இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள்

திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் சின்னையா மன்றாடியார்-ராஜாமணி தம்பதியருக்கு நான்காவது மகனாக 1928 அக்., 1ல் பிறந்தார் சிவாஜி. 
கணேசமூர்த்தி என பெற்றோர் பெயர் வைத்தனர். அவர் பிறந்த போது, தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.சங்கிலியாண்டவர்புரத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய சிவாஜிக்கு படிப்பு மீது நாட்டம் இல்லை. அக்கம் பக்கத்து தெருக்களில் நடந்த பாவைக்கூத்துகளும், புராண நாடகங்களும், சிறுவன் சிவாஜியை கவர்ந்தன. அருகில் வசித்த காக்கா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து திருச்சி தேவர்ஹால் நாடகக்குழுவில் சேர்ந்தார். பின் பொன்னுச்சாமி பிள்ளையின் நாடகக்குழுவில் காக்கா ராதாகிருஷ்ணன், சிவாஜியை சேர்த்து விட்டார்.சில நாடகங்களில் நடித்த சிவாஜிக்கு திருப்பமாக அமைந்தது அண்ணாத்துரை எழுதிய, 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' நாடகம். சென்னையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் கணேசனாக இருந்தவர், சிவாஜியாக நடித்தார். அண்ணாத்துரை காகப்பட்டராக நடித்தார். நாடகத்திற்கு தலைமை வகித்து ரசித்த பெரியார், கணேசனை பாராட்டி, 'சிவாஜிகணேசன்' என பெயரிட்டார்.

முத்தாய்ப்பாய் முதல் படம்துவக்கத்தில் திராவிட இயக்கத்தில் இணைந்த சிவாஜி, 'பராசக்தி' நாடகத்தில் நடித்தார். அதன் பெருமை அறிந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் முதலியார், ஏ.வி.மெய்யப்பசெட்டியாருடன் இணைந்து படமாக எடுக்கவும், அதில் சிவாஜியை நடிக்க வைக்கவும் முடிவு செய்தார். ஏதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் ஏ.வி.மெய்யப்பசெட்டியாருக்கு புதிய நடிகரான சிவாஜியை வைத்து சினிமா எடுத்தால் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்தது. அன்றைய சூழலில் பிரபலமாக இருந்த கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை கூறினார். அதை ஏற்க மறுத்த பெருமாள்முதலியார், 'சிவாஜியே நடிக்கட்டும்' என்ற உறுதியுடன் 1951ல் அப்படம் எடுக்கப்பட்டது. முதல் வசனமாக 'சக்ஸஸ்' என சிவாஜி பேசிய இடம் இன்றும் ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் நினைவு சின்னமாக திகழ்கிறது.காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள்காலத்தால் அழியாத பராசக்தி படம், அன்றைய அரசின் அவலங்களை கூறியதால் படத்தை தடை செய்ய பல முயற்சிகள் நடந்தன. அதைமீறி வெற்றிகரமாக ஓடியதால் சிவாஜிக்கு சினிமா வாய்ப்புகள் பெருகின. உத்தமபுரத்திரன், மனோகரா, மகாகவி காளிதாஸ், காத்தவராயன், புதையல், சித்தூர் ராணி பத்மினி, தூக்கு தூக்கி, குறவஞ்சி போன்ற புராணப் படங்கள் சிவாஜிக்கு புகழை தந்தன. கதாபாத்திரமாகவே ஒன்றி நடித்தததால், அவை இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது.சிவாஜிக்கு 'பா'எம்.ஜி.ஆருக்கு தாய்க்கு பின் தாரம், தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே என 'தா' என்ற எழுத்தில் துவங்கும் படங்கள் வெற்றியாக அமைந்தது போல, சிவாஜிக்கு 'பா' வரிசையில் அமைந்த படங்கள் வெற்றியை தந்தன. அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் பாசமலர், மகளுக்கும் தந்தைக்கும் உள்ள பாசத்தை விளக்கும் பார் மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, பாலும் பழமும், நிச்சய தாம்பூலம் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.

மறக்க முடியாத படங்கள்வீரபாண்டிய கட்டபொம்மனாக, கப்பலோட்டிய தமிழனாக, பாட்டுக்கொரு புலவன் பாரதியாக, கர்ணனாக சிவாஜி நடித்தது வரலாற்றின் பதிவு. கட்டபொம்மன் இப்படி இருப்பார் என்று சிவாஜியின் நடிப்பை பார்த்து தானே தெரிந்து கொண்டோம். திருமால் பெருமை,
திருவருட்செல்வர், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்கள் அவர் நடிப்பின் பெருமை கூறுபவை. திரிசூலம், வசந்த மாளிகை, டாக்டர் சிவா, புதிய பறவை, சிவந்த மண் போன்றவை அவரின் நடிப்பு பரிணாமத்தை காட்டின. சிவாஜி நடித்த 'தெய்வமகன்' ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம்.

தமிழில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வாழ்நாளின் இறுதிவரை தொழில் பக்தி, நேரம் தவறாமை போன்ற குணங்களால் போற்றப்பட்டார்.தனி கட்சி துவக்கம்துவக்கத்தில் திராவிடக்கழகத்தில் இருந்தாலும், இந்திரா, காமராஜர் மீது பற்றுக் கொண்டு 32 ஆண்டுகள் காங்கிரசில் இருந்தார். பின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை துவக்கினார். பிறகு 1989ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து, கட்சியை இணைத்து கொண்டார். தமிழக ஜனதா தள தலைவராகவும் திகழ்ந்தார். திரையுலகில் நடிக்க தெரிந்த சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லை.சக நடிகர் மீதும் மதிப்புசிவாஜி ரசிகர் என்ற அடிப்படையிலும், சிவாஜி குடும்பத்தில் உதவியாளராக என் சகோதரர் திருப்பதி ஆறுமுகம் பணிபுரிந்ததன் அடிப்படையிலும் அவருடன் பழகும் வாய்ப்பை பெற்றேன். 1972ல் மதுரை முள்ளிபள்ளம் பகுதியில் 'பட்டிக்காடா பட்டணமா' படப்பிடிப்பு நடந்தது. பள்ளியில் படித்த நான், சிவாஜி மன்றத்தினருடன் சேர்ந்து அவரை பார்க்க சென்றேன். வைகையாற்றில் இரு கதாநாயகிகளுடன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிவாஜி கிராம ஜமீன்தார் வேடத்தில் இருந்தார். பச்சைக்கலர் பெல்ட் அணிந்து, கொண்டை வைத்த தலைமுடியுடன் காட்சியளித்தார். அவரை பார்த்தபோது, ''டே பசங்களா அங்கே ஒரு அம்மா உட்கார்ந்திருக்கு. அங்கேயும் சென்று பார்த்து சொல்லுங்கள்,'' என்றார். அங்கு அமர்ந்திருந்தவர் ஜெயலலிதா. தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களையும் மதிக்கத் தெரிந்தவர் சிவாஜி என இது காட்டியது.தேடி வந்த விருதுகள் கருணாநிதியின் வசனம், கண்ணதாசனின் எழுத்து, டி.எம்.சவுந்திரராஜனின் குரல், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ஆகியவற்றால் சிவாஜியின் படப்பாடல்கள் இன்றும் பட்டிதொட்டிகளில் அன்றாடம் ஒலிக்கின்றன. கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதாசாகிப் பால்கே விருதுகள் அவருக்கு பெருமை சேர்த்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் படம், ஆப்ரிக்கா உலக திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டது. 1962 ல் அமெரிக்கா நியூயார்க் மாகாண நயகரா நகரின் 'ஒரு நாள் மேயர்' சிறப்பு அந்தஸ்தை பெற்றார். 2001ல் அவர் மறைந்த போது, மத்திய அரசு தபால் தலை ெவளியிட்டது. சிவாஜி என்ற மிகப்பெரும் நடிகரின் சுவடுகள் தமிழ் மண்ணிலும், தமிழர் மனதிலும் என்றும் பதிந்து ருக்கும்.-ஏ.எஸ்.பி.சிவசுந்தரம்,சமூக ஆர்வலர், மதுரை. 94433 48284.

வாசகர்கள் பார்வை

இன்ப அதிர்ச்சி தினமலர் என் பார்வை
பகுதியில் நகைச்சுவை நாயகன் நாகேஷ் பற்றி பேராசிரியர் இரா.மோகன் எழுதிய கட்டுரை படித்தேன், ரசித்தேன், சிரித்தேன், சிந்தித்தேன் பழைய நினைவுகள் நெஞ்சில் மலர தொடங்கியது. உடல் மொழி, வேகமாக வசனம் பேசுவது, நடனம் ஆடுவது போன்ற திறமைகளைஉள்ளடக்கிய நாகேஷின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தில்லானா மோகனாம்பாள் 'வைத்தி'யை மறக்க முடியுமா. எதிர்பாராத நேரத்தில் இது போன்ற கட்டுரைகளை வெளியிட்டு வாசகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் தினமலர் நாளிதழுக்கு நன்றி.

-- விதிலை. அன்புச்செல்வன், வீரபாண்டி.

தென்னகத்தின் ஜாலிவுட்'தென்னகத்தின் ஹாலிவுட் மதுரை' கட்டுரை பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது. 1990க்கு முன் தொலைக்காட்சி அதிகமாக அறிமுகம் ஆகாத நேரத்தில், தியேட்டருக்குச் சென்று படம் பார்த்த அனுபவத்தை மறக்க முடியுமா? ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒவ்வொரு புகழ் உண்டு என்பதை கட்டுரை ஆசிரியர் விவரித்த விதம் அருமை. தெற்குமாசி வீதியில் உள்ள சிட்டி சினிமா, தினமணி, லட்சுமி (தற்போது அலங்கார்) ஆகியவை விட்டுப் போயிருந்தன. மதுரை தென்னகத்தின் 'ஹாலிவுட்' மட்டுமல்ல; 'ஜாலிவுட்' கூட என்பதை என் பார்வை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- -- என்.உஷா தேவி, மதுரை

அறிவியல் உண்மைகள்என் பார்வையில் 'ரேபிஸ் அறிவியல் அவமானம்' கட்டுரை அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தியது. நாய் கடித்த பின் செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி தெளிவாக குறிப்பிட்ட டாக்டர் மணிவண்ணன் பாராட்டப்பட வேண்டியவர். நம்மூரில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றி திரிந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நாய் தொல்லையால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தி
நம்மையும் தட்டி எழுப்பியது.

- பவித்ரா தேவி, சிவகங்கை

காட்சியளித்த எழுத்துக்கள்'கவிமணியின் கடைசி கவிதை' கட்டுரை படித்தேன். தினமலர் நாளிதழில் முதல் பதிப்பில் கவிமணியின் கவிதை மூலம் அவர்மீது கொண்ட அன்பு, அண்ணாமலை செட்டியார் தந்த பொற்கிழி மூலம் வெளிப்பட்ட அவரது பற்று, அன்றைய முதல்வர் ராஜாஜி அவர்கள் அவரது வீடு தேடி சென்று காட்டிய பாசம் இவைகளின் மூலம் கவிமணி வாழ்ந்த வாழ்க்கை என் கண்முன் காட்சிகளாக நின்றது. எழுதிய கவிமணி பேரனுக்கு பாராட்டுக்கள்

--- க. கனகவிஜயன், மதுரை

ஆரோக்கிய கட்டுரைவேட்டி, புடவை அணிந்தால் குடலிறக்கம் வராது என்ற டாக்டர். ஜெயவெங்கடேஷ் எழுதிய கட்டுரை படித்தேன். ஆடைமட்டுமல்ல, ஆன்மிகம், உணவு, சுகாதாரம் என நமது முன்னோர்கள் கடைபிடித்த ஒவ்வொரு செயலிலும் அறிவியலும், இயற்கை மருத்துவமும் கலந்தே இருந்ததால் தான் நூறு வயது வரை வாழ்ந்தனர். பெண்களுக்கு அழகு சேர்க்கும் சேலையும், ஆண்களின் கம்பீரத்திற்கு அடையாளமான வேட்டியும் ஆரோக்கிய உடைகள் என்பதை புரிய வைத்து, நமது பாரம்பரிய உடையே சிறந்தது என்பதை எடுத்து கூறிய தினமலர் நாளிதழுக்கு நன்றி.- எஸ். செல்வராணி, திண்டுக்கல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி