தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுப்பதன் உள்நோக்கம் என்ன? : தமிழக அரசுக்கு சங்க நிர்வாகி காட்டமான கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2014

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுப்பதன் உள்நோக்கம் என்ன? : தமிழக அரசுக்கு சங்க நிர்வாகி காட்டமான கேள்வி

'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்களை, வரும் பொதுத் தேர்வில், தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்துள்ள நிலையில், ''அங்கீகாரம் கேட்டாலும், தமிழக அரசு, தர மறுக்கிறது. இதன் உள் நோக்கம் என்ன?,'' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார், கேள்வி எழுப்பி உள்ளார்.

பூச்சாண்டி காட்டும் தேர்வுத்துறை : ஒவ்வொரு ஆண்டும், பொதுத்தேர்வு நெருங்கியதும், 'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்களை, தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம்' என, எச்சரிக்கை விடுவதும், பின், கடைசி நேரத்தில், அனைத்து மாணவ, மாணவியரையும், தேர்வெழுத அனுமதிப்பதும், தேர்வுத்துறையின் வாடிக்கையாக உள்ளது.

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மீது, எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. வழக்கம்போல், இந்த ஆண்டும், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், எச்சரிக்கை சுற்றறிக்கையை, அனுப்பி உள்ளார். கடந்த, 21ம் தேதியிட்ட அந்த கடிதத்தில், 'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், அங்கீகாரம் பெற வேண்டும். இல்லை எனில், அந்த பள்ளி மாணவ, மாணவியர், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப் பட மாட்டர்' என, தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: அதிகாரிகள் விளையாட்டிற்கு, அளவே இல்லை. ஆளாளுக்கு, நெருக்கடி தருகின்றனர். 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்து, அங்கீகாரம் கிடைக்காமலும் உள்ளன.

முடிந்தவரை, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்து, முறையாக, மாவட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்தும், அங்கீகாரம் தர மறுப்பது, யாருடைய தவறு. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், வேண்டும் என்றே, ஏதாவது ஒரு சாக்கு, போக்கு காரணம் கூறி, விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர். பின், உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வந்தால், விண்ணப்பத்தை, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அங்கீகாரமும் தருகின்றனர். தமிழக அரசு, அங்கீகாரம் தர மறுப்பதற்கும், கால தாமதம் செய்வதற்கும் என்ன காரணம். இதன் உள் நோக்கம் என்ன?

குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாத பள்ளிகள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தர, இயக்குனர், தேவராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அரசுக்கு அறிக்கை அனுப்பி, ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது.

இதுவரை, எந்த முடிவும் எடுக்காதது ஏன். இதற்கும், ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா?

மிரட்டக்கூடாது : இந்த பள்ளிகள் மீதான முடிவை வெளியிடாததற்கு, யார் காரணம். எல்லா தவறுகளையும், அதிகாரிகளும், அரசும் வைத்துக் கொண்டு, தனியார் பள்ளிகளை மிரட்டும் வகையில், எச்சரிக்கை விடும் போக்கை, அதிகாரிகள் கைவிட வேண்டும். எந்த ஒரு முடிவாக

இருந்தாலும், உடனுக்குடன் எடுத்து, அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு, நந்தகுமார் ஆவேசமாக தெரிவித்தார்.

துறையின் பதில் என்ன? : நந்தகுமார் குற்றச்சாட்டு குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளில் இருந்து, பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர் விவரங்களை, தேர்வுத்துறை கேட்டுள்ளது. அதை, வரும், 31ம் தேதிக்குள் வழங்குவோம்.

தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, எந்த பிரச்னையும் வராது. அந்த பள்ளி மாணவர்கள், வழக்கம்போல், வரும் பொதுத்தேர்வையும் எழுதலாம்.

நில பற்றாக்குறை உள்ள பள்ளிகள் விவகாரத்தில், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்; எங்களிடம் எதுவும் இல்லை. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி