வங்கி ஊழியர்கள் நவ.12-இல் வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

வங்கி ஊழியர்கள் நவ.12-இல் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நவ.12-இல் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் அமைப்பாளர் சி.எம்.பாஸ்கரன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு, வாரம் 5 நாள்கள் வேலை, 2 நாள்கள் விடுமுறை, மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வங்கி நிர்வாகிகள் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம்.

வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2007-2012-ஆம் ஆண்டுக்கு 17.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2012-2017- ஆம் ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகன பேச்சுவார்த்தை 2012 நவம்பர் மாதம் தொடங்கியது. இந்த முறை 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி 11 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என இந்திய வங்கி நிர்வாகிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

13 கட்டங்களாக... அதையடுத்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்திய வங்கி நிர்வாகிகள் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதுவரை 13 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த விதமான தீர்வும் ஏற்படவில்லை. வரும் 30-ஆம் தேதியுடன் பேச்சுவார்த்தை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அதை நினைவுபடுத்தும் வகை

யில், அக்டோபர் 30-ஆம் தேதியை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் சென்னை அண்ணா சாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி முன்பு எங்கள் அமைப்பின் சார்பில் மாலை 5.30 மணிக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

9 கூட்டமைப்புகள் பங்கேற்பு: அதைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 12-ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும். இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 6,000 வங்கிகளைச் சேர்ந்த 75,000 பேர் பங்கேற்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தப் போராட்டத்தில் 5 வங்கி ஊழியர்கள், 4 வங்கி அதிகாரிகள் கூட்டமைப்புகள் கலந்துகொள்கின்றன.

இதற்குப் பிறகும் தீர்வு ஏற்படாவிட்டால் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு உள்ளிட்ட 4 மண்டலங்களிலும் வங்கி ஊழியர்களின் சார்பில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி