யுஜிசி வழிகாட்டுதலால் பணி மேம்பாடு இல்லை: 5,000 பேராசிரியர்கள் 5 ஆண்டுகளாகத் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2015

யுஜிசி வழிகாட்டுதலால் பணி மேம்பாடு இல்லை: 5,000 பேராசிரியர்கள் 5 ஆண்டுகளாகத் தவிப்பு

அரசாணை இருந்தும், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் காரணமாக பணி மேம்பாடு பெற முடியாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

2006-ஆம் ஆண்டு முதல் பணிக்குச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இந்தப் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றுடன் பணி மேம்பாடும் வழங்கப்படும்.

அதாவது, அரசாணை எண்.350-இன் படி, பணியில் சேரும்போது பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகும், எம்.ஃபில். முடித்தவர்களுக்கு 5 ஆண்டுகள் முடிந்த பிறகும், முதுநிலை பட்டப் படிப்பு மட்டும் முடித்தவர்களுக்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகும் பணி மேம்பாடு வழங்கப்படும். அப்போது, பேராசிரியர்களின் தர ஊதியம் ரூ.6,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தப்படும். பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நிறைவில் ரூ.7,000-லிருந்து ரூ.8,000-ஆக மீண்டும் தர ஊதியம் உயர்த்தப்படும்.

ஆனால், கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பணி மேம்பாடு வழங்கப்படவில்லை என்கின்றனர் பேராசிரியர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக நிர்வாகி பிரதாபன், சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் காஞ்சனா ஆகியோர் கூறியது: அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த 2006 முதல் பணியில் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு இதுவரை பணி மேம்பாடு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால், 2010-இல் வெளியிடப்பட்ட யுஜிசி வழிகாட்டுதலை காரணமாகக் காட்டுகின்றனர் உயர் அதிகாரிகள்.கருத்தரங்குகளில் பங்கேற்றது, புத்தகம் வெளியிட்டது, மாநாடுகளை ஏற்பாடு செய்தது ஆகியவற்றின் மூலம் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே பேராசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என அந்த வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.

ஆனால், 2006-இல் பணியில் சேர்ந்தவர்களுக்கு, 2010 வழிகாட்டுதல் எப்படிப் பொருந்தும் என்பதே எங்களுடைய கேள்வி. அதுமட்டுமின்றி, அரசாணை எண்.350-இன் அடிப்படையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்க கடந்த 25.3.2013 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2006 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் என மேலும் சில பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், யுஜிசி கூறுவதுபோல் பேராசிரியர்கள் தொடர்ச்சியாக கருத்தரங்குகள், மாநாடுகளில் பங்கேற்பது என்பது தமிழகத்தில் இயலாத காரியம். ஏனெனில், தமிழகத்திலுள்ள பல கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. சில கல்லூரிகளில் ஒரு துறைக்கு இரு பேராசிரியர்கள் என்ற அளவில் மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில், வகுப்புகளை நடத்துவதை விட்டுவிட்டு, கருத்தரங்குகள், மாநாடுக்குச் செல்வது எப்படி சாத்தியம். எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.இதுகுறித்து உயர் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, கல்லூரிகளில் 2006-இல் பணியில் சேர்ந்தவர்கள் 2010-ஆம் ஆண்டிலிருந்தே பணி மேம்பாட்டுக்கானத் தகுதியைப் பெறுகின்றனர்.

எனவே, 2010-இல் வெளியிடப்பட்ட யுஜிசி வழிகாட்டுதல் அடிப்படையில் இவர்களுக்கு பணி மேம்பாடு அளிப்பதா அல்லது அரசாணை 350-இன் அடிப்படையில் பணி மேம்பாடு அளிப்பதா என்பது குறித்து நிதித் துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அத் துறையிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகே, அவர்களுக்கு உயர்வு வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி