உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தேர்வு வாரியம் குளறுபடி: பெண்ணுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2015

உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தேர்வு வாரியம் குளறுபடி: பெண்ணுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவு


உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) குளறுபடியை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண்வழங்கி உரிய உத்தரவைப் பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொட்டியம்மாள் தாக்கல் செய்த மனு விவரம்:வரலாறு பாடத்தில் எம்.ஏ., எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி. படித்துள்ளேன்.
போடிநாயக்கனூர் கல்லூரியில் தாற்காலிக விரிவுரையாளராக 1993 இல் 4 மாதங்களும், 2002 முதல் 2007 வரையிலும் பணியாற்றினேன். 2013 இல் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புவெளியிட்டது.அதில், ஓராண்டு விரிவுரையாளர் அனுபவத்துக்கு தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. அதன்பிறகு வெளியிட்ட திருத்த அறிவிப்பில், பட்டம் அல்லது பிஹெச்.டி. படித்துக் கொண்டிருக்கும்போது விரிவுரையாளராகப் பணியாற்றி இருந்தால் அதற்கு மதிப்பெண் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திருத்தத்தை எதிர்த்து சந்திரசேகரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த அறிவிப்பை ரத்து செய்தது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) தகுதி பட்டியல் அடிப்படையில் பணி அனுபவத்தை நிர்ணயிக்க உத்தரவிட்டது. இந்தப் பட்டியலின்படி எனக்கு 12 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 3 மதிப்பெண்களே வழங்கப்பட்டது. இதை ரத்து செய்து, மதிப்பெண்களை உயர்த்தி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இம்மனு விசாரணைக்கு வந்தபோது, யூஜிசி நிர்ணயித்த தகுதிகளில் 5 ஆவது அட்டவணைப்படி, 2006 ஆம் ஆண்டு முதல் அனுபவம் கணக்கிடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, பணி அனுபவம் தொடர்பான திருத்தத்தை டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது. மேலும், யூஜிசி நிர்ணயித்த தகுதிப் பட்டியலை பணி அனுபவத்துக்கான அளவீடாகத் தேர்வு வாரியம் பின்பற்றியுள்ளது. ஆனால், அதில் அனைத்து தகுதிகளும் ஒரே மாதிரியாக இருக்க, 4 ஆவது அட்டவணையில் 31.2.2002-க்கு முன்பு எம்.ஃபில். படித்திருக்க வேண்டும் என்ற ஒரு பகுதி மட்டும் அதிசயமாக விடுபட்டுள்ளது.

இதனால், 5 ஆவது அட்டவணை அடிப்படையில் 2006 லிருந்து பணி அனுபவத்தை தேர்வு வாரியம் கணக்கிட்டுள்ளது. மேலும், 4 ஆவது அட்டவணையில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது குறித்த மனுதாரரின் கேள்விக்கு டிஆர்பி விடையளிóக்கவில்லை. எனவே, 4 ஆவது அட்டவணையில் ஏற்பட்ட தவறை சரிசெய்து, மனுதாரருக்கு 2002ஆம் ஆண்டிலிருந்து பணி அனுபவம் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கி, 8 வாரங்களில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி