ஒசூரில் பிளஸ் 2 வினாத்தாளை "வாட்ஸ் அப்'பில் அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2015

ஒசூரில் பிளஸ் 2 வினாத்தாளை "வாட்ஸ் அப்'பில் அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிளஸ் 2 வினாத்தாளை செல்லிடப்பேசியின் கட்செவி அஞ்சலில் ("வாட்ஸ் அப்') அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இத் தேர்வில் முறைகேடுகளைக் கண்காணிப்பதற்காக மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களுக்குச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 2 கணிதத் தேர்வு மார்ச் 18-ஆம் தேதி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளிக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மையத்தில் மொத்தம் 323 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அதில் ஒரு வகுப்பறையில் மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 19 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் தேர்வு எழுத வரவில்லை.

மீதியிருந்த அந்த வினாத்தாளை தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த மையத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆசிரியர் மகேந்திரன், தான் வைத்திருந்த செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுத்தார்.

பின்னர், அந்தப் படத்தை கட்செவி அஞ்சல் மூலம் ஆசிரியர்கள் உதயகுமார், கோவிந்தன் ஆகியோருக்கு அனுப்பினார். பின்னர், மேலும் இருவருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த தேர்வு மையத்துக்குள் வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, பறக்கும் படையில் வந்த ஒருவர், மையக் கண்காணிப்பாளரை சோதனை செய்தார். அப்போது அவரிடம் செல்லிடப்பேசி இருந்தது.

"தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் மட்டுமல்ல, கண்காணிப்பாளரும் செல்லிடப்பேசி எடுத்து வரக் கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், நீங்கள் எப்படி செல்லிடப்பேசியை எடுத்து வந்தீர்கள்' என்று கேட்டனர். மேலும், ஆசிரியர் மகேந்திரனின் செல்லிடப்பேசியை சோதித்துப் பார்த்தபோது, தேர்வு நடந்து கொண்டிருந்த கணிதத் தேர்வின் வினாத்தாள் "வாட்ஸ் அப்' மூலம் பிறருக்கு அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு கண்காணிப்புப் பொறுப்பாளராகப் பணியாற்றிய, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்எஸ்ஏ) இணை இயக்குநர் நாகராஜ் முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி ஆகியோரிடம் பறக்கும் படையினர் புகார் செய்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி எஸ்.பி. கண்ணம்மாளிடம் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள் உத்தரவின்பேரில், ஒசூர் ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷினி, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

பிறகு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாளை கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பியதாக ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன், கார்த்திகேயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ஒசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இவர்களில் கோவிந்தன், மகேந்திரன் ஆகிய 2 பேரிடம் இருந்து செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.





கேமராவில் சிக்கிய ஆசிரியர்



பிளஸ் 2 கணிதப் பாட வினாத்தாளை ஆசிரியர் மகேந்திரன் செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுக்கும் காட்சிகள் தேர்வறையிலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.



வினாத்தாளை அனுப்பியது ஏன்? இதுகுறித்து விசாரித்தபோது பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகைப்படம் எடுக்கப்பட்ட வினாத்தாள் குறிப்பிட்ட சில ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் அதற்கான விடைகளை பூர்த்தி செய்து தேர்வு மைய ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்புவதாகவும், அவற்றை குறிப்பிட்ட சிலருக்குக் கொடுத்து, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு வினாத்தாள்களுக்கு விடைகளைப் பெற்று கொடுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கணிசமான தொகை வழங்கப்படுவதாகவும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.





"செல்லிடப்பேசிக்கு அனுமதி கூடாது'



ஒசூரில் தேர்வறை கண்காணிப்பாளரே செல்லிடப்பேசியின் கட்செவி அஞ்சல் மூலம் பிளஸ் 2 வினாத்தாளை அனுப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தேர்வறைகளுக்குள் செல்லிடப்பேசியை அனுமதிக்கக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறியதாவது:

தேர்வு மையத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, தரைவழி தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களுக்குச் சென்றதும் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் செல்லிடப்பேசியைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவசரத் தேவைக்கு மட்டும் முதன்மைக் கண்காணிப்பாளர் அறையில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தலாம் எனவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், ஒசூரில் உள்ள தேர்வு மையத்தில் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது. அதனாலேயே, இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த ஆசிரியர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்வறைகளுக்குள் செல்லிடப்பேசியை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
    அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
    தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடைய உரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்து உள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின் நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
    அனைவரும் வருக! ஆதரவு தருக!
    இப்படிக்கு,
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
    தமிழ்நாடு.

    ReplyDelete
    Replies
    1. ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
      தொடர்புக்கு :-
      ஜெகநாதன் மதுரை – 9442880680
      ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் –
      மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
      ரமேஷ் நாமக்கல்-9942015830
      சிவபிரகாஷ் கோவை –7708058814
      பழனி திருவண்ணாமலை-9524805873

      Delete
  2. Kalvi seithi Admin sir, what about Tncoop exam final result. Ten days ago.

    ReplyDelete
  3. Private schools don't try malpractice honesty is the best policy

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி