மாணவிகளுக்கு ‘செக்ஸ்’ தொல்லையை தடுக்க, வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

மாணவிகளுக்கு ‘செக்ஸ்’ தொல்லையை தடுக்க, வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு


பள்ளிகளில் மாணவிகளுக்கு நேரிடும் செக்ஸ் தொல்லையை தடுக்கும் வகையில், வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகைகளில் செய்தி

சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுக்களுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லைகள் நேரிடும் சம்பவங்கள் குறித்து பிரபல பத்திரிகைகள், டி.வி.களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆசிரியை கொலை

இணையதளங்களையும் செல்போன்களையும் அதிக அளவில் மாணவ சமுதாயத்தினரும் ஆசிரியர்களும் பயன்படுத்திவருவது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. பாலியல் தொல்லைகள் மட்டுமல்லாமல் கொலை சம்பவங்கள் வரை கல்வி வளாகங்களில் நடக்கின்றன.இதுபோன்ற சம்பவங்களில் இருந்து மாணவிகளையும் ஆசிரியைகளையும் காப்பாற்றுவது அரசின் கடமையாகும். சென்னையில் பள்ளி ஒன்றில், பாடங்களை சரிவர படிக்கவில்லை என்று கண்டித்த ஆசிரியை உமா மகேஸ்வரி (வயது 39), 15 வயது மாணவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்த மாணவன் கடந்த 5 ஆண்டுகளாக அங்குதான் படித்திருக்கிறான். அவன் ஒழுங்காக பள்ளிக்கு வரும் மாணவன்தான். ஆனால் அவன் சரிவர படிப்பதில்லை.

தலைமை ஆசிரியர் கைது

நெல்லை மாவட்டம், சூரங்குடியில் பஞ்சாயத்து பள்ளி ஒன்றில் ஒன்பது வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நேரத்துக்குப் பிறகு வகுப்பறையில் அந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அதுபோல் ஒரு நாளில் தொல்லை கொடுத்தபோது அந்த மாணவி அழுதுவிட்டார். அவளது அழுகைச் சத்தத்தைக் கேட்டு மற்ற மாணவிகள் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரையும்தலைமை ஆசிரியர் வெளியே அனுப்பிவிட்டார். பின்னர் அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

இடைக்கால பணிநீக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகளுக்கு செக்ஸ் தொல்லைகொடுத்த தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் பழனிவேல் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், மாவட்ட கல்வி அதிகாரியின் குழு விசாரணைக்குப் பிறகு இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மனு கொடுத்தேன்

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, நன்னடத்தை மற்றும் இறைபக்தியின் வேரை இழந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கும் மற்ற அரசு அதிகாரிகளுக்கும் கடந்த டிசம்பர் 8-ந் தேதி மனு அனுப்பினேன். ஆனால் இதுவரைஅந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வகுப்பறைகளில் கேமராக்கள்

எனவே, தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கக் கல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகள், முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. என்ற கண்காணிப்பு கேமராக்களை வைப்பதற்கும், அதன்மூலம் வகுப்பறைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை அந்த கல்வி நிறுவனங்களின் தலைமை அதிகாரி கண்காணிக்கவும் ஏற்பாடுகளைச் செய்வதற்கு மாவட்டகலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் ஏற்கனவே அனுப்பியுள்ள கோரிக்கை மனுவை இரண்டுமாதங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி