உண்மையான வரலாறு எங்கே!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

உண்மையான வரலாறு எங்கே!!!


ஆரம்பம் முதல் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரலாறு என்று ஒரு பாடம் உண்டு.இதில் இந்திய வரலாறு பற்றி கூறப்பட்டு இருப்பது ஒரே மாதிரியான பல்லவியாக இருக்கும்.ஆதி காலத்தில், எந்தெந்த ஆண்டுகளில் இந்தியா மீது யார், யார் படையெடுத்து வந்தார்கள்?
அந்த அன்னிய நாட்டு மன்னர்களின் விவரங்கள், பின்னர் இந்தியாவின் பல பகுதிகளையும் ஆண்ட மன்னர்கள் ஒருவருக்கொருவர் எந்த இடத்தில் எதற்காக மோதிக்கொண்டார்கள்? அசோகர் சாலைகளில் மரம் நட்டார் என்பது போன்ற தகவல்கள் ஆண்டு வாரியாக சிரத்தையுடன் தயாரித்து கொடுக்கப்பட்டு இருக்கும்.சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா மீது நடந்த முகலாயர்களின் படையெடுப்பு, தொடர்ந்துபிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பு, ஆங்கில ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தது, சுதந்திர போராட்டம், பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றது, தற்போது ஆட்சியில் இருப்பது யார் என்ற ரீதியில் தான் இந்தியாவின் வரலாறு பள்ளிகளில் போதிக்கப்படுகிறது.தென் இந்திய வரலாற்றைப் பொறுத்த அளவில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டது மற்றும் ஆங்காங்கே இருந்த குறுநில மன்னர்களின் ஆட்சி விவரங்கள் தான் அதிகம் இடம்பெற்று இருக்கும்.

இளவயதில் திணிக்கப்படும் இந்த வரலாற்று விவரங்கள் பல முக்கிய நிகழ்வுகளை திரைபோட்டு மறைத்து விடுகிறது.ஒரு நாட்டின் வரலாறு என்பது போர்க்களங்களுடன் நின்றுவிடுவது இல்லை.ஆதி காலத்தில் இந்தியாவில் இருந்த மக்கள் எப்படிப்பட்ட நாகரிகம் கொண்டு இருந்தார்கள்? அதன் பரிணாமவளர்ச்சி என்ன? கல்வி கற்கும் முறையை கையாண்டது எவ்வாறு? வெளிநாட்டினரும் வியந்து போற்றும்படியானஅந்த கால இந்தியர்களின் விஞ்ஞான அறிவு எப்படி இருந்தது? அப்போது வாழ்ந்த அறிஞர்கள் யார், யார்? காலத்தை விஞ்சி நிற்கும் கல்லணை, தஞ்சை பெரியகோவில் போன்ற பிரமாண்ட படைப்புகளின் நுணுக்கம் என்ன? தேர்தல் என்ற அமைப்புக்கு உலகிலேயே முதன் முறையாக வித்திட்ட தமிழக மன்னர் யார், இன்றளவும் போற்றி வியக்கத்தக்க காவியங்களை பழங்கால அறிஞர்கள் இயற்றியது எவ்வாறு? அச்சில் இல்லாத அவை பல ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி இன்னும் புதுக் கருக்கு குலையாமல் அப்படியே வழக்கத்தில் இருக்கும் அதிசயம் என்ன? என்பது போன்ற உண்மையான தகவல்கள் எல்லாம் நமது பொதுவான சரித்திர புத்தகத்தில் இருக்காது.

பள்ளிப்படிப்பை முடித்த பின் தொடரும் சிறப்பு கல்வியின் போது மட்டும் அந்தந்த தலைப்புக்கு ஏற்ற புத்தகங்களில் இவற்றை தேடிப்பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.400 ஆண்டுகளாக அன்னியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்ததாலோ என்னவோ, அவர்கள் வகுத்து தந்த போர்க்காட்சிகள் கொண்ட பாடங்கள் தான் பள்ளிக்கூட சரித்திர பாட புத்தக பக்கங்களை நிரப்பிக்கொண்டு இருக்கின்றன.உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்து, வாழ்வின் அடுத்த முக்கிய கட்டத்திற்கு தயாராக இருக்கும் இளைஞர் சமுதாயத்திடம், இந்திய வரலாறு பற்றி கேட்டால், கடந்த காலத்தில் இந்தியா மீது படையெடுத்தவர்களின் பட்டியலைத்தான் 'கட, கட' என்று வாசிப்பார்களே தவிர, உண்மையான முழு வரலாறு தெரியாமல்தான் இருப்பார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இலக்கணம் வகுத்துத்தந்த தொல்காப்பியர் பற்றியோ, வாழ்வின் அத்தனை தத்துவங்களையும் இரண்டிரண்டு வரிகளில் அபாரமாக கொடுத்த வள்ளுவரின் வாழ்க்கை பற்றிய முழுவிவரமோ, உலகதத்துவங்களை எல்லாம் 3 ஆயிரம் திருமந்திரம் பாடல்களில் உள்ளடக்கிய தத்துவஞானி திருமூலர் பற்றியோ, பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சான்றாக திகழ்ந்த அவ்வையார் மற்றும் அப்பர்,திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றவர்கள் இயற்றிய கருத்தாழமிக்க பாடல்கள் பற்றியோ, வால்மீகி ராமாயணத்திற்கு புது வடிவம் கொடுத்த கம்பர் திறமை பற்றியோ, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்கள் உருவானது பற்றியோ இன்னும் இது போல, வியக்கத்தகும் சாதனைகளைப் படைத்தவர்களின் விவரங்கள் பற்றியோ தமிழக வரலாற்று நூல்களில் முழுமையாக இடம் பெற்று இருப்பது இல்லை.கணிதம் மற்றும் வானவியல் சாஸ்திரத்திற்கு அடிப்படை காரணமானவர்கள் என்ற ஆர்யபட்டா, பாஸ்கராச்சாரியார், இலக்கியத்தில் இமாலய சாதனை படைத்த வியாசர், மருத்துவத் துறையில் முன்னோடியான சரகர் போன்ற எண்ணற்ற அறிஞர்களின் வாழ்க்கை, அவர்களது கண்டுபிடிப்புகள், அவற்றின் தாக்கம் குறித்தும், இந்திய சரித்திர புத்தகங்கள் மூலம் பள்ளிக்கூட மாணவர்களுக்கு போதிக்கப்படுவது இல்லை.

இதனால் என்ன ஆகிறது?இந்தியா மீது அலெக்சாண்டர், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் படையெடுப்பு சம்பவங்களை நம்பும் அளவுக்கு, பாஸ்கராச்சாரியார், ஆர்யபட்டா, சரகர், திருமூலர் போன்றவர்களின் சாதனைகளைப் பற்றிக் கூறினால், அவற்றை நம்புவதற்கு பலர் தயாராக இல்லை.காரணம், அவைதான் பாட புத்தகத்தில் இல்லையே!

பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா மீது படையெடுத்த கஜினி முகமது பற்றி எப்படிப்பட்ட வர்ணனை வார்த்தைகளில் கூறினாலும், அவற்றை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொண்டு நெட்டுருப் போடும் இளைஞர் சமுதாயத்தினரிடம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் நிகழ்த்திய அற்புதமான அறிவியல் சாதனைகளை எடுத்துக்கூறினால், இவற்றுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கும் அவல நிலைமைதான் உள்ளது.இது மாற வேண்டும் என்றால், பழங்கால இந்திய அறிஞர்கள், ஒவ்வொரு துறையிலும் ஆற்றிய சாதனைகள், பள்ளிக்கூட மாணவர்களுக்கான இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டியது மிக அவசியம்.வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் அளவுக்கு நமது மூதாதையர்கள் அளப்பரிய சாதனைகளை எப்படி நிகழ்த்திக் காட்டினார்கள் என்ற தகவலை தொடர்ந்து இங்கே காணலாம்.அதற்கு முன்னதாக, நமது முன்னோர்களின் சாதனைகளுக்கு மூல காரணமாக இருந்த அந்தக்கால கல்வி முறை பற்றி சிறிதளவுக்கு இங்கே பார்ப்போம்.

இப்போது கல்வி என்பது, எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலையைத் தாண்டி, வாழ்க்கையின் வளமான வாழ்வுக்கு இது உதவுமா என்று தேர்ந்து எடுத்து அவற்றை மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.மற்றவை புறந்தள்ளப்படுகின்றன.

கணினி மற்றும் இணையதளம் காரணமாக, நாம் விரும்பும் எந்த பாடத்தையும் விரல் அசைவில் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், அறிவு வளர்ச்சிக்காக அதிக சிரமம் எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை என்ற எண்ணம் இப்போது உருவாகி இருக்கிறது.பள்ளிப்படிப்பின்போது அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, குறிப்பிட்ட பாடத்தின் சில பகுதிகளை மட்டும் வேண்டா வெறுப்பாக மனப்பாடம் செய்யும் மாணவர்களைத்தான் இந்தக் காலத்தில் பார்க்க முடிகிறது.

ஆனால், பழங்காலத்தில் எந்தப் பாடம் என்றாலும், அதனை ஆர்வமாக அறிந்துகொண்டு, மனப்பாடம் செய்து மனதில் ஏற்றிக்கொள்வது என்ற வகையில் கல்வி கற்றுக்கொடுக்கும் மரபு இருந்தது.அப்போது எழுதுவதற்கு ஏட்டுச் சுவடிகள் இருந்தாலும், பெரும்பாலான பாடங்கள், மனப்பாடமாகவே கற்றுக்கொடுக்கப்பட்டன.சமீபத்தில், அதாவது 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்வரை, கணக்கு பாடத்தில் வாய்ப்பாடு என்ற முறை இருந்தது.சப்தம்போட்டுப் படித்து மனதில் அப்படியே ஏற்றிக்கொள்வதால் தான் அதற்கு 'வாய்ப்பாடு' என்ற பெயரே ஏற்பட்டது.ஆனால், இப்போது யாரும் அக்கறையுடன் வாய்ப்பாடு கற்றுக்கொள்வதாக இல்லை.

கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்றவைக்கு கையடக்க கருவி இருப்பதால், யாரும், வாய்ப்பாடுபற்றி கவலை கொள்வது இல்லை.பத்தும், பதினாறும் எவ்வளவு என்று கேட்டால், இரு எண்களையும் மனதில் கூட்டிப்பார்ப்பதற்குப் பதிலாக உடனே கால்குலேட்டரை தேடிப்பார்த்து, அதன் மூலம் விடையை சொல்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.இதுபோன்ற காரணங்களால், எதையும் ஆழமாக கற்றுக்கொள்ளும் போக்கு குறைந்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

நமது மூதாதையர்கள், இந்தக் கல்வி முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தார்கள்.ராமாயணமாக இருந்தாலும், மகாபாரதமாக இருந்தாலும், மருத்துவ நூல்கள் என்றாலும், இன்னும் எந்தப் பாடம்என்றாலும் அவை செய்யுள் வடிவிலேயே உருவாக்கப்பட்டன.

மிக நுணுக்கமான கணக்குப் பாடத்தைக்கூட அவர்கள் செய்யுளாக ஆக்கி, அதை அப்படியே மனப்பாடம் செய்து மனதில் பதிய வைத்துக்கொண்டார்கள்.கணிதத் துறையில் உலகுக்கே முன்னோடியாக விளங்கிய நமது முன்னோர்கள், அனைத்து கணிதப் பாடங்களையும் கூடசெய்யுள் வடிவில் உருவாக்கி, அதன் மூலம் செய்த சாதனைகள் என்ன என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் நிகழ்த்திய அற்புதமான அறிவியல் சாதனைகளை எடுத்துக் கூறினால், இவற்றுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கும் அவல நிலைமைதான் உள்ளது.

இது மாற வேண்டும் என்றால், பழங்கால இந்திய அறிஞர்கள், ஒவ்வொரு துறையிலும் ஆற்றிய சாதனைகள், பள்ளிக்கூட மாணவர்களுக்கான இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டியது மிக அவசியம்.

10 comments:

  1. வரலாறு பாடத்தை வெறும் பாடமாக பார்பவர்களுக்குத்தான் அதில் இருக்கும் போரும் சம்பவம் மட்டும் தெரியும், அந்த போரின் மூலம் நமது வீரம், விடாமுயற்சி போன்றவையை எடுத்து கூறுவது தான் வரலாறு பண்டைகால அரசர்கள் ஆதரவினால் தான் புலவர்களும் அறிஞர்களும் வந்தனர் என்பதை அனைத்து வரலாற்று புத்தகமும் எடுத்து கூறுகிறது என்பதை மறுக்க வேண்டாம்.
    வரலாறு என்பது கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை எடுத்து கூறுவது தான் அதில் நீங்கள் கூறும் புலவர்களைப் பற்றி தமிழ் பாடத்திலும், அறிஞர்கள் கண்டுபிடிப்பாளர்கள் பற்றி அறிவியல் பாடத்தில் தான் படிக்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  2. வரலாறு பாடத்தை வெறும் பாடமாக பார்பவர்களுக்குத்தான் அதில் இருக்கும் போரும் சம்பவம் மட்டும் தெரியும், அந்த போரின் மூலம் நமது வீரம், விடாமுயற்சி போன்றவையை எடுத்து கூறுவது தான் வரலாறு பண்டைகால அரசர்கள் ஆதரவினால் தான் புலவர்களும் அறிஞர்களும் வந்தனர் என்பதை அனைத்து வரலாற்று புத்தகமும் எடுத்து கூறுகிறது என்பதை மறுக்க வேண்டாம்.
    வரலாறு என்பது கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை எடுத்து கூறுவது தான் அதில் நீங்கள் கூறும் புலவர்களைப் பற்றி தமிழ் பாடத்திலும், அறிஞர்கள் கண்டுபிடிப்பாளர்கள் பற்றி அறிவியல் பாடத்தில் தான் படிக்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. You are correct almost.

      Q: Why Kalviseithi wants science in History subject?

      A: You cannot insert material based on belief inside the Science books thats why. So let us try to understand the inclination towards ________ of this blogger.

      Delete
  3. கஜினி முகம்மது 17 முறை தோற்று 18வது முறை ஜெயித்தான் என்று மட்டுமே அறிய முடிகிறது 17 முறை அவனை அடித்து விரட்டியது யார் என்பதை வரலாறு சொல்வதில்லை

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அவர் வந்தது நாட்டை பிடிப்பதற்காக அல்ல. அக்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் சகஜம். பதினேழு முறையும் அவர் வெல்லவும் இல்லை தோற்கவும் இல்லை. அவர் வந்தது, செல்வத்தை கொள்ளையடிக்க மட்டுமே. பதினேழு முறையும் அவர் எராளமான பொருட்களை கொள்ளை அடித்து சென்றார் . அவற்றில் ஏராளமான சரித்திர சான்று மிக்க பொருட்களும் அடக்கம். உதாரணம் : சோமநாதர் கோயில் கதவுகள்.

    ReplyDelete
  6. அரசு பாடத்திட்டம் அமைத்தது அந்த அந்த வகுப்புக்குத்தான் நீங்கள் கூறுவது போல் அனைத்து தகவலும் தெரிந்து கொள்ள தான் ஆராய்ச்சி படிப்புகள் அனைத்தும் உள்ளது.

    ReplyDelete
  7. அரசு பாடத்திட்டம் அமைத்தது அந்த அந்த வகுப்புக்குத்தான் நீங்கள் கூறுவது போல் அனைத்து தகவலும் தெரிந்து கொள்ள தான் ஆராய்ச்சி படிப்புகள் அனைத்தும் உள்ளது.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. How much time you told history? no use...understand..
    come to practigal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி