இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு: வெளிப்படைத்தன்மைக்கு ஆவன செய்யப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு: வெளிப்படைத்தன்மைக்கு ஆவன செய்யப்படுமா?


மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை பகிரங்கப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய தொழிலாளர் நலத் துறையின் கீழ் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 11 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை கே.கே.நகரில் 2013-14-ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 100 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் வீதம் கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக மொத்தம் 200 பேர் படித்து வருகின்றனர்.மாணவர் சேர்க்கை உண்டு: நிதிச் சுமை காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும்இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தப் போவதில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஎஸ்ஐ நிறுவனம் முடிவு செய்தது. மாணவர்களின் போராட்டத்தையடுத்து, மாணவர்களின் நலன் கருதி தமிழகம் உள்பட அனைத்து இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளிலும் நிகழ் கல்வி ஆண்டிலும் (2015-16) மாணவர் சேர்க்கையைத் தொடர இஎஸ்ஐ நிறுவனம் முடிவு செய்துகுறிப்பாணையை அனுப்பியுள்ளது.எவ்வளவு எம்.பி.பி.எஸ். இடங்கள்? தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கே.கே. நகரில் மட்டுமே இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இந்தக் கல்லூரி செயல்படுவதால், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஆண்டுதோறும் நடத்தும் கலந்தாய்வுப் பட்டியலில் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களின் பட்டியலில் மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி இடம்பெறுவது வழக்கமாக உள்ளது.சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களில், 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் (65 சதவீதம்) கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்ப சமர்ப்பிக்கப்படுகின்றன. 15 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள 20 எம்.பி.பி.எஸ். இடங்கள்(20 சதவீதம்) தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு என ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.சர்ச்சை என்ன? சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி அரசின் கலந்தாய்வுக்கு அளிக்கும் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில்சேரும் மாணவர்களின் பெயர் இணையதளத்தில் பட்டியலிடப்படுகிறது; இதே போன்று அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேரும் மாணவர்களின் பெயரை மத்திய சுகாதாரத் துறை பட்டியலிடுகிறது.ஆனால், தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படுவதாகக் கூறும் 20 எம்.பி.பி.எஸ். இடங்களில் (20 சதவீதம்) சேரும் மாணவர்களின் பெயர், அவர்களது குடும்ப விவரம் ஆகியவை குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மருத்துவக் கல்வியாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களில் சேரும் மாணவர்கள் குறித்த விவரம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கோ அல்லது தமிழ்நாடு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கோ சமர்ப்பிக்கப்படுவதில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளிலும் இத்தகைய ஒதுக்கீட்டுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை.மாறாக, இஎஸ்ஐ நிர்வாகமே தரவரிசைப் பட்டியல் தயாரித்து, 20 சதவீத இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த தரவரிசைப் பட்டியல் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்பதே மருத்துவக் கல்வியாளர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி