ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2015

ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்...

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அன்றுதான் உலகப்பொதுமறையாம் திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் என்பது சிலருக்குதான் தெரியும்.






அந்த சிலரில் சிறப்பானவர் மு.தங்கவேலனார்.
தற்போது 68 வயதாகும் இவர், தஞ்சாவூரை அடுத்துள்ள பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவில் அருகில் டீ கடைவைத்திருக்கிறார்.





கடந்த திருவள்ளுவர் தினத்தன்று இவரது கடையில் வழக்கமாக ஆறு ரூபாய்க்கு விற்கப்படும் டீ, அன்று ஒரு நாள் மட்டும் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது.





கிடைத்தவரை லாபம் என்று ஒன்றுக்கு இரண்டாக டீ வாங்கிக்குடித்தவர்கள் அந்த அளவிற்கே பேறு பெற்றவர்கள். இன்று என்ன விசேஷம் எதற்காக டீ ஒரு ரூபாய்க்கு தருகிறீர்கள் என்று கேட்டவர்களே பெரும்பேறு பெற்றவர்கள்.





ஆம். அவர்களுக்கு டீ கொடுத்ததுடன் அன்றைய திருவள்ளுவர் தினத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லி கூடுதலாக இரண்டு திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்லிவிளக்குகிறார்.





யார் இந்த தங்கவேலனார்?





சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பள்ளிசெல்லமுடியாத சூழ்நிலை. தமிழ்பற்று கொண்ட தாத்தாவின் தோளிலும் தந்தையின் மார்பிலும் வளர்ந்த போதே தமிழால் வளர்க்கப்பட்டார்.





இதன் காரணமாக பள்ளி செல்லாமாலே சங்கத்தமிழ் துவங்கி பெரிய புராணம் வரை தமிழின் சுவை சொல்லும் அனைத்து புத்தகங்களையும் படித்தார்.





விவசாயம் பார்த்த நேரம் போக மீதிநேரம் முழுவதும் தமிழ் நுால்களை வாங்குவதிலும் படிப்பதிலுமே பணத்தையும் நேரத்தையும் செலவழித்தார்.





இப்படிப்பட்ட சூழ்நிலையில் வள்ளுவத்தை மேன்மைபடுத்தும் விதத்தில் நடந்த ஒரு பட்டிமன்றம் கேட்டவர் அதன்பிறகு திருக்குறளை ஊன்றி படிக்க ஆரம்பித்தார் படிக்க படிக்க அதிலேயே ஊறிப்போனார்.





வாழ்வியலையும் உயர்ந்த அரசியல்தன்மையையும் திருக்குறள் போல விளக்க எந்த நுாலும் இல்லை என்பதை உணர்ந்தவர், அதன் பிறகு தனது வாழ்க்கையை திருக்குறளின் பக்கம் திருப்பினார்.





இந்த நேரத்தில் விவசாயத்தை நம்பமுடியாத சூழ்நிலையில் டீ கடை ஆரம்பித்தார்.கடையின் பிற்பகுதியை நுாலகமாக மாற்றினார்.திருக்குறள் பேரவை என்ற அமைப்பை துவங்கி தினமும் காலை வேளையில் திருக்குறள் பாடவகுப்பு நடத்த ஆரம்பித்தார்.இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை வந்து கலந்துகொண்டு இப்போதும் பலன் அடைகின்றனர்.





இவரது இந்த திருக்குறள் பற்றைப்பற்றி கேள்விப்பட்ட சிலர் தந்த நன்கொடை முழுவதையும் திருக்குறள் புத்தகங்களாக வாங்கி தனது நுாலகத்திற்கு வரக்கூடியவர்களுக்கு இலவசமாக வழங்கினார் இது போக பள்ளிக்கூடங்களுக்கு தேடிப்போயும் திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.





இந்த நிலையில் தனது சக்திக்கு உள்பட்ட திருவள்ளுவர் தினம் கொண்டாடவேண்டும் என்று எண்ணியபோதுதான் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ வழங்கலாம் என்ற எண்ணம் உதித்தது.





கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொண்டை செய்துவரும் இவரது மகள் காவல்துறையில் ஒரு உயரதிகாரியாக இருந்த போதும் யாரையும் சாராமல் சுயமாக வாழவேண்டும் அதைத்தான் திருவள்ளுவர் எனக்கு சொல்லித்தருகிறார் என்று சொல்லி வாழ்பவர்.





எளிய இனிய தமிழில் அழகாக பேசுகிறார் பேசும்போதே பல திருக்குறள்களை தனது பேச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேற்கோள்காட்டுகிறார் அப்படி மேற்கோள் காட்டும் திருக்குறளுக்கான பொருளை மிக அழகாக விளக்குகிறார்.


இருந்தாலும் திருக்குறள் ஒரு கடல். இதில் நான் ஒரு கற்றுக்குட்டிதான் ஆகவே எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணவேண்டாம் முடிந்த வரை கற்றுள்ளேன். இன்னும் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லும் இவருடன் பேசுவதற்கான எண்: 9788181249.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி