'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி: சீனாவில் உள்ள இலக்கை தாக்க வல்லது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2015

'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி: சீனாவில் உள்ள இலக்கை தாக்க வல்லது

இந்தியாவின் அதிநவீன, 'அக்னி - 5' ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணையானது, 5,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது; 1,000 கிலோ எடையுள்ள, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும். இந்த ஏவுகணை மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்கி அழிக்க முடியும்.

ராணுவத்தில்...:

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான - டி.ஆர்.டி.ஓ., ராணுவத்திற்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில், அக்னி - 1 முதல், அக்னி - 4 வரை நான்கு வகையான ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, அவை ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக தற்போது, அக்னி - 5 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கண்டத்திலிருந்து பாய்ந்து சென்று, மற்றொரு கண்டத்தில் உள்ள இலக்கை தாக்கும் இந்த ஏவுகணையின் முதற்கட்ட சோதனை, 2012 ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட சோதனை, 2013 செப்., 15ல் நடைபெற்றது. மூன்றாவதாக, இந்த ரக ஏவுகணையின் சோதனை நேற்று நடைபெற்றது. ஒடிசா மாநிலம், வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளமான - ஐ.டி.ஆர்.,ல் இருந்து, ஏவுகணை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இது தொடர்பாக, ஐ.டி.ஆர்., இயக்குனர் எம்.வி.கே.பி.பிரசாத் கூறியதாவது: அக்னி - 5 ஏவுகணையானது, கண்டம் விட்டு கண்டம் சென்று, 5,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்தது. அத்துடன், 1,000 கிலோவுக்கு மேலான எடை கொண்ட அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் படைத்தது. திட எரிபொருளில் இயங்கக் கூடிய இந்த ஏவுகணையானது, மூன்று கட்டங்களாக செயல்படக்கூடியது. வீலர் தீவில் உள்ள ஏவுகணை சோதனை தளத்திலிருந்து, காலை, 8:06 மணிக்கு, விண்ணில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஏவுகணையானது, 17.5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 50 ஆயிரம் கிலோ எடையும் கொண்டது. சோதனையின் போது, ஏவுகணையில் டம்மி வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏவுகணை, பிரத்யேக உருக்கில் தயாரிக்கப்பட்ட சிலிண்டர் வடிவிலான கன்டெய்னரிலிருந்து செலுத்தப்பட்டது. சிலிண்டர் வடிவிலான கன்டெய்னரில் இந்த ஏவுகணையை வைக்க முடியும் என்பதால், ரோடு மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவே, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று, இலக்கை நோக்கி செலுத்தலாம்.

இதுவரை தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை செலுத்துவதில், ரகசியம் காப்பது கடினமாக இருந்தது. அதை முறியடிக்கும் வகையில், இந்த வகை ஏவுகணை, பலவிதமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. அக்னி - 5 ஏவுகணையானது, சிலிண்டர் வடிவிலான கன்டெய்னரில் பொருத்தப்பட்டு செலுத்தப்படுவதால், ஏவுகணையானது எந்த காலநிலையிலும் செலுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்கும். இதுவரை தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விட, இந்த ஏவுகணை நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி, துல்லியமாக செல்லக்கூடியது. இதிலுள்ள இன்ஜினும், புதிய தொழில்நுட்பத்தில் தயாரானது. இதில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பல நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கம்ப்யூட்டர்கள் மற்றும் சாப்ட்வேர்கள், தவறுகள் நிகழா வண்ணம் பாதுகாப்பது மற்றும் ஏவுகணையை குறிப்பிட்ட இலக்கிற்கு வழிநடத்திச் செல்லும் திறன் படைத்தவை. இவ்வாறு, பிரசாத் கூறினார்.

இந்த அக்னி - 5 ஏவுகணை அடுத்தடுத்து, சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் ராணுவத்தில் சேர்க்கப்படும். நாட்டிற்கான ஏவுகணை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும், டி.ஆர்.டி.ஓ.,வின் தலைவர் அவினாஷ் சந்தர், 1972ல் அந்த நிறுவனத்தில் பணி யில் சேர்ந்தார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார். சந்தரின் பதவிக்காலம் முடிவடையும் கடைசி நாளில், அக்னி - 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது, அவருக்கு பெருமையை சேர்த்து உள்ளது.


பிரதமர் பாராட்டு:


அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றிக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 'இந்த ஏவுகணையானது, நாட்டின் ராணுவத்திற்கு கிடைத்துள்ள, ஒரு பெரிய பொக்கிஷம். இதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு என் பணிவான வணக்கங்கள்' என்றும் கூறியுள்ளார்.

ஏவுகணை தயாரிப்பில், இந்தியா தற்போது தன்னிறைவு பெற்று விட்டது. அக்னி - 5 ஏவுகணையில், இனி மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நேற்றைய சோதனையே போதுமானது. இந்த ஏவுகணையானது, ராணுவத்தில் சேர்க்கும் அளவுக்கு முழுமை பெற்றுள்ளது. ஏவுகணை தயாரிப்பில், இந்தியாவை சூப்பர் பவர் நாடாக, என் தலைமையிலான குழு மாற்றி உள்ளது. இன்று பதவி ஓய்வு பெறும் எனக்கு, இதைவிட பெரிய பரிசு கிடைக்கப் போவதில்லை.

அவினாஷ் சந்தர், டி.ஆர்.டி.ஓ., தலைவர்

ஏவுகணைகள் இலக்கு


அக்னி - 1 700 கி.மீ., தூரம்


அக்னி - 2 2,000 கி.மீ., தூரம்


அக்னி - 3 2,500 கி.மீ., தூரம்


அக்னி - 4 3,500 கி.மீ., தூரம்


அக்னி - 5 5,000 கி.மீ., தூரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி