கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2015

கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?


பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று வர, அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி வி.ரீனா சார்பில் அவரது தந்தை என்.வீரண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகள் ரீனாநிகழ் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 (உயிரியல் - கணிதப்பாடப்பிரிவு) படிக்கிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.மாநிலம் முழுவதும் கடந்த 18-ஆம் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. அதில் எனது மகளும் பங்கேற்றார். இந்த நிலையில், ஒசூரில் கணிதத்தேர்வு வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் புகைப்படம் எடுத்து பலருக்கு அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர் என கடந்த 22-ஆம் தேதிசெய்தி வெளியானது.இதையடுத்து முறைகேடு செய்ததாக கல்வித் துறையைச் சேர்ந்த 118 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது. தேசிய அளவில், மாநில அளவில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு தகுதியானவர், தகுதியற்றவர் என்பது ஒரு மதிப்பெண்ணில் முடிவு செய்யப்படுகிறது.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான கட் -ஆப் மதிப்பெண்ணை விட ஒரு மாணவர் அரை மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தால் அவருக்கு தனியார் கல்லூரிகள் மிகப்பெரிய தொகையை நிர்ணயிக்கின்றன.சமூக வலைதளத்தில் வினாத்தாள் வெளியானதால் நன்றாகப் படித்து தேர்வு எழுதும் மாணவர்களை இது பாதிக்கும். அதனால், கணிதப் பாடத்துக்கு கண்டிப்பாக மறு தேர்வுநடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கடந்த 22-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த எந்தவொரு எண்ணமும் இல்லை எனகல்வித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார்.எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த கல்வித் துறை இயக்குநருக்கு உத்தர விட வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையின்படி பிளஸ் 2 தேர்வின் கணிதப் பாடத்துக்கு ஏன் மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கூடாது என வரும் ஏப்ரல்7-ஆம் தேதிக்குள் அரசு வழக்குரைஞர் விளக்கம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் எனஉத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி