புதிதாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2015

புதிதாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா?

இந்த ஆண்டு புதிதாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு வியாழக்கிழமை திரளாக வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏராளமான பள்ளிகள் அங்கீகாரம் கோரி பள்ளிக் கல்வி இயக்ககம், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்திடம் விண்ணப்பிப்பார்கள். இந்த ஆண்டும் அதேபோல் ஏராளமான பள்ளிகளுக்கு ஓரிரு மாதங்களில் புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பத்தாம் வகுப்புத் தேர்வுக்கான தயாரிப்புப் பணிகள் அனைத்தும் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டதால், இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு வியாழக்கிழமை திரளாக வந்தனர்.

பல மாதங்களுக்கு முன்னரே அங்கீகாரம் கோரி விண்ணப்பித்திருந்தும் இப்போதுதான் அங்கீகாரம் கிடைத்ததாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கை மனுக்களை அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் கூறியது:

பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து திரட்டப்பட்டு வருகின்றன. அக்டோபர் வரை அவர்களுக்கு பலமுறை கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

அதன்பிறகு, இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மீண்டும் சரிபார்ப்பதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களையும் சேர்க்கக் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டன.

ஆனால், அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டன. ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் எடுத்துச்செல்லப்பட வேண்டிய வினாத்தாள்கள் கூட தயாராக உள்ள நிலையில், இந்த மாணவர்களுக்கு அனுமதி வழங்குவது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

எனினும், இது மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கவனத்தோடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாதகமான முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி