையின் மீதுள்ள பற்றால் வெளிப்பட்ட வார்த்தையாக இருக்கலாம்.

      நான் ஒரு உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ளும்படி சொல்லியே ஆக வேண்டும்.

      நான் இந்த வலைமனையில் பல தலைப்புகளில் விவாதம் செய்துள்ளேன்.பலருக்கு ஒரே நேரத்தில் மிக சாதாரணமாக பதிலளித்திருக்கிறேன்.வேண்டுமானால் அதற்கான link ஐ தருகிறேன்.

      ஆனால் உங்களுக்கு பதிலளிக்கும் பொழுதுதான் ஓரிரு இடத்தில் திணறினேன்.அதாவது கொஞ்சம் நிதானமாக யோசித்து பல தகவல்களை சேகரித்து பதிலெழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன்.

      உங்களது பல்துறை அறிவு அபாரம் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

      """"சாதாரண உண்மைகளைக்கூட ஏற்றுக்கொள்ள திராணியற்ற தமிழர்களை எதிர்கொள்கையில் ஆவேசமும் அயர்ச்சியும் ஒன்றாகவே வருகின்றன"""""

      என்று நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்.

      சாதாரண உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு எந்தத் தயக்கமும் இல்லை.ஆனால் பழங்கால இலக்கியம் மிக நுட்பமாக மிகுந்த புத்தி கூர்மைக் கொண்டவர்களால் எழுதப் பட்டிருக்கிறது என்பது என் நினைப்பு.

      அதனால் நாமும் அவ்வாறே அவற்றை புரிந்து கொள்ள முயல வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பு.

      வாருங்கள் நண்பர் திரு சிவானந்தம் அவர்களே வேறொரு தலைப்பில் விவாதம் செய்வோம்......

      Delete
    8. "தையல் எனும் சொல்லுக்கு அகராதிகளிலும் 'கட்டழகு இளம் பெண்' என்றுதான் குறிப்பிடப்படுகிறது.... - மணியரசன் "

      கட்டழகு இளம் பெண் என்று மட்டுமே அகராதி குறிப்பிடுகிறது. கட்டழகு இளம் பெண் என்றால் negative character(unworthy to listen to) என்பது யாருடைய கருத்து?
      would it be accurate?

      பல சைவ தலங்களில் இறைவியின் பெயர் தையல்நாயகி யென்று உள்ளது.அவளும் அப்படித்தானோ?

      Delete
    9. அதிலென்ன தவறு இருக்கிறது. அவளும் அப்படித்தான்.

      Delete
  4. சிவானந்தம் பதில் என்னவோ.சீக்கிரம் எழுதுங்கள் ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  5. தையல் (பெண்)சொல் கேளேல் என்று சொன்ன அவ்வையாரே தையல் தான் எனும்போது இதை சற்று யோசிக்க வேண்டியதாகிறது. பெண்ணின் உடல் பலவீனமானது. //strong mind in strong body// என்பது தெரிந்ததே.. 

    இயற்கை ஒரு பலவீனத்தை மற்றொரு பலத்தின் மூலம் சமன் செய்கிறது. பெண்ணுக்கு அது ஸ்தூலமான பலவீனத்தையும், தற்காப்பு உணர்வையும்,எதிர்காலம் குறித்த பயத்தையும் தந்துள்ளது. //Too much is always bad// என்பதும் தெரிந்ததே.. மேற்சொன்னவை அதிகரிக்க அதிகரிக்க தந்திரங்கள், சுய நல எண்ணங்கள் பெருகுகின்றன. சற்றே பெண் தன்மை மிகுந்த கணவன் மார்கள் மனைவி மார்களின் பேச்சுக்கு தாளம் போட்டு சமுதாயத்தை சுரண்டி, தம் குடும்பத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலகி பெண்டாட்டி பிள்ளைகளுடனேயே வாழ்ந்துவிட முயன்று அதே பெண்டாட்டி,பிள்ளைகளால் திரஸ்கரிக்கப் பட்டு நாயடி படுகிறார்கள். இவர்களுக்கு ரியலைசேஷன் வருவதற்குள் சூழ்நிலை கைமீறி போய்விடுகிறது.

    எனவே தையல் சொல் கேளீர்

    ReplyDelete
  6. தையல் என்பதற்கு, "பெண்" என்பது நேரிடையான பொருள் தருவதாகும். பெண்
    என்னும் சொல் பெரும்பாலும் இளம் வயது மங்கையரைக் குறிப்பதாகும்.
    பொறுப்புணர்ச்சி சரிவர அமையாத இளம் வயதில், அற்ப விஷயங்களில் அளவற்ற
    ஆசைகொண்டு, அதன் விளைவாக, அளவற்ற துன்பம் அடைவதும், அந்த ஆசையை
    நிறைவேற்றிக்கொள்ள ஒவ்வாத முறைகளில் ஈடுபட்டு சாதித்துக்கொள்வதும்,
    இப்பெண்கள் பெரும்பாலோரிடம் காணலாம். தாயைவிட, சகோதரியைவிட, தன்
    மனைவியின் மேல் அதிக அன்பு செலுத்தும் இயல்புடைய ஆண்கள், இதுபோன்ற
    இளம்பெண்களின் சொற்களைக் கேட்டு ஆராயாமல் செயல்படக்கூடாது என்பதை
    அறிவுறுத்தும் வகையில்தான் ஔவையார், "தையல் சொல் கேளேல்" என்று
    கூறியுள்ளார் என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  7. அன்றைய காலக்கட்டத்தில் அப்படிதான் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.பொதுவாக இளம்பெண்களின் பேச்சை கேட்காதே என்றுதான் கூறியுள்ளார் மணியரசன் தமிழின் மானத்தை காக்க என்னமா சொந்த விளக்கவுரை ஆக மணியரசன்.,..,.

    ReplyDelete
  8. தற்போதைய சமுதாய சூழல்களைப்பற்றி எழுதுங்கள் மணியரசன் அவர்களே

    ReplyDelete
  9. சிவானந்தத்தின் என்னை கவர்ந்த வரிகள் என் தாத்தாபோல பல தாத்தாக்கள் தங்கள் புத்திகூர்மையால் கொடுத்த இயல்புக்கு மாறான விளக்கங்களை இன்று நம் தலைமுறை சுமந்துகொண்டு அவ்வை, வள்ளுவன் போன்ற புலவர்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக வழிபாட்டு மனநிலையில் ஆராதிக்கமட்டுமே செய்து, சொந்தமாக சிந்திப்பதைக் கோட்டைவிட்டு விடுகிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி