தேசிய வருவாய் வழி தேர்வில் தேறியோர்களுக்கு கல்வி உதவித்தொகைஎப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

தேசிய வருவாய் வழி தேர்வில் தேறியோர்களுக்கு கல்வி உதவித்தொகைஎப்போது?


கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய வருவாய் வழி தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்றுவரை கிடைக்கவில்லை.
உதவித்தொகை எப்போது கிடைக்கும் என தெரியாமல், வங்கிக்கும், கல்வி அலுவலகங்களுக்கும் மாணவர்களின் பெற்றோர் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த தேர்வில், அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை மாதந்தோறும் 500 ரூபாய் கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு வழங்கும்.

ஏமாற்றம்

நடப்பாண்டிற்கான தேசிய வருவாய் வழி தேர்வு, கடந்த மாதம் 24ம் தேதி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 மையங்களில் 6,799 மாணவர்கள்எழுதினர். தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வில், காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 2,100 பேரும்; செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 4,379 பேரும் தேர்வெழுதினர்.இவர்களில், காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 102; செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 248 என, மொத்தம் 350 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.இந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, மாதந்தோறும் 500 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மாணவர்களுக்கு, இன்றுவரை ஒரு மாதத்திற்கான கல்வி உதவித்தொகையும் கிடைக்கவில்லை என, வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இது, மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் சேகரிப்பு

இதனால், அவ்வப்போது வங்கிக்கும், கல்வி அலுவலகங்களுக்கும் பெற்றோர் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் இந்த பிரச்னை இருக்கிறது. யார் யாருக்கெல்லாம் உதவித்தொகை வரவில்லை என்ற பட்டியல் கல்வித்துறையிடம் இல்லை. உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்பதால், அதுகுறித்த எந்த தகவலும் துறை அதிகாரிகள் பெற்று வைக்கவில்லை.மாநிலம் முழுவதும் இந்த பிரச்னை எதிரொலிப்பதால், கல்வி உதவித்தொகை கிடைக்காத மாணவர்களின் விவரங்களை திரட்டும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைவிரிப்பு

இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:
* உண்மையில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் எங்களிடம் இல்லை. மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டோம்.
* முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படும் நிதி. இதில் எங்கள் பங்கு ஏதும் இல்லை.
* வங்கிக் கணக்கு எண் மற்றும் தங்களது சுய விவரங்களை தெளிவாக பதிவு செய்யாதவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கவில்லை.
* தற்போது, தேர்ச்சி பெற்று உதவித்தொகை கிடைக்காத மாணவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
* இவை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி, உதவித்தொகை கிடைக்க சில மாதங்கள் ஆகலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி