அலட்சியத்தால் பள்ளிகளில் நீக்கப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2014

அலட்சியத்தால் பள்ளிகளில் நீக்கப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்!


தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. துவக்கத்தில், ஆறு பிரிவுகளில் 66 உட்பிரிவுகளை கொண்டிருந்த தொழிற்கல்வி, தற்போது 12 உட்பிரிவுகளாக குறைந்துள்ளது.வணிகம், வியாபாரம், பொறியியல், தொழில்நுட்பம், கணக்கு பதிவியல், நிர்வாக மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளும் இதில் அடங்கும்; புரபஷனல் கோர்ஸ் எனப்படும் தொழிற்கல்வி கற்பவர்களுக்கு, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் பொறியியல், ஆசிரியர் பயிற்சி, பாலிடெக்னிக் மற்றும் கலைத்துறை சார்ந்த படிப்புகளுக்கு, குறிப்பிட்ட சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், தொழிற்கல்வியை மேம்படுத்த கல்வித்துறை தரப்பில் தீவிர முயற்சி இல்லை. பாட திட்டங்களிலும், செயல்முறை பயிற்சிகளிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், தொழிற்கல்வி பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.தொழிற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தகுதி வழங்காமல், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்படுவதில்லை என்ற புகார், நீண்ட காலமாக நீடிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன், தொழிற்கல்வி துவங்கிய பள்ளிகளில் மட்டுமே, தற்போதும் தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது; கடந்த பல ஆண்டுகளில் துவங்கிய மேல்நிலைப்பள்ளிகளில், புதிதாக தொழிற்கல்வி கொண்டு வரவில்லை.ஏற்கனவே, தொழிற்கல்வி கற்பித்த சில பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறையால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள், எவ்வித அறிவிப்பும் இன்றி நீக்கப்படுகிறது.

பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றாலோ, பணி மாறுதலில் சென்றாலோ மீண்டும் அந்த பணியிடத்தில், ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதில்லை என்ற அவலம் பல ஆண்டுகளாக உள்ளது.தொழிற்கல்வி படிக்க ஆர்வமிருந்தும், பள்ளிகளில் தொழிற்கல்வி பாட திட்டம்இல்லாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மாநிலம் முழுவதும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி