மன்னியுங்கள் மக்களே... இது எங்கள் வாழ்வாதாரம்!’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

மன்னியுங்கள் மக்களே... இது எங்கள் வாழ்வாதாரம்!’

தமிழகத்தை ஒவ்வொரு நாளும் பரபரக்கவைக்கிறது பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டம்.
சென்னை, திருச்சி, சேலம், மதுரை... என மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களின் மையமான இடங்களில் குழுக் குழுவாகப் பிரிந்துசென்று திடீர், திடீரென இவர்கள் நடத்தும் சாலை மறியலால் அரசு நிர்வாகம் பதறுகிறது. ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் சாலையை மறித்து காவல் துறையை நிலைகுலைய வைக்கிறார்கள். சென்னை, ராயப்பேட்டையில் பார்வையற்ற ஏழு பேர் ஒரு வாரத்தைக் கடந்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க... பள்ளிக் கல்வி இயக்குநரக வளாகத்தில் மேலும் ஏழு பேர் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். வரும் நாட்களில் போராட்டம், மாநிலம் முழுக்க நடைபெறும் என்கிறார்கள்.



இந்தப் போராட்டம் நடைபெறும் முறை, அதை அரசு கையாளும் விதம் பற்றி விவாதிப்பதற்கு முன், அந்த அப்பாவி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைதான் என்ன? மொத்தம் ஒன்பது கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். ஒன்பதுமே முக்கியமானவை; நியாயமானவை. போராட்டத்தில் தீவிரமாக இருந்த சிவக்குமார், அவர்களின் நிலைப்பாட்டை விவரிக்கிறார்.

''மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் அரசு வேலைவாய்ப்பை நம்பித்தான் படிக்கிறோம். தனியார் நிறுவனங்களில் எங்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது. அரசு உதவிபெறும் நிறுவனங்களில் மூன்று சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது முறையாக நிறைவேற்றப்படுவதும் இல்லை; அரசு அதைக் கண்காணித்து முறைப்படுத்துவதும் இல்லை. தமிழ்நாட்டில் 159 அரசு உதவிபெறும் கல்லூரிகள் இருக்கின்றன. சுமார் 8,000 அரசு உதவிபெறும் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் பாதி சிறுபான்மையினர் நடத்துபவை என வைத்துக்கொண்டாலும், மீதியுள்ள பள்ளி, கல்லூரிகளில் ஒரு நிறுவனத்துக்கு ஒரு பார்வையற்றப் பட்டதாரி என்ற விகிதத்தில் வேலை கிடைத்திருந்தாலும் இன்று நாங்கள் போராடும் நிலை வந்திருக்காது. இது ஆசிரியர் பணியிடங்களின் நிலை மட்டும்தான். இதேபோல 11 பல்கலைக்கழகங்களில் 91 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவையும் நிரப்பப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் ஏ, பி, சி, டி தேர்வுகளிலும் இதே நிலைதான்.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 1996-ம் ஆண்டில் இருந்து எங்களுக்கான காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்படிச் செய்யப்பட்டிருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு 9,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். இதில் சுமார் 3,000 பணியிடங்கள் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு வந்திருக்கும். ஆனால், மாநில அரசு அநீதியான ஓர் அரசாணையை வெளியிட்டு 2002-ம் ஆண்டில் இருந்துதான் கணக்கிடுவோம் என்றது. இப்போது, தான் வெளியிட்ட அரசாணையைத் தானே பின்பற்றாமல், 2007-ம் ஆண்டில் இருந்து காலிப் பணியிடங்களைக் கணக்கிடுகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை. தனது முந்தைய உத்தரவையும் மதிக்கவில்லை. பார்வைத் திறன் இல்லாதது எங்களுக்கா, தமிழக அரசுக்கா எனப் புரியவில்லை!

அதேபோல ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்து, நூற்றுக்கணக்கான பார்வையற்றப் பட்டதாரிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம். எங்களுக்கு சலுகை தர வேண்டாம். தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு காலம் தாழ்த்தாமல் வேலை வழங்குங்கள் என்றுதான் கேட்கிறோம்.

பி.எட்., மற்றும் எம்.எட்., படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி வேலை வழங்குவதும் தடைபட்டு நிற்கிறது. கல்லூரி அளவில் எடுத்துக்கொண்டால், உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வு எழுதிவிட்டு 100 பார்வையற்றப் பட்டதாரிகள் பல காலமாகக் காத்திருக்கிறார்கள். இதுவரை ஒரு முடிவும் தெரியவில்லை. இப்படி மொத்தம் ஒன்பது கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். எங்களுக்கு உதவி தேவை இல்லை; உரிமையைத்தான் கேட்கிறோம். அதைக் கொடுத்தால் எங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்களே பெற்றுக்கொள்வோம்'' என்கிறார்.

பார்வையற்ற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையைக் காலத்துக்கு ஏற்றாற்போல உயர்த்தி வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கைகளில் ஒன்று.

''இப்போது இளங்கலைப் படிப்புக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் ரூபாயும், முதுகலை படிப்புக்கு 13 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? விடுதிக் கட்டணமே 2,000, 3,000 ரூபாயைத் தாண்டிவிட்டது. அதேபோல தேர்வின்போது வாசிப்பாளருக்கு (sநீக்ஷீவீதீமீக்ஷீ) மாதத்துக்கு 600 ரூபாய் தருகிறார்கள். இது எந்த வகையிலும் போதுமானது இல்லை. பார்வை உள்ளவர் ஒருபக்கக் காகிதத்தில் எழுதுவதை நாங்கள் பிரெய்லி காகிதத்தில் எழுதும்போது மூன்று பக்கங்கள் ஆகும். சாதாரண காகிதம் ஒரு பேப்பர் ஒரு ரூபாய் என்றால், பிரெய்லி பேப்பர் அதைவிட மூன்று மடங்கு விலை அதிகம். பார்வையுள்ளவர் ஒரு பக்கத்தை எழுத செலவிடுவதைப்போல நாங்கள் மூன்று மடங்கு செலவிட வேண்டியிருக்கிறது. இது ஓர் உதாரணம்தான். இப்படி எங்கள் படிப்புக்கான ஒவ்வோர் உபகரணமும் வழக்கத்தைவிட  விலை அதிகம். அதனால்தான் உதவித்தொகையை இரட்டிப்பாக்கி தரக் கேட்கிறோம்'' என்கிறார் ராஜா என்கிற மற்றொரு பட்டதாரி.

சென்னையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்ல. காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை என அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் இதற்காகவே வந்திருக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருந்து போராட்டங்களில் பங்கெடுக்கிறார்கள். மிகவும் துல்லியமாக, எந்தவித பிசிறும் இல்லாமல், திட்டமிடப்பட்ட வழிமுறையில் நடக்கிறது இவர்களின் போராட்டம்.

'பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்’ என்பது இவர்களின் அமைப்புப் பெயர். இதன் தலைமை  நிர்வாகிகள், ஒவ்வொரு நாள் இரவிலும் அடுத்த நாள் நடவடிக்கைக் குறித்த விவரங்களை முடிவுசெய்கிறார்கள். எந்த இடம், எத்தனை பேர், போராட்ட வடிவம், முழக்கம் என்ன, ஊடகங்களிடம் என்ன பேச வேண்டும், யார் பேச வேண்டும், கைதானால் என்ன செய்வது... என அனைத்தும் தீர்மானமாக முடிவுசெய்யப்படுகின்றன. ஒருவர், யார் யாருக்குத் தகவல்கள் சொல்ல வேண்டும் என்பதும்கூடத் திட்டமிடல்தான். சரசரவென மின்னல் வேகத்தில் அனைவருக்கும் தகவல்கள் பரவுகின்றன. அடுத்த நாள் காலையில் எல்லோரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு அசைந்து நகர்ந்துவருகின்றனர். போக்குவரத்து நெரிசலும், வெயிலின் தாக்கமும் எப்படி இருந்தாலும் அப்படியே சாலையில் அமர்கிறார்கள். காவல் துறை வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், அடித்து இழுத்தாலும் ஏற்கெனவே கூறப்பட்ட தலைமையின் உத்தரவுக்குச் சிறிதும் பிசகாமல் நடந்துகொள்கின்றனர். அவர்களுக்குப் பார்வை இல்லாமல் இருக்கலாம். ஆனால், போராட்டத்தின் முடிவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அவர்கள் முன்கூட்டியே முடிவுசெய்கின்றனர்.ஆனால், அரசின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையைத்தான் அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

'நாங்கள் நியாயமாகப் போராடுகிறோம். எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. ஆனால், எங்களை ஒடுக்கவரும் ஒவ்வொரு காவலர் கையிலும் ஆயுதம் இருக்கிறது. கிண்டியில் நடந்த போராட்டத்தில் பார்வையற்ற நான்கு பெண்களுக்குக் கடுமையான அடி. மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க வேண்டிய அளவுக்கு அடித்தார்கள். பல இடங்களில் போராடும் எங்களைக் கயிற்றைக்கொண்டு சுற்றிவளைத்து இறுக்குகிறார்கள். கண் தெரியாததால் கயிற்றில் கால்களும், உடலும் சிக்கி ஒருவருடன் ஒருவர் மோதித் தடுமாறி கீழே விழுகிறோம். கயிற்றால் குரல்வளை இறுக்கப்பட்டு மூச்சு திணறுகிறது. கண்களை கயிறு அழுத்துகிறது. இப்படி கயிற்றால் இறுக்கப்பட்டு ரேவதி என்கிற பெண்ணுக்கு வலிப்பு வந்துவிட்டது. எதற்காகக் கயிற்றைக்கொண்டு சுற்றிவளைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. திருச்சியில் நடந்த போராட்டத்தில் பார்வையற்ற ஐந்து பேரை அழைத்துச் சென்று 100 கி.மீ தள்ளி ஒரு காட்டில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அங்கே உள்ள காவல் துறையினர் மறுபடியும் அவர்களைப் பழைய இடத்திலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். கடந்த ஆண்டு போராடியபோது, சென்னைக் காவல் துறையினர் இப்படி ஊருக்கு வெளியே இறக்கிவிடும் கொடுமையை நிகழ்த்தினார்கள். இவர்களிடம் கற்றுக்கொண்டு இப்போது திருச்சி காவல் துறையினர் இப்படிச் செய்திருக்கிறார்கள். எங்களின் பார்வையற்ற நிலையை அரசும் காவல் துறையும் பயன்படுத்திக்கொள்கிறது.

மற்றபடி திடீர், திடீரென சாலை மறியல் செய்வது எங்களுக்கும் விருப்பம் இல்லாத ஒன்றுதான். சாலை மறியல் போன்ற போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை வேறு யாரையும்விட நாங்கள் நன்றாக உணர்கிறோம். ஆனால், எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்கள் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. உச்ச நீதிமன்றம் வரை அதை உறுதிபடுத்தி இருக்கிறது. ஆனால், அரசு தொடர்ந்து உதாசினம் செய்கிறது; எங்கள் குரலைக் கேட்கக்கூட மறுக்கிறது. அதனால் சாலை மறியல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பரபரப்புக்காக, புகழ்வேண்டி நாங்கள் சாலையில் வந்து அமரவில்லை. இது எங்கள் வாழ்வாதாரப் பிரச்னை’ என்கிறார்கள்.

இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்... மாற்றுத்திறனாளிகளிடம் கரிசனத்துடன் நடந்துகொள்ள காவல் துறைக்கு தமிழக அரசு கற்றுக்கொடுக்க வேண்டும். கிரிமினல்களுக்குப் பாதுகாப்பு பந்தோபஸ்து அளித்துக்கொண்டு, இயலாதவர்களிடம் வீரத்தைக் காட்டுவதை நிறுத்திக்கொண்டு, நேர்மையுடன் போராடும் அவர்களிடம் நேர்மையாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!

7 comments:

  1. சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. தற்போதுள்ள கொடுமைகளை காணும் போது "மஞ்சள் துண்டு காரர் " அருமை தெரிகிறது .... புரிகிறது

      நண்பரே ..
      தஞ்சையில் ஒரு பொம்மை உள்ளதாம் . ஆனால் "அது " தற்போது சென்னையில் உள்ளதாம்

      Delete
  2. govt should give appointment who passed in spl tet humanity mannaer

    ReplyDelete
  3. காவல்துறை தங்களின் பலத்தை அவர்களிடம் காட்டவேண்டிய அவசியமே இல்லை.

    THURSDAY, 19 MARCH 2015
    திரு.வீரமணி, திரு. பழனியப்பன், திருமதி. வளர்மதி ஆகிய மூன்று தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் வாபஸ் என்ற செய்தி தவறாக பதியப் பட்டதா?? என்ன உண்மை நிலவரம் என்று புரியவில்லை.

    எதுவாக இருந்தாலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை.

    ReplyDelete

  4. இவர்கள் அம்மாவை மட்டும் காப்பாற்ற போராடலம். உரிமைக்கும், வாழ்வுக்கும் போராடிணாரல் இப்படிதாண்முடிவு. இதுதான் அரசின் கொள்கை முடிவு. இப்போது அரசன்/ அரசி க்காக மக்கள் வாழ வேண்டுமாம்.

    ReplyDelete
  5. "பார்வையற்ற ஆசிரியர்கள் தங்கள் பிரச்சினைக்காக வீதியில் இறங்கி போராடுகின்றனர் ஆனால் பார்வை உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் ஆசிரியர்களாக பணி புரிய போகும் ஆசிரிய சகாக்கள் மௌனம் காக்கின்றனர்..! உண்மையில் இது கொஞ்சம் வருத்தப்படக்கூடிய விஷயம் ஆசிரிய சகாக்களே..! சிந்திப்பீர் செயல்படுவீர்..!

    ReplyDelete
  6. Poor tamilnadu government & tamilnadu police

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி