அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2014

அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு


லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாகத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, தற்போது அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் துறை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது கடந்த ஆண்டு டிசம்பரில் லோக்பால், லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஐஎஃப்எஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 50 லட்சத்துக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்கள், அவர்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும் நடைமுறை வெளிப்படையாக்கப்பட்டது.இதன்படி, ஐஎஃப்எஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற "குரூப் 1' பிரிவு உயரதிகாரிகள் இந்த விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறினால், அவர்களுக்குரிய பதவி உயர்வு பரிசீலிக்கப்படக் கூடாது என்பதும் கட்டாயமாக்கப்பட்டது.

இதனால், அதிகாரிகளில் ஒரு பிரிவினர் லோக்பால் சட்டநடைமுறைகள் தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பினர்.இச்சட்டத்தின்படி அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களான குடியிருப்பு, வீட்டு மனை, வாகனங்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், வங்கிக் கணக்கு விவரங்கள், பங்கு முதலீடுகள், வைப்பு நிதி, கடன் தொகை, காப்பீடுகள், குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆண்டுதோறும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. சட்டம் அமலுக்கு வந்த முதலாவது ஆண்டு என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் இந்த விவரங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பர் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசையும், அசையா சொத்து விவரங்களைக் குறிப்பிடும் படிவத்தை தாக்கல் செய்ததும், அவர்கள் சார்ந்த துறை அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டால் தனிப்பட்ட முறையில் ஏதேனும் பிரச்னைகள் எழுமோஎன்று கருதினர்.இவர்களின் அச்சத்தைக் களையும் விதமாக அரசு ஊழியர்களுடன் கடந்த செப்டம்பரில் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. தற்போது காலக்கெடுவை இரண்டாவது முறையாக மத்தியஅரசு நீட்டித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி