தமிழகம் முழுவதும் நாளை இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2015

தமிழகம் முழுவதும் நாளை இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்



தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டில் முதல் தவணையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 18-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் தவணையாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 43,051 போலியோ தடுப்பு சொட்டு மருந்து மையங்கள் செயல்படவுள்ளன. மக்களின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்படும்.

நடமாடும் குழுக்கள்: தொலைதூரப் பகுதி, மலைவாழ் பகுதி, எளிதில் பயணம் மேற்கொள்ள முடியாத பகுதி மக்களுக்காக 1000 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் நாளன்று தனியார் மருத்துவர்களும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

விடுபடும் குழந்தைகள்: விடுபடும் குழந்தைகளை கண்டறியவதற்காக, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படும். இந்தப் பணிகளுக்காக சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 2 லட்சம் பேர் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் 6.6 லட்சம் குழந்தைகள்: சென்னை முழுவதும் இரண்டாம் தவணை சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மொத்தம் 6.64 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார். இதற்கென ஆயிரத்து 500 மையங்களும், 7,000 பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், உட்பட இந்த முகாமில் பணியாற்ற தயார் நிலையில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி