என்று இடிந்து விழுமோ? அபாய நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

என்று இடிந்து விழுமோ? அபாய நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்

உத்தரமேரூர் அருகே நெய்யாடுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டடங்கள் அபாயகரமான நிலையில் உள்ளதால், புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

உத்தரமேரூர் வட்டம், செய்யாற்றின் கரையில் உள்ளது நெய்யாடுபாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1959-ஆம் ஆண்டு அரசுப் பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

இந்தப் பள்ளி கடந்த 2012-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

செய்யாற்றின் கரையோர கிராமங்களான நெய்யாடுபாக்கம், இளையனார்வேலூர், மலையாங்குளம், புலிவாய், புத்தழி, வயலக்காவூர், படூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்

சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் இப்போது இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளன.

லேசான மழை பெய்தாலே, வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது.

இதில் ஒரு சில கட்டடங்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்துப் படிக்கும் நிலை உள்ளது.

மழை நேரத்தில் வகுப்பறையிலும் அமர்ந்துப் படிக்க முடியாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் பள்ளியில் சுற்றுச் சுவரும் இல்லை. பெயரளவுக்கு பள்ளி நுழைவாயில் பகுதியில் மட்டுமே சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இதனால் இரவில் பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது.

ஆய்வக வசதியும் இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டும் நெய்யாடுபாக்கம் பள்ளியிலேயே எழுதும் வகையில் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாததால் 10 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபாத் அரசுப் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நெய்யாடுபாக்கமும் ஒன்று. காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்தக்

கிராமத்துக்கு பள்ளி வசதி கிடைத்தது. அப்போது கட்டப்பட்ட கட்டடங்கள்தான் இன்றளவும் உள்ளன.

அதன் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர எந்த அரசும் முன்வரவில்லை.

இந்தப் பள்ளி வளாகத்தை மாவட்ட நிர்வாகம், கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய கட்டடம் கட்ட பரிந்துரை செய்ய வேண்டும்.

இந்தப் பகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி