இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?

''அங்கிள்! எனக்கொரு கலர் புக் வாங்கிக் கொடுப்பீங்களா?,''
''வாங்கித்தர்றேம்மா...ஆனா, இந்த ராத்திரியில எங்க போய் வாங்குறது? நாளைக்கு...!,''
''ஓ.கே., அங்கிள்! ஆனா, நாளைக்காவது எனக்குக் கிடைக்குமா? ஏன்னா....,''
இந்த உரையாடல் தொடரும்போதே, அங்கே கைகளில் புத்தகங்களோடு வருகிறாள் அந்தச் சிறுமி.

''சார்....சார்! 8 புக் தான் சார் இருக்கு. ரெண்டே ரெண்டு புக் வாங்கிக்கோங்க சார். ப்ளீஸ் சார்...!''
''ரெண்டு வேணாம்மா. எட்டையும் கொடு!''

அந்த புத்தகங்கள் அத்தனையையும் வாங்கிக் கொடுக்கிறார், அவர். இப்போது மூவரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். கலர் புக் விற்ற பாத்திமாவுக்கு 10 வயது. வாங்கிக்கொண்ட ரெஹானாவுக்கு 16 வயது.இந்த வயதில், 'கலர் புக்' கேட்கிறாள் என்றால், அவளுக்கு குழந்தை மனது அல்லது வளர்ச்சி பெறாத மூளை என்று நீங்கள் யோசிக்கத்தோன்றுமே...இல்லை.ரெஹானாவுக்கு அழகையும், அறிவையும் கொடுக்க ஆண்டவன் தவறவில்லை; ஆயுளை மட்டும் தான், குறைத்துக் கொடுத்திருக்கிறார்.காரமடையைச் சேர்ந்த ஏழைத்தம்பதி ஜாகீர் உசேன்-மகமுதா தம்பதியினரின் மகள் தான் இந்த ரெஹானா. பத்தாம் வகுப்பு வரை படித்த ரெஹானாவை, அவளது தந்தை ஜாகீர் கஷ்டப்பட்டு, டிப்ளமோ படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறார். அங்கே, சந்தோஷமாய் அவள் படித்துக் கொண்டிருந்தபோது
தான், ஒரு விடியல், அவளின் சந்தோஷக் கனவுகளை சருகுகளாய் மாற்றிப்போட்டது.

கடுமையான காய்ச்சல் தாக்கி, அவள் பாதிப்புக்குள்ளானபோது, சாதாரண மருந்து, மாத்திரைகள் அவளை குணப்படுத்தவில்லை. கோவையில் ரத்தப்பரிசோதனை செய்தபோது தான் தெரிந்தது, அவளுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது; அதுவும் முற்றிய நிலையில் நாட்களைக் குறித்து விட்டது மருத்துவம்.மருந்துகளை வாங்கிக் கொடுக்குமளவுக்கு, குடும்பத்தில் வசதி இல்லை. அப்போது தான், அவளைப்பற்றி அறிந்து, அவளைத் தத்து எடுத்தது கோவை 'அறம்' அறக்கட்டளை. கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையிலுள்ள தீவிர புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவளைப் பராமரிப்பதோடு, அவளின் சின்னச்சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வருகிறது.வலியும், வேதனையும் ரெஹானாவை பின்னிக் கொள்கின்றன; இப்போது, கால்கள் வீங்கிக் கொள்கின்றன; அவளால் நடக்க முடியவில்லை; வீல்சேரில் தான் வலம் வருகிறாள். ஆனாலும், அவளின் கண்களில் கண்ணீருக்குப் பதில், அன்பின் தேடல் தான் இருக்கிறது. இந்த உலகத்தின் எல்லா உயிர்களையும், மனிதர்களையும் நேசிக்கும் மனசு அவளிடம் இருக்கிறது.

கோவையில் முதல்வர் ஜெ., வருகைக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த ரெஹானா, 'நான் ஜெயலலிதா அம்மாவைப் பாக்கணும்னு ஆசைப்படுறேன்' என்று தன் ஆசையை மெதுவாய் தெரிவித்திருக்கிறாள். ஆனால், முதல்வர் வருவதற்கு முந்தைய நாளில் தெரிவித்ததால், எந்த ஏற்பாட்டையும் அவர்களால் செய்ய முடியவில்லை.அதற்கு மாற்றாக, அவள் கேட்ட வேண்டுகோள், எல்லோரது இதயத்தையும் நொறுங்கச் செய்து விட்டது, ''முதல்வர் அம்மா வந்துட்டுப்போன பிறகாவது, அவுங்க உட்கார்ந்த சேர்ல நான் உட்காரலாமா?'' என்பது தான் ரெஹானாவின் ஆசை. அதையும் நிறைவேற்ற முயற்சித்தார் 'அறம்' அறக்கட்டளை நிர்வாகி ரகுராம்.மருத்துவர்களிடம் கடிதம் பெற்று, காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். முதல்வர் பேசி முடித்துக் கிளம்பிய பின், கூட்டமெல்லாம் கலைந்தபின், வீல்சேரில் அழைத்து வந்து, அந்த மேடையில் அவளை ஏற்றினர். தோரணம், நுழைவாயில், அலங்கார வளைவுகள் எல்லாவற்றையும் ஆச்சரியமாகப் பார்த்த அவள், மேடையில் ஏறி, முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

எதிரில் இருந்த வெறும் மைதானத்தைப் பார்த்து, மகிழ்ச்சியாய் கையசைத்தாள். ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் இருவர், ரெஹானாவை பற்றி கேள்விப்பட்டு, அங்கு வந்து அவளை சந்தித்தபோது, 'அங்கிள்! உங்களோடயாவது கடைசியா நான் ஒரு படம் எடுத்துக்கவா?' என்று சிறு குழந்தையைப் போல் ரெஹானா கேட்க, இருவரும் ஒரு கணம் அதிர்ந்து, கண்ணீர் சிந்தி விட்டனர்.அறக்கட்டளை ஏற்பாடு செய்த காரில், இரவில் கோவையை வலம் வந்தாள் ரெஹானா. அவளது பெற்றோரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டலில், அவளுக்குப் பிடித்த 'எக் பிரைடு ரைஸ்' வாங்கிக் கொடுத்தும், இரு கவளத்துக்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை. அதன்பின், வ.உ.சி., பூங்காவை வலம் வந்தபோது தான், 'கலர் புக்' கேட்டு, தன் குழந்தை மனதை வெளிப்படுத்தினாள்.அந்த புத்தகங்களில், வானத்தையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் வரைந்து, 'விரைவில் நான் உங்களிடம் வருகிறேன்' என்று ரெஹானா எழுதியிருக்கக்கூடும். ஆனாலும், இன்று வரையிலும், ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடும், நன்றியோடும் துவக்குகிறாள் ரெஹானா. அவளைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும், இதயத்திலிருந்து ரணத்தோடு ஒரு கேள்வி முட்டி முளைக்கிறது... இன்னும் எத்தனை மொட்டுக்களைப் பறிப்பாய் இறைவா?. ரெஹானாவுக்கு உதவ 80126 47274 என்ற எண்ணில் அழைக்கவும்.

3 comments:

  1. காலை வணக்கம்
    நண்பர்களே
    இன்னும் 10 நாட்கள் தானே
    1 வருடம் பொருத்த நமக்கு
    இது கடினமல்ல்ல.
    கடுமையாக இறைவனிடம் வேண்டுவோம்,
    பொருத்ததார் பூமி ஆள்வார்.

    ReplyDelete
  2. Antha elam kuruthukku andavan vazhnalai nettikka vendukiren. Because i lost my brother in same cancer broblem in january 2012.

    ReplyDelete
  3. நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் .
    புற்றுநோய் பற்றி என்னுடைய கருத்தை பதிகிறேன் . சரி/தவறு என்பதை தீர்மானிக்கவும்.
    புற்றுநோயாளிகள் உடல் வலியை தாங்க முடியாத போது இருப்பதை விட (நோயாளிக்கு தெரியாமல் ) இறப்பதே சரியான தீர்வு எனறு கூற விரும்புகிறேன் .
    ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால் புற்றுநோய் கட்டியினால் ஏற்படும் வலியை விட குணப்படுத்த பயன்படுத்தும் மருந்தின் வலி . 3 மடங்கு அதிகமாகும் .
    என்னுடைய தாய் கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் இதை கூறுகிறேன் .
    மேற்கண்ட காரணத்தால் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன் . நானும் tet candidate தான் 2012 ல் 83 , 2012 sublementary ல் (என்னுடைய தாய் புற்றுநோயால் வலியால் மருத்தவமனையில் துடித்த போது நான் அவருக்கு உதவிய காலம் .72., 2013 104 . என் வருத்தத்தை அந்த சிறுமிக்காக (உலகில உள்ள எல்லா புற்றுநோயாளிகளுக்கும் )தெரிவித்துக் கொள்கிறேன் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி