ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 சோதனை வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2014

ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 சோதனை வெற்றி


இந்திய தொழில்நுட்பத்தில் உருவான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணிற்கு எடுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை ரக சோதனை ரீதியிலான, ஜி.எஸ்.எல்.வி., 'மார்க் 3' ராக்கெட், நேற்று காலை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை, 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி வருகிறது. இந்திய தொழில்நுட்பத்தில் உருவான, அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட்டை, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ராக்கெட், சோதனை முறையில் நேற்று காலை, 9:30 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டுடன், 'கேர்' எனப்படும், ஆளில்லா விண்கலமும் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது.




ஜி.எஸ்.எல்.வி., 'மார்க் 3' ராக்கெட் செலுத்தப்பட்டு, 5.41 நிமிடங்களில், 126 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்தது. அதே சமயம், 'கேர்' விண்கலம் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. 'கேர்' விண்கலம், நிர்ணயிக்கப்பட்ட, 19 நிமிடங்களில், போர்ட் பிளேயர் அருகே கடலில் விழுந்து மீண்டும் பூமிக்கு திரும்பியது.


'இஸ்ரோ' தலைவர் ராதாகிருஷ்ணன்:

ஜி.எஸ்.எல்.வி., 'மார்க் 3' ராக்கெட் செயல்திட்டம், 10 வருடத்திற்கு முன் துவங்கப்பட்டது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது முதல், அதில் பொருத்தப்பட்டிருந்த, 'எஸ் 200' மற்றும் 'எல் 110' ராக்கெட் இன்ஜின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தது. 'எஸ் 200' திரவ எரிபொருள் ராக்கெட் இன்ஜின், ராக்கெட் தொழில்நுட்பத்தில் உலகிலேயே மூன்றாவது பெரிய இன்ஜின். ஜி.எஸ்.எல்.வி., 'மார்க் 3' ராக்கெட்டுடன் விண்ணிற்கு அனுப்பப்பட்ட, 'கேர்' விண்கலம் சிறப்பாக செயல்பட்டு, எதிர்பார்த்த வகையில் செயல்பட்டது. தற்போது, 'கேர்' விண்கலம் போர்ட் பிளேயர் அருகே கடலோர பாதுகாப்பு படை கப்பலால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை கடலில் இருந்து மீட்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் இன்னொரு சாதனை மைல்கல்லாக, இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், நாம் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். எங்களுக்கு, அனைத்து வித ஒத்துழைப்பையும் வழங்கிய, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., டி 4 ராக்கெட், 2015ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில், விண்ணில் செலுத்தப்படும்.




ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 திட்ட இயக்குநர் சோம்நாத்:


சோதனை முறையில் ஏவப்பட்ட ராக்கெட், இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுவடிவம் பெறும்.



'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்:



ஜி.எஸ்.எல்.வி., 'மார்க் 3' செயலாற்றிய விஞ்ஞானிகளின் பெயர்களும், இஸ்ரோவின் வரலாற்றில் பொன் எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.


''ஜி.எஸ்.எல்.வி., 'மார்க் 3' ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது, நம் விஞ்ஞானிகளின் அறிவாற்றலுக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த பரிசு,'' என்று, பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி